மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டது தி.மு.க.,
பொதுமக்கள், தங்கள் அன்றாட வாழ்க்கையை சுமுகமாக நடத்திச் செல்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு சட்டம் - ஒழுங்கு நிர்வாகம் தான் அடிப்படை. அது நன்றாக நிர்வகிக்கப்படும் போது தான், மற்ற அனைத்தும் சாத்தியம். அதில், சறுக்கும் அரசு, வேறு எந்த சாதனையை செய்தாலும் அதை பெரிதாக கருத முடியாது.
இந்த தேர்தலில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை எதிர்க்கட்சிகள் பிரசார ஆயுதமாக எடுத்துள்ளன. அதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கையோ, ஜெயராஜ் -- பென்னிக்ஸ் கொடூர காவல் நிலைய மரணங்களையோ, துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையோ மறக்க முடியாது. அதைவிட கடந்த ஐந்தாண்டுகள் மேலாக இருந்தனவா?
'திராவிட மாடல்' ஆட்சியில் குற்றங்கள் குறையவில்லை.
குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு, 'விழிப்புணர்வு அதிகரித்ததே காரணம்' என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வே இப்போது தான் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி புரிந்துகொள்வது?
பட்டியல் சமூகத்தினரின் ஓட்டுகளே தி.மு.க., ஆட்சி அமைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தன என்று ஓர் இதழ் தெரிவித்தது. ஆனால், அதே மக்களின் மீது தான் நடப்பு ஆட்சியில் தினமும் ஐந்து தாக்குதல்கள் நடக்கின்றன.
புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடூரம்; நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னதுரை சக மாணவர்களாலேயே கொடூரமாக வெட்டப்பட்டது; மேல்பாதி கோவில் நுழைவு தாக்குதல்; சமூக செயற்பாட்டாளர் பார்த்திப ராஜா கொலை; கவின் ஆணவப் படுகொலை; தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் இழிவுபடுத்தப்படுவது என பட்டியல் நீள்கிறது.
அரசு சொல்வது போலவே, வழக்குகள் பதிவாவதில் தமிழகம் முன்னிலையில் இருந்தாலும், தண்டனை பெற்றுத் தருவதில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. 2021 முதல் 2023 வரை வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் தண்டனை விகிதம், வெறும் 10 முதல் 12.2 சதவீதம் மட்டுமே இருந்தது. 100ல் 12 வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு கிடைக்கிறது.
குற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், இதுவரை இல்லாத அளவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. மறுபுறம், கள்ளச்சாராய மரணங்கள் அரசை உலுக்கியுள்ளன.
கடந்த 2024 ஜூன் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். இதற்கு முன்பாகவே, மரக்காணம் மற்றும் மதுராந்தகத்தில் 21 பேர் பலியாகியிருந்தனர். நிர்வாகக் கோளாறுகளை மறைக்க உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி அரசு தப்பித்துக் கொண்டது.
பட்டப்பகலில் நடக்கும் கூலிப்படை கொலைகளும், ரவுடிகள் எந்த பயமுமின்றி வலம் வருவதும், சமூக வலைதளம் வாயிலாக வன்முறையை துாண்டுவதும் சாதாரணமாகிவிட்டன. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம்.
அ.தி.மு.க., பிரமுகர்கள் பார்த்திபன், பாடியநல்லுார் - 2023 மற்றும் செந்தில்குமார், மதுரை - 2026 ஆகிய படுகொலைகள் மக்களிடையே ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தியது என்றால், 2022ல் கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு, மாநிலத்தின் உளவுத்துறைத் தோல்வியையே சுட்டிக்காட்டியது.
குற்றவாளிகளின் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருக்க, காவல் துறை மீதே நம்பிக்கை குறையும் வகையில் நடக்கும் 'லாக்கப்' மரணங்கள் தொடர்கதையாக உள்ளன. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில அரசின் அறிக்கைகளின்படி, 2021 முதல் 2026 வரை நிகழ்ந்த காவல் மற்றும் சிறைத்துறை மரணங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 298. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு, தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறைக்கு எப்போது ஜனநாயக பண்பை கற்றுக் கொடுக்கும்?
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - 2022, தேனி அரசு பொறியியல் கல்லுாரி மாணவர் விக்னேஷ் மரணம் - 2025, விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுத் துடிதுடிக்கக் கொல்லப்பட்ட சம்பவம் - 2026 ஆகியவை, கல்வி நிலையங்களிலும் சமூகத்திலும் உள்ள பாதுகாப்பற்ற சூழலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
ஒரு மாநிலத்தில் நடக்கும் குற்றம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது சமூக இயக்கம் மற்றும் அரசின் நிர்வாக திறனின் வெளிப்பாடு. கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த குற்றங்கள், அரசின் நிர்வாக திறனின்மையையும், சமூகத்தில் சீர்கேடு வேகமாகி இருப்பதையும் காட்டுகின்றன.
தேர்தல் நேரத்தில் அறிவித்த கவர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதிலும், அதனால் ஏற்படும் கடன் சுமையை சமாளிப்பதிலுமே அரசு அதிக கவனம் செலுத்துகிறது. அதனால், மக்களுக்கு பாதுகாப்பான சூழலையும், பாதுகாப்பான உணர்வையும் கொடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்