பிம்ப அரசியலும் பலமான கூட்டணியும்!
திலகபாமா, பொருளாளர், பா.ம.க.,mathibama@yahoo.com
ஜனநாயகத் தேர்தல் களத்தில், மக்கள் நலப் பணிகளே ஒரு கட்சியின் நன்மதிப்பை தீர்மானிக்கும் அளவுகோலாக ஒரு காலத்தில் இருந்தது. பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியோடு அந்த நேர்மையான அரசியல் முற்றுபெற்றது என்பதுதான் தமிழக அரசியலின் கசப்பான வரலாறு.
அதன்பின், தமிழகத்தை இன்றுவரை ஆட்டுவிப்பது 'பிம்ப அரசியல்' என்னும் மாயவலை மட்டுமே.
வீழ்த்தப்பட்ட நிஜங்கள்
வெறும் எட்டு அமைச்சர்களை கொண்டு, தமிழகத்தின் பொற்கால ஆட்சியை வழங்கிய காமராஜரை வீழ்த்த, இந்த பிம்ப அரசியலை தான் தி.மு.க., கையாண்டது.
'ஹிந்தி திணிக்கப்படுகிறது, வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என இன்னும் பல உணர்ச்சிபூர்வமான முழக்கங்கள் வாயிலாக, தமிழும் தமிழர்களும் ஆபத்தில் இருக்கின்றனர் என்ற பிம்பத்தை வெற்றிகரமாக கட்டமைத்தது.
வாழ்நாள் முழுதும் தனக்கென்று எந்த சொத்தையும் சேர்த்து வைக்காத ஒரு மாபெரும் தலைவரை, பிம்ப அரசியலால், உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் தோற்கடித்தனர் என்றால், அங்கே மக்களாட்சி காவு கொடுக்கப்பட்டுவிட்டது என்றுதானே அர்த்தம்?
தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க., உருவான காலத்தில் இருந்தே, திரைத்துறை, இலக்கியம் மற்றும் நாடக மேடைகளை பயன்படுத்தி, அவர்கள் ஏற்படுத்த நினைத்த பிம்பத்தை நிலைநிறுத்த தேவையான கருத்துகளை திணித்தனர்.
எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் இருந்த பேராதரவு தி.மு.க.,வுக்கு பெரும் சவாலாக இருந்தது. எம்.ஜி.ஆரை விட சிறந்த மக்கள் நல திட்டங்களை முன்வைத்து போட்டியிடுவதற்குப் பதிலாக, அவரை சிறுமைப்படுத்தும் கருத்துகளை பரப்புவதை தி.மு.க., கையிலெடுத்தது.
'சினிமாக்காரர் அரசியல் செய்ய முடியுமா?, 'அவர் ஒரு மலையாளி, ஆட்சி அனுபவம் இல்லாதவர், தமிழர் உரிமையை விற்கிறார்' என தனிநபர் தாக்குதல்களையே அரசியலாக்கினர்.
பிம்ப அரசியலின் ஒருபக்கம், கருத்துகளை திணித்து பிம்பத்தை கட்டமைப்பது என்றால், மற்றொரு பக்கம் தனிநபரின் பிம்பத்தை தாக்குவது.
தொழில்நுட்ப யுகத்தில்...
இப்படிப்பட்ட அரசியல் செய்பவர்களுக்கு தொழில்நுட்ப யுகம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. மத்திய அரசின் வஞ்சனை என்ற பிம்பத்தையும், தாயுள்ளம் கொண்ட முதல்வர் என்ற பிம்பத்தையும் கட்டமைப்பதில் இவை வெற்றி பெற்றுள்ளன.
பி.ஆர்., நிறுவனங்கள், 'பென்' போன்ற கார்ப்பரேட் அமைப்புகள், ரெட் ஜெயன்ட் என, அசுர பலமுள்ள கருத்துருவாக்க கட்டமைப்பு வாயிலாக திரைப்படம், தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மட்டுமல்லாமல், முகநுால், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் திட்டமிட்ட போலித்தனமான கருத்துகளை துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர். எதிர் கருத்து தெரிவித்தவர்கள் அனைவரின் வாய்களையும் பாசிச அரசுகளைவிட அழுத்தமாக அடைத்தனர்.
ஆனால், இறுதியில், தாங்கள் ஏற்படுத்திய பிம்பத்தில் தாங்களே மயங்கி, ஆட்சியின் மீது கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர். சட்டம் - ஒழுங்கு கைமீறி போனதற்கு அது தான் காரணம். அதனால் தான், அந்த பிம்பத்தையும் மீறி, ஆட்சியின் தோல்விகள் கடந்த ஓராண்டாக அப்பட்டமாக தெரியத் துவங்கிவிட்டன. இருப்பினும், தி.மு.க., அரசு அசரவில்லை.
கூட்டணி பிம்பம்
தேர்தலுக்காக தி.மு.க., கட்டமைக்கும் மிக முக்கியமான பிம்பம், 'எங்களுடையது பலம் வாய்ந்த கூட்டணி' என்பதாகும். அந்த பிம்பத்தை தர்க்கரீதியாக அணுகினால் பல உண்மைகள் அம்பலமாகும்.
அவற்றில் சில:
* தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்; ஆனால் அவற்றின் ஓட்டு வங்கி மிகக்குறைவு. மாறாக, அதிக ஓட்டு வங்கி கொண்ட கட்சிகள் அ.தி.மு.க., தலைமையில் தான் இணைந்துள்ளன
* வெறும் கட்சிகளின் எண்ணிக்கையை வைத்து ஒரு கூட்டணியின் பலத்தை அளவிட முடியுமா? மக்களுக்காக ஆற்றிய பணிகளின் அடிப்படையில் அல்லவா அந்த பலம் உருவாக வேண்டும்?
* தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறாமல் இருப்பதற்குக் காரணம் அன்பான அரவணைப்பு அல்ல. அவர்கள் தி.மு.க.,வுக்குள் கரைந்து தங்கள் தனித்துவத்தை இழந்துவிட்டனர். தி.மு.க.,வை அண்டி வாழ்ந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
* தி.மு.க.,வின் பலம் என்பதே பலரோடு இணைந்து நிற்பதில்தான் உள்ளதே தவிர, அவர்கள் ஒருபோதும் தனித்து நின்று தங்கள் உண்மையான செல்வாக்கை நிரூபித்ததில்லை
* தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சிகளை துவங்க மறைமுகமாக பண உதவி செய்து, பின்னர் அவர்களை தங்கள் கூட்டணியில் இணைத்துக்கொண்டு 'மாபெரும் கூட்டணி' என்று கணக்குக் காட்டும் தந்திரமும் இதில் அடங்கும்.
தற்போதைய தி.மு.க., கூட்டணி என்பது பலம் வாய்ந்தது அல்ல; அது தன் பலவீனத்தை மறைக்க, பலரையும் தன்னோடு இணைத்துக்கொண்டு எழுப்பும் வெற்றுப் பகட்டு. உழக்கில் காற்றையும், தராசில் நீரையும் வைத்து நிரப்பியது போன்ற ஒரு பலவீனமான கட்டமைப்பு இது.
வாட்ஸாப் குழுக்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒரு பொய்யை பத்து பேரை வைத்து நுாறு தடவை முழங்கச் செய்வதால், அந்தப் பொய் ஒருபோதும் உண்மையாகிவிடாது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்