டாஸ்மாக்கில் ஐந்து ஆண்டுகளில் ரூ. 24 ஆயிரம் கோடி ஊழல் : தி.மு.க., அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு
அணைக்கட்டு : தி.மு.க.,வின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில், டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என 24,000 கோடி ரூபாய் கூடுதலாக வசூல் செய்து கொள்ளையடித்துள்ளதாக அ.தி.மு.க., பொதுசெயலர் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செதுவாலை என்ற இடத்தில் இபிஎஸ் பேசியதாவது: மக்கள் படுகின்ற துன்பத்தைப் பற்றி கவலைப்படாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். இன்று உணவுப் பொருட்கள் விலை விண்ணைத் தொடுகின்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.ஏழை மக்கள் வாங்கும் சக்தியை இழந்து இருக்கிறார்கள்.தி.மு.க., ஆட்சியில் உணவுப் பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. ரேஷன் கடையிலும், மளிகைக் கடையிலும் அ.தி.மு.க., ஆட்சியில் உணவுப் பொருட்களின் விலையை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.ஆனால் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டதால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். முதல்வர் நடைப்பயணம் மேற்கொள்ளும்போது அவரோடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூடப் போகிறார். அப்போது, உதயநிதி நடித்த படம் நல்லா ஓடுகிறதா ?, வசூல் ஆகுதா என ஸ்டாலின் கேட்கிறார்.நாட்டு மக்களைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. வீட்டு மக்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்.அ.தி.மு.க., ஆட்சியில் உணவுப் பொருட்களின் விலை உயரும்போது, எந்த மாநிலத்தில் விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து கூட்டுறவுத் துறையின் மூலம் கொள்முதல் செய்து தமிழகத்தில் விலையைக் கட்டுப்படுத்தினோம். தி.மு.க., ஆட்சி செல்வந்தர்களுக்காக இருக்கின்ற ஆட்சி. தனது தந்தைக்கு, ஸ்டாலின் 82 கோடி ரூபாய் செலவில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கிறார். இது உங்கள் வரிப்பணம்.பேனா வைக்க வேண்டும் என்றால் தி.மு.க., அறக்கட்டளையில் இருக்கும் 8,000 கோடி ரூபாயில் வைப்பது தானே?. ஏன் மக்களின் வரிப்பணத்தில் வைக்க வேண்டும்?.
காலில் செருப்பு இல்லாத ஏழைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?. மக்களின் வரிப்பணத்தை கார் பந்தயம் நடத்தி உதயநிதி வீணடித்துள்ளார். டாஸ்மாக்கில், ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு, இதன் மூலமா 450 கோடி ரூபாய் வருமானம். ஐந்து ஆண்டுகளில், 24,000 கோடி ரூபாய் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்து கொள்ளையடித்ததுள்ளது.மத்திய அரசு அறிவித்துள்ளபடி, அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் இருக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு, வேலை கிடைக்கும் வரை மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும்.பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
தற்போது பெண்கள் மட்டும் நகரப் பேருந்துகளில், இலவசமாகப் பயணம் செய்கிறார்கள். இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.வீடில்லாத ஏழைகளுக்கு "அம்மா இல்லம்" என்ற திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். குறிப்பாக பட்டியல் இன மக்களுக்கு இடங்களை வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். அ.தி.மு.க., ஆட்சியில், மாடு விடும் திருவிழாக்கள் இன்னும் சிறப்பாகவும், எழுச்சியாகவும் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஜோலார்பேட்டையில் இபிஎஸ் பேசியதாவது: மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஸ்டாலின். இதுவரை நடந்தது போதாதா..? 5 ஆண்டு காலம் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டீர்கள். இப்படி ஒரு முதல்வர் நாட்டை ஆள்வதால், நாடு சீழிந்துகொண்டு இருக்கிறது. இதிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். அதிமுக ஆட்சி இருக்கும் வரை சிறுபான்மை மக்களை காத்தோம். திமுக ஆட்சி வந்த பிறகு ஒட்டு மொத்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திட்டமிட்டு சிறுபான்மை மக்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, வாக்குகளை பெற ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் நாங்கள் அப்படி அல்ல. வாக்குக்காக ஆட்சி செய்யவில்லை. மக்களுக்காக ஆட்சி செய்யும் கட்சி அதிமுக.
திமுக செய்வது ஒரு குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல். இந்த தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். குடும்ப ஆட்சி தேவையா, வாரிசு அரசியல் தேவையா என்று யோசித்து முடிவெடுங்கள்.நான்கு அதிகார மையங்கள் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கின்றன. நேற்று ஸ்டாலின் மருமகன் சபரீசனும் பொதுவெளியில் வந்துவிட்டார். முதல்வர், துணை முதல்வர் உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு பேரும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்டிப்படைக்கிறார்கள். இந்த தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இப்படிப்பட்ட ஒரு குடும்பம் அதிகாரம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா..?
தமிழகம் இந்த அளவிற்கு தலை குனிவதற்கு காரணம் இந்த அதிகார மையங்கள் தான். இந்த அதிகார மையங்கள் மூலம் எல்லா துறைகளிலும் கொள்ளை அடிக்கும் காட்சிகளைப் பார்க்கிறோம். இந்தந்த துறை இவர்களுக்கு என்று நான்கு பேரும் பங்கு போட்டுக்கொண்டு விட்டார்கள். பிறகு எப்படி நாடு வளரும்.? இவ்வாறு அவர் பேசினார்.
ஆம்பூர் பைபாஸ் சாலையில் இபிஎஸ் பேசியதாவது: எடப்பாடி பல தோல்விகளைக் கண்டுள்ளார் என்கிறார் ஸ்டாலின். நீங்கள் மமதையில் பேசுகிறீர்கள். கொஞ்சம் பிற்காலத்திற்குச் செல்லுங்கள். 2011 தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை, 2011 முதல் 2021 வரை பல தேர்தலில் வென்ற கட்சி அதிமுக. 2016ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து சரித்திரம் படைத்தார் ஜெயலலிதா.
கூட்டணியில்லாமல் வென்ற கட்சி அதிமுக. சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, 2014 லோக்சபா தேர்தலிலும் 37 இடங்களை பெற்றோம். நீங்கள் ஒரு இடம் கூட வெல்லவில்லை. பல இடைத்தேர்தல்களில் வெல்லவில்லை, உள்ளாட்சித் தேர்தலிலும் வெல்லவில்லை, கூட்டுறவு சங்கத்தேர்தலில் 98% வென்றது அதிமுக. 10 ஆண்டுகாலம் வனவாசம் போன திமுகவுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? எப்படியோ தப்பித்தவறி ஆட்சி கிடைத்தது, அதைப் பயன்படுத்தி நல்லாட்சி கொடுத்திருக்கலாம் ஆனால் செய்யவில்லை.
திமுக ஆட்சியில் மக்கள் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதிமுக ஆட்சி அமைந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அது தமிழகத்தில் நடைபெறும்.
சிறுபான்மை மக்கள் சிந்திக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இஸ்லாமியர்களை பாதுகாக்க மாட்டோம் என்பது எவ்வளவு பெரிய பொய். கொள்கை வேறு, கூட்டணி வேறு. வாக்குகள் சிதறாமல் இருக்கவே கூட்டணி. அதிமுக கொள்கை மாறாது. சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தார்.
20 நாட்கள் திமுக, காங்கிரஸ் போராட்டம் நடந்து எப்படியோ கூட்டணி அமைத்தனர். ஆனால், யாரும் சந்தோஷமாக இல்லை. 10 ஆண்டுகாலம் திமுகவை தாங்கிப் பிடித்த விசிக, கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவு கொடுத்ததற்காக ஒரு சீட் மைனஸ். மதிமுகவுக்கு நான்கு இடம் கொடுத்தனர், அழுதுகொண்டே சிரிக்கிறேன் என்று பேசினார்.
உங்கள் கூட்டணியில் தேமுதிக தான் சேர்ந்திருக்கிறது. 2021ல் அரை சதவீதம் வாக்குதான். அவர்களுக்கு 10 சீட். இரண்டு சதவீதம் வாங்கியவங்களுக்கு 5 சீட். மதிமுகவுக்கு நான்கு இடம் கொடுத்தார்கள். மூன்று உதயசூரியன் ஒன்று விருப்ப சின்னம், இப்போது அந்த ஒரு இடத்தையும் புடுங்கிவிட்டனர். திமுகவை எதிர்த்து தான் மதிமுக கட்சி தொடங்கியது, அதே கட்சியிடம் சரண் அடைந்து, பதவிக்காக தன்மானத்தை விட்டு திமுக சின்னத்தில் நிற்கிறார். வெட்கமாக இல்லையா..? இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
ஜெயலலிதா அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை பயன்படுத்தி பத்து ஆண்டுகள் நீங்களும் தினகரனும் அடித்த கொள்ளை பல லட்சம் கோடி இருக்கும் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்
அய்யா பழனி அதிமுக ஆட்சியில் அதிமுக வும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கொள்ள அடித்தது
ஆட்சிக்கு வந்தால் உமக்கு முடிவு எடுக்க அதிகாரமே கிடையாது அனைத்திற்கும் டெல்லி தான்

எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக இவை விமர்சனம் செய்து டாஸ்மாக் மூலம் ஒரு பாட்டி லுக்கு ₹10 வாங்குவதன் மூலமாக 24000 ரூ கோடிகளை குவித்துள்ளார் என்பதனை போர்ட்டர் அடித்து ஒட்டி அதிமுக ஓட்டு கேட்க வேண்டும்.