கிராமப்புற தமிழகம் இலவசங்களை விரும்பவில்லை
இந்திய அரசியலில் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு, தமிழக கிராமங்களை பீஹார், ராஜஸ்தான் அல்லது கர்நாடகாவில் உள்ள கிராமங்களை போல கற்பனை செய்துகொள்வது தான்.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே, தமிழகம், 49 சதவீதம் நகர்ப்புறமாகவும், 51 சதவீதம் கிராமப்புறமாகவும் உருமாறிவிட்டது. ஒட்டுமொத்த இந்தியாவில் 31 சதவீதம் மட்டுமே நகர்ப்புறம். கர்நாடகா 38.7 சதவீதம், பீஹார் வெறும் 11 சதவீதம் மட்டுமே நகர்ப்புறங்களை கொண்டுள்ளன.
தமிழகத்தின் மக்கள் தொகையை, நகர்ப்புறம் -கிராமப்புறம் என பிரித்தால் கிட்டத்தட்ட சரிபாதி என்றாலும், கிராமப்புறங்களில் தான் அதிக தொகுதிகள் உள்ளன. உள்ளபடியே, கிராமப்புற தொகுதிகள் - 154; நகர்ப்புற தொகுதிகள் - 50; இடைநிலை தொகுதிகள் -- 30. கிராமப்புற தொகுதிகள் அதிகம் இருந்தாலும், அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நகர்ப்புற மக்கள் தான். அவர்களுடன் போட்டிபோட வேண்டிய கட்டாயத்தில் கிராமப்புற மக்கள் இருக்கின்றனர்.
மொத்த இடங்களில், நகர்ப்புற தொகுதிகள் 21 சதவீதம் தான் என்றாலும், அமைச்சரவையில், 41 சதவீதம் பேர் நகர்ப்புற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 2026- - 27ம் நிதி ஆண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு 28,867 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நகர்ப்புற வளர்ச்சிக்கு, 35,773 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு மட்டும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
தொகுதிகள் அதிகம் இருந்தும், மக்கள் தொகையில் சரிசமமாக இருந்தும், கிராமப்புற வாக்காளர்களை இரண்டாம்பட்சமாக தான் கட்சிகள் கருதுகின்றன. இது, கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் அப்பட்டமாக தெரிகிறது.
சுற்றுச்சூழல் ரீதியாக, கிராமப்புற வாக்காளர்களின் பிரதான தேவை, தண்ணீர். தமிழகத்தில் உள்ள 385 நிலத்தடி நீர் தொகுதிகளில், 142 பகுதிகள் கடுமையாக சுரண்டப்பட்டவை. 33 பகுதிகள் கவலைக்கிடமான நிலையிலும், 57 பகுதிகள் குற்றுயிராகவும் உள்ளன. தார் பாலைவனத்தை கொண்ட ராஜஸ்தானை விட, இந்தியாவிலேயே அதிக நீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தின் தனிநபர் நீர் இருப்பு வெறும் 750 கன மீட்டர் மட்டுமே. இது, தேசிய சராசரியான 1,544 கன மீட்டரில் சரிபாதி.
கிடைப்பதே குறைவு, அதிலும் விவசாயத்திற்கு குறைவாகிக் கொண்டே போகிறது. நகரமயமாக்கலால் விவசாயத்திற்கான நீர் பங்கீடு கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. 2010ல், தமிழகத்தின் மொத்த நீர் இருப்பில் 90 சதவீதம் பாசனத்திற்குப் பயன்பட்டது; ஆனால், 2020ல் அது 60 சதவீதமாக குறைந்துவிட்டது. மீதமுள்ள நீர், தொழிற்சாலைகள் - -26%, வீட்டு உபயோகத்திற்கு -- 14% என எடுத்துக் கொள்ளப்படுகிறது. சென்னையின் அசுர வளர்ச்சியே, விவசாயத்திற்கான நீரை அதிக அளவில் உறிஞ்சுகிறது.
தமிழகத்தின் மொத்த உற்பத்தியில், வேளாண்மையின் பங்கு வெறும் 13 சதவீதம் மட்டுமே. ஒருபுறம் தொழில் வளர்ச்சியால் வேளாண்மையின் பங்கு குறைவது இயற்கையானது தான் என்றாலும், மறுபுறம், அது தான் இன்றளவும் கிராமப்புறங்களில் 70 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதாவது, தமிழகத்தில், கிட்டத்தட்ட 35 சதவீத மக்கள் 13 சதவீத உற்பத்தி மீது தான் உரிமை கோர முடிகிறது. நகரத்திற்கும்- கிராமத்திற்கும் இடையேயான தனிநபர் வருமானத்தில் பெரும் பாகுபாட்டையே இது காட்டுகிறது.
இந்த இடைவெளியை உணரும் கிராமப்புற வாக்காளர், விளைபொருட்களுக்கான விலையை மட்டுமே எதிர்பார்ப்பதில்லை. மாவட்ட தலைநகரங்களில் தொழிற்சாலை வேலைகள், பால் கொள்முதல், மீன்பிடி உள்கட்டமைப்பு, சேமிப்புக் கிடங்குகள், சிறு குறு தொழில் கடன்கள் என, நிலையான பொருளாதார வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றனர்.
கிராமப்புறத் தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம் 73.5 சதவீதம். இது, தேசிய சராசரியை விட மிக அதிகம். ஸ்மார்ட்போன் மூலம் சமூக ஊடகங்களில் அரசியலை பின்தொடரும் இந்த அறிவார்ந்த தலைமுறைக்கு, அரசு திட்டங்கள் எங்கே முடங்குகின்றன என்பது நன்றாகவே தெரியும். அதே நேரம், வாழ்க்கை தரத்தில் என்ன சாத்தியம் என்றும் தெரியும்.
தமிழகத்தில், 12,500க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைக் கொண்ட வலுவான நிர்வாக கட்டமைப்பு இருந்தாலும், சேவை வழங்குவதில் உள்ள இடைவெளிகள் குறித்து, எந்த தேர்தல் அறிக்கையும் பேசுவதில்லை. அரசு சேவையில் உள்ள இந்த இடைவெளிகள், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை பாதிக்கின்றன. இதை அவர்கள் நன்றாக உணர்கின்றனர்.
நகரங்களின் வளர்ச்சியைக் காட்டி கிராமப்புற யதார்த்தங்களை மூடிமறைக்க முடியாது. ஒரு கிராமப்புற வாக்காளருக்கு, வளர்ச்சி என்பது கவர்ச்சியான விளம்பரப் பலகைகளில் இல்லை; அது, நம்பகமான பேருந்து சேவை, தரமான ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தடையற்ற குடிநீர் வினியோகத்தில் தான் உள்ளது என்று நன்கு தெரியும்.
தமிழகத்தின் கிராமப்புற வாக்காளர்கள் ஒரு விஷயத்தை மிக நுட்பமாக உணர்த்துகின்றனர். அது, 'எங்களைக் காப்பாற்ற வேண்டிய பின்தங்கியவர்களாக கருதாதீர்கள்' என்பது தான். அவர்கள் எதிர்பார்ப்பது இலவசங்களை வீசும் அரசை அல்ல; முடிவற்ற அடையாள அரசியலையும் அல்ல. தரமான சாலைகளையும், தடையற்ற குடிநீரையும், வேலைவாய்ப்பையும் வழங்கி தங்களை சமமாக மதிக்கும் திறமையான ஒரு அரசை!
bsubra@gmail.com
Advertisement
தமிழகத்தின் கிராமப்புற வாக்காளர்கள் எதிர்பார்ப்பது இலவசங்களை வீசும் அரசை அல்ல முடிவற்ற அடையாள அரசியலையும் அல்ல. தரமான சாலைகளையும், தடையற்ற குடிநீரையும், வேலைவாய்ப்பையும் வழங்கி தங்களை சமமாக மதிக்கும் திறமையான ஒரு அரசை இது உண்மை என்றால் அதற்க்கு சாத்தியமான ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் மட்டுமே.
அவர்கள் கட்டிய கோவிலுக்கு உள்ளேயே அனுமதி, மரியாதை இல்லை. கொடுப்பேளா?

தமிழக கிராமப்புற மக்கள் முக்கால்வாசி பேருக்கு பாஜக என்ற கட்சியையே தெரியாது!