/ கட்டுரை / பழனிசாமி வியூகம் பலமானது!

பழனிசாமி வியூகம் பலமானது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சுந்தரராஜ சோழன், எழுத்தாளர்தேர்தல் வியூகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்துவிட்டார் என்று பலரும் விமர்சிக்கின்றனர். உண்மைதானா என்று பார்ப்போம். விமர்சனம் 1:

பழனிசாமியால் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை.

எதிர் தரப்பில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் 22 கட்சிகள் இருந்தாலும், சொல்லும்படியான கட்சிகள், காங்கிரஸ், வி.சி., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தான். மீதமுள்ள கட்சிகளில், தே.மு.தி.க.,- ம.தி.மு.க.,வை தவிர வேறு கட்சிகளின் பெயர்கள் தி.மு.க.,வினருக்கே முழுமையாக தெரியாது. மத்தியில் பிரதமர் மோடியின் அரசு மிகவும் நிலையானது என்ற எண்ணம் மக்கள் மனதில் மட்டுமல்ல எதிர்கட்சியினர் மனதிலும் கூட, ஆழமாக வேரூன்றி உள்ளது. மோடியை எதிர்த்து அரசியல் செய்யலாம், ஆனால் அவரை எளிதில் வீழ்த்த முடியாது என்ற யதார்த்தம் அனைவருக்கும் புரிந்துள்ளது. பா.ஜ.,வுடனான கூட்டணி தமிழகத்தில் ஒரு வலுவான ஆட்சியை உறுதிசெய்யும் என பழனிசாமி கணக்கு போடுகிறார். அந்த நிலை தன்மையை மக்களும் விரும்புவர். மத்திய அரசுடன் உரசல் போக்கில் உள்ள மாநில அரசைவிட, தோழமை போக்கில் உள்ள மாநில அரசே தங்களுக்கு பலன் தரும் என்பது விவரமானவர்களுக்கு புரிகிறது. கடந்த 1980 மாநில தேர்தலில், கருணாநிதி - இந்திரா காந்தி கூட்டணி, தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு நிகராக, வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத முயல்கிறது. விமர்சனம் 2:

தோல்வி பயத்தில் தி.மு.க., வாக்குறுதிகளை காப்பியடிக்கிறார் பழனிசாமி.

2006ல் தி.மு.க.,வின் அதிரடியான இலவச அறிவிப்புகள் அவர்களுக்கு வெற்றியை தேடித் தந்தன. அதிலிருந்து பாடம் கற்ற ஜெயலலிதா, 2011 தேர்தலில், ஆளும் தி.மு.க.வுக்கு எதிரான மக்கள் அதிருப்தியோடு சேர்த்து, கவர்ச்சி திட்டங்களையும் அறிவித்து மாபெரும் வெற்றியை ஈட்டினார். தற்போது, அதே பாணியை பழனிசாமி கையில் எடுத்துள்ளார். முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ள பல திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதோடு, அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ. 2,000; பெண்களுக்கான இருசக்கர வாகன மானியம் ரூ. 25,000; அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ. 10,000 உதவித்தொகை; ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்; கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்வு உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பழனிசாமி வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். இது தோல்வி பயத்தால் அல்ல, நேரடி பணப்பலன் தரும் திட்டங்கள், இன்றைய அரசியலில் தவிர்க்க முடியாதவை என்பதை ஏற்று, வியூகம் வகுப்பது மட்டுமே. தமிழகத்தின் கடன் சுமை கடுமையாக இருக்கும் போது, இவற்றையெல்லாம் எப்படிச் செயல்படுத்த முடியும்? என்ற கேள்வி எழலாம். அதற்கு, மத்திய அரசின் முழுமையான பொருளாதார ஆதரவு தங்களுக்கு பின்னால் இருக்கும் என்பதை அ.தி.மு.க., புன்முறுவலுடன் சுட்டிக்காட்டுகிறது. விமர்சனம் 3:

தி.மு.க.,வின் நிகரில்லாத 'திராவிட மாடல்' அரசை வீழ்த்த பழனிசாமியிடம் எந்த ஆயுதமும் இல்லை.

ஆளும் தி.மு.க., அரசுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக, சட்டம் - ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பை பழனிசாமி முன்னிறுத்தி உள்ளார். 'தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு இருளின் அரக்கப்பிடிக்குள் செல்லும்' என்ற எச்சரிக்கையை, தே.ஜ., கூட்டணியினர், மக்கள் மத்தியில் ஆழமாக பதிவு செய்கின்றனர். தி.மு.க., இலவசங்களை கொடுத்தாலும், கண்ணியமாக கொடுக்க தெரியவில்லை. இலவசங்கள் பெறுவோரை தி.மு.க., அமைச்சர்களும் நிர்வாகிகளும் கொச்சைப்படுத்தி பேசியதை எல்லாம், மக்களின் தன்மானத்தின் மீது விழுந்த அடியாக அ.தி.மு.க சுட்டிக்காட்டுகிறது. இதையே திண்ணை பிரசாரமாக தே.ஜ. கூட்டணி தீவிரமாக செய்து வருகிறது. சத்தமில்லாமல் அனைத்திற்கும் விலையை உயர்த்தி உள்ளது தி.மு.க. குறிப்பாக, மின் கட்டண உயர்வால் அனைவரும் அவதிப் படுகின்றனர். வீட்டுக்கு வீடு சென்று, முன்-பின் ஒப்பீடு மின்சார 'பில்' கொடுத்து அ.தி.மு.க., செய்த நுாதன பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. விமர்சனம் 4:

விஜயை கூட்டணிக்கு இழுக்க முடியாததால், அ.தி.மு.க.,விற்கு இழப்பு ஏற்படும்.

கடந்த 2019க்கு பிறகு நடந்த தேர்தல்களில், டி.டி.வி. தினகரன், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பெரும்பாலும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை பிரித்தனர். ஆனால், தற்போது, நடிகர் விஜயின் அரசியல் வருகை ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய், அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் ஈர்ப்பார். அதில், தி.மு.க.,வின் வாக்குகளை தான் அதிகம் ஈர்ப்பார் என, பழனிசாமி கணக்குப் போடுகிறார். இந்த தேர்தல் கூட்டணி, அ.தி.மு.க.,வால் மிக துல்லியமான அரசியல் கணக்குகளுடன் பின்னப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான நகர்வாக தெரிகிறது. பழனிசாமியின் வியூகம் எளிமையாக பார்ப்பவர்களுக்கு புரியாது. ஆனால், கள நிலவரம் அவருக்கு சாதகமாக இருப்பதாக தெரிகிறது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !