Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மொழிவாரி சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவாரா சீமான்?

 மொழிவாரி சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவாரா சீமான்?

விஷ்ணு, venkat96balan@gmail.com


சீமான் பேசும் தமிழ் தேசிய அரசியல், இங்கு வசிக்கும் தமிழ் அல்லாத பிற மொழிகள் பேசும் மக்களுக்கு எதிரானது என்ற கருத்து உள்ளது. அவரது சமீபத்திய பிரசாரங்களில், தமிழகத்தில் வாழும் மொழிவாரி சிறுபான்மையினரை நேரடியாக தாக்கி பேசியதாக தெரியவில்லை.

ஆனால், அவருடைய கட்சியினரும் ஆதரவாளர்களும் ஆங்காங்கே வெறுப்பை பரப்பி தான் வருகின்றனர். திராவிடத்தை எதிர்ப்பது என்பது வேறு, தெலுங்கர்களை எதிர்ப்பது என்பது வேறு என்ற அடிப்படை அவர்களுக்கு புரியவில்லை.

தமிழகத்தில் தெலுங்கு, சவுராஷ்டிரா, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, உருது மொழி பேசும் மக்கள் தமிழர்களோடு கலந்து வாழ்கின்றனர். இவர்களில் அதிகமாக இருப்போர் தெலுங்கர்கள். பிற மொழி பேசுபவர்களில், மாநில எல்லையில் வாழ்வோரின் நிலை வேறு, தமிழகத்தின் மையப் பகுதிகளில் வாழ்வோரின் நிலை வேறு.

எல்லையில் வாழ்வோருக்கு ஓரளவேனும் தங்களுடைய மொழி, கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க போதுமான சூழல் உள்ளது. ஆனால் மையப் பகுதியில் வாழ்வோருக்கு அத்தகைய நிலை இல்லை. குறைந்தபட்சம் 500 ஆண்டுகளாக இங்கு வாழும் இவர்கள், தமிழர்களாகவே மாறிவிட்டனர்.

தங்கள் தாய்மொழியை வீட்டில் மட்டுமே பேசுகின்றனர். இவர்கள் வாழ்வியல் மொழியாக தமிழே உள்ளது. ஒட்டுமொத்த தமிழக பண்பாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகவே இணைந்து விட்டனர். இவர்களை வந்தேறிகளாக காட்டி, தமிழர்களுக்கு எதிரானவராக சித்தரிப்பது என்பது தமிழ் மக்களிடையே எடுபடாது.

மொழிவாரி சிறுபான்மையினரில், தெலுங்கர்கள் தவிர கணிசமான பகுதியினர் முற்காலத்தில், தேசிய கட்சியான காங்கிரசுக்கும், தற்காலத்தில் பா.ஜ.,விற்கும் ஆதரவு தருவோராக இருக்கின்றனர். ஆனால், தமிழ் தேசியவாதிகளால் விமர்சிக்கப்படும் போது, தேசிய கட்சிகளில் இருந்து எந்தவிதமான ஆதரவும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.

திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, மறைமுகமாக தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் போக்கு பா.ஜ.,விடம் உள்ளதோ என்ற சந்தேகம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகம், தி.மு.க.,விலிருந்து விலகி பா.ஜ.,விற்கு ஆதரவு தர நினைப்போரை மறுபடியும் தி.மு.க.,விற்கு தள்ளி விடுவதாக அமைந்துவிடும்.

இவர்களை பற்றி அவதுாறுகளை பரப்பும் தமிழ் தேசியவாதிகளை சீமான் கண்டிப்பதில்லை என்றாலும், தனது வேட்பாளர் பட்டியலில் இவர்களுக்கு இடம் தராமல் இல்லை.

அ.தி.மு.க., - தி.மு.க., என இரண்டு கட்சிகளிலும் சவுராஷ்டிரர்களுக்கு இந்த முறை இடமில்லை. ஆனால், மதுரை தெற்கு, கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக சவுராஷ்டிர வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். இதுபோக தெலுங்கு வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.


எனவே, ஆங்காங்கே சில சவுராஷ்டிர அமைப்புகள் சீமான் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. விஜய் கட்சி சார்பாகவும் மதுரை தெற்கில் ஒரு சவுராஷ்டிர வேட்பாளர் தான் உள்ளார். இது, எண்ணிக்கை சிறுபான்மையாக உள்ள ஜாதிகளுக்கும், மொழிவாரி சிறுபான்மையினருக்கும் நல்ல விஷயம் தான். விஜய்க்கு கிடைக்கும் இந்த ஆதரவு, சீமானுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

நாம் தமிழர் கட்சி வளர்ந்தால் தமிழகத்தில் தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுமோ என்ற அச்சம் மொழிவாரி சிறுபான்மையினரிடம் உள்ளது.

சீமான், மொழிவாரி சிறுபான்மையினரை வேட்பாளர்களாக அறிவித்த போதிலும், அவர்களுடைய முழு ஆதரவும் கிடைக்காமல் போவதற்கு, சில தமிழ் தேசியவாதிகளின் செயல்பாடுகள் முக்கிய காரணம் ஆகிவிடும்.

தவிர, தமிழ் தேசிய கொள்கை என்பது இந்திய தேசியத்திற்கும் ஹிந்து மதத்திற்கும் எதிரானது என்ற கருத்து உள்ளது. அதை மெய்ப்பிக்கும் படியாக தான் தமிழ் தேசியவாதிகளின் பேச்சுகளும் உள்ளன.

தேர்தலை ஒட்டி, மதுரையில் சவுராஷ்டிர சமூகம் ஏற்பாடு செய்திருந்த அரசியல் மாநாட்டில் கலந்து கொண்ட சீமான், சவுராஷ்டிர சமூகம் பற்றி ஓரிரு வரிகள் மட்டும் பேசிவிட்டு, இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்துகளையே அதிகம் பேசினார்.

தனது கட்சியின் கொள்கை, ஹிந்து மதத்திற்கும் இந்திய தேசியத்திற்கும் மொழிவாரி சிறுபான்மையினருக்கும் எந்த விதத்திலும் அச்சுறுத்தலானது அல்ல என்ற நிலைப்பாட்டிற்கு சீமான் வருவாரேயானால், நிச்சயமாக மொழிவாரி சிறுபான்மையினரின் ஆதரவு அவருக்கு கிடைக்கும். ஆனால், அவருடைய நிலைப்பாடு மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ஒருவேளை சீமானின் நிலைப்பாடு மாறுமேயானால், மொழிவாரி சிறுபான்மையினரின் ஆதரவுடன் பிராமணர்களின் ஆதரவும் நிச்சயமாகக் கிடைக்கும். பெரிய கட்சிகள் பிராமணர்களை கைவிட்ட நிலையில், ஆறு வேட்பாளர்களை நிறுத்தி, சிறிதாக பிராமணர்கள் ஆதரவை பெற்றுவிட்டார் சீமான். தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம் பேசும் பிராமணர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

எனவே, தனது நீண்டகால அரசியல் பயணத்தில் இந்திய, ஹிந்து மத, மொழி சிறுபான்மை இன மக்கள் மீதான வெறுப்புகளை விட்டு வருமேயானால், நாம் தமிழர் கட்சிக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

Advertisement

ஏப் 18, 2026 08:02 am

வாய்ப்பு இல்லை ராஜா

Reply Rate this