மொழிவாரி சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவாரா சீமான்?
விஷ்ணு, gmail.comசீமான் பேசும் தமிழ் தேசிய அரசியல், இங்கு வசிக்கும் தமிழ் அல்லாத பிற மொழிகள் பேசும் மக்களுக்கு எதிரானது என்ற கருத்து உள்ளது. அவரது சமீபத்திய பிரசாரங்களில், தமிழகத்தில் வாழும் மொழிவாரி சிறுபான்மையினரை நேரடியாக தாக்கி பேசியதாக தெரியவில்லை. ஆனால், அவருடைய கட்சியினரும் ஆதரவாளர்களும் ஆங்காங்கே வெறுப்பை பரப்பி தான் வருகின்றனர். திராவிடத்தை எதிர்ப்பது என்பது வேறு, தெலுங்கர்களை எதிர்ப்பது என்பது வேறு என்ற அடிப்படை அவர்களுக்கு புரியவில்லை. தமிழகத்தில் தெலுங்கு, சவுராஷ்டிரா, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, உருது மொழி பேசும் மக்கள் தமிழர்களோடு கலந்து வாழ்கின்றனர். இவர்களில் அதிகமாக இருப்போர் தெலுங்கர்கள். பிற மொழி பேசுபவர்களில், மாநில எல்லையில் வாழ்வோரின் நிலை வேறு, தமிழகத்தின் மையப் பகுதிகளில் வாழ்வோரின் நிலை வேறு. எல்லையில் வாழ்வோருக்கு ஓரளவேனும் தங்களுடைய மொழி, கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க போதுமான சூழல் உள்ளது. ஆனால் மையப் பகுதியில் வாழ்வோருக்கு அத்தகைய நிலை இல்லை. குறைந்தபட்சம் 500 ஆண்டுகளாக இங்கு வாழும் இவர்கள், தமிழர்களாகவே மாறிவிட்டனர். தங்கள் தாய்மொழியை வீட்டில் மட்டுமே பேசுகின்றனர். இவர்கள் வாழ்வியல் மொழியாக தமிழே உள்ளது. ஒட்டுமொத்த தமிழக பண்பாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகவே இணைந்து விட்டனர். இவர்களை வந்தேறிகளாக காட்டி, தமிழர்களுக்கு எதிரானவராக சித்தரிப்பது என்பது தமிழ் மக்களிடையே எடுபடாது. மொழிவாரி சிறுபான்மையினரில், தெலுங்கர்கள் தவிர கணிசமான பகுதியினர் முற்காலத்தில், தேசிய கட்சியான காங்கிரசுக்கும், தற்காலத்தில் பா.ஜ.,விற்கும் ஆதரவு தருவோராக இருக்கின்றனர். ஆனால், தமிழ் தேசியவாதிகளால் விமர்சிக்கப்படும் போது, தேசிய கட்சிகளில் இருந்து எந்தவிதமான ஆதரவும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, மறைமுகமாக தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் போக்கு பா.ஜ.,விடம் உள்ளதோ என்ற சந்தேகம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகம், தி.மு.க.,விலிருந்து விலகி பா.ஜ.,விற்கு ஆதரவு தர நினைப்போரை மறுபடியும் தி.மு.க.,விற்கு தள்ளி விடுவதாக அமைந்துவிடும். இவர்களை பற்றி அவதுாறுகளை பரப்பும் தமிழ் தேசியவாதிகளை சீமான் கண்டிப்பதில்லை என்றாலும், தனது வேட்பாளர் பட்டியலில் இவர்களுக்கு இடம் தராமல் இல்லை. அ.தி.மு.க., - தி.மு.க., என இரண்டு கட்சிகளிலும் சவுராஷ்டிரர்களுக்கு இந்த முறை இடமில்லை. ஆனால், மதுரை தெற்கு, கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக சவுராஷ்டிர வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். இதுபோக தெலுங்கு வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாய்ப்பு இல்லை ராஜா