சென்னையில் தொகுதிகளை கேட்டு அடம்; ஸ்டாலினை நெருக்கும் கூட்டணி கட்சிகள்
- நமது நிருபர் -
சென்னையில் தொகுதிகளை கேட்டு, காங்., - வி.சி.க., - தே.மு.தி.க., என கூட்டணி கட்சிகள் அடம் பிடிப்பதால், பங்கீட்டில் முடிவெடுக்க முடியாமல், முதல்வர் ஸ்டாலின் திணறி வருகிறார்.
இது குறித்து, தி.மு.க., தொகுதி பங்கீடு குழு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டணி பேச்சில், தி.மு.க., தலைமையை, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கதற விட்டது. இப்போது தொகுதி பங்கீட்டிலும் தி.மு.க.,வை காங்கிரஸ் கிறங்கடிக்கிறது.
ஏற்கனவே வென்ற வேளச்சேரி தொகுதியோடு, அண்ணாநகர், தி.நகர் தொகுதிகளையும் காங்., கேட்கிறது. இவற்றில், இரண்டை உறுதி செய்தால் தான், தொகுதி பங்கீட்டில் கையெழுத்து போடுவோம் என, காங்கிரஸ் மேலிடம் கறாராக இருக்கிறது.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆர்.கே.நகர், ராயபுரம், பல்லாவரம் ஆகிய தொகுதிகளை கேட்கிறது. இதில் ஒன்றை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில், தி.மு.க., தலைமை உள்ளது. கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.க.,வும் விருகம்பாக்கம் தொகுதியை தந்தே ஆக வேண்டும் என உறுதியாக நிற்கிறது.
சென்னை மாவட்டத்தில், விஜயின் த.வெ.க., கட்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதாக 'சர்வே' முடிவுகளில் தெரிகிறது. இதனால், சென்னைக்குள் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, தி.மு.க.,வின் செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில், ஸ்டாலின் இருக்கிறார். இதை தங்களுக்கு சாதகமாக மாற்றி, தி.மு.க., நிழலில் எளிதாக வென்று விடலாம் என, சென்னைக்குள்ளேயே அதிக தொகுதிகளை, கூட்டணி கட்சிகள் கேட்கின்றன.
தொகுதிகளை ஒதுக்குவதில், இதுபோன்ற சிக்கல் இருப்பதால் தான், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் அறிவிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்