'அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்திருப்பது மக்கள் விருப்பம்'
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சியில் பால்வள துறை செயல்பாடு எப்படி உள்ளது?
மிகவும் மோசமாக உள்ளது. 25 மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு பால்வள துறை அமைப்பு மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்குவதாக தகவல் வந்துள்ளது. இனிமேல் பால்வள துறையை துாக்கி நிறுத்த வேண்டும் என்றால், அரசு தான் அதற்கான இழப்பீட்டு தொகையை முழுமையாக கொடுத்து காப்பாற்ற வேண்டும்.
இதை செய்ய வேண்டுமென்றால் அ.தி.மு.க., தான் ஆட்சிக்கு வரவேண்டும். இதுபோன்று நஷ்டத்தில் இயங்கக்கூடிய அனைத்து துறைகளையும் சரிசெய்ய வேண்டும் என்றால், அ.தி.மு.க., வரவேண்டும். ஆட்சிக்கு வந்ததும் அனைத்து துறைகளும் சரிசெய்யப்படும்.
அ.ம.மு.க., உடனான கூட்டணி, இம்முறை உங்களுக்கு எந்தளவுக்கு சாதகத்தை ஏற்படுத்தும்?
ஜெ., காலத்தில் இருந்து இரட்டை இலைக்கான ஓட்டுகள் பிரியவில்லை. பழனிசாமி தலைமையில் அப்படியே உள்ளது. அந்த ஓட்டுகள் எப்போதும் பிரியாமல் கிடைப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரசாரத்தில், தினகரன் தாமதமாக கலந்து ெகாண்டது ஏன்?
பிரசாரம் தற்போது வேகமெடுத்து இருக்கிறது. சரியான நேரத்தில் அவர் களத்திற்கு வந்து விட்டார்.
தே.மு.தி.க.,வை கூட்டணியில் தக்கவைக்க, பழனிசாமி தவறிவிட்டாரா?
அப்படியெல்லாம் இல்லை. பழனிசாமி முடிவில் நியாயம் உள்ளது. தே.மு.தி.க., தங்களுடைய சக்திக்கு மீறி எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு அ.தி.மு.க., விட்டுக்கொடுக்க வாய்ப்பு இல்லை. தே.மு.தி.க., எடுத்த முடிவு அவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
கடந்த 2024ல் பா.ஜ., எதிர்ப்பு; தற்போது 2026ல் பா.ஜ.,வுடன் கூட்டணி. மக்கள் உங்களை எப்படி நம்புவர்?
கடந்த 2024ல், அ.தி.மு.க., தலைமையில் ஒரு அணி; பா.ஜ., தலைமையில் ஒரு அணி; தி.மு.க., தலைமையில் ஒரு அணி என அமைந்தன.
அப்போது, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆகிய இரு அணிகளும் இணைந்திருக்க வேண்டும் என, மக்கள் தங்கள் கருத்தை தெரிவித்திருந்தனர். இந்த கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. அப்போது வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் தவறவிட்டனர் என கூறினர்.
அந்த வாய்ப்பை இந்த முறை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டோம். அதற்கான முயற்சியை பழனிசாமி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
கடந்த தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில், ஒரு தொகுதியை கூட்டணிக்கு கொடுத்தீர்கள். இம்முறை இரண்டு தொகுதிகளை கொடுத்துள்ளீர்களே ஏன்?
கட்சியில் பலமான கூட்டணி அமையும்போது கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை, கட்சி தலைமைக்கு ஏற்பட்டது. எங்கள் பொதுச்செயலர் அந்த முடிவை எடுத்தார். நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
சாத்துாரில் தமிழக பா.ஜ., தலைவர் நிற்பதால், விருதுநகர் உங்கள் கையைவிட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாக பேச்சு இருக்கிறதே...
அதற்குரிய எண்ணமே எழவில்லை. நான் அ.தி.மு.க.,வின் மாவட்ட செயலர். அவர் பா.ஜ.,வின் மாநில தலைவர். எங்கள் வழிகள் வேறு வேறு. இதுபோன்ற சந்தேகம் எழ வாய்ப்பே இல்லை.
தி.மு.க., - த.வெ.க.,வுக்கு இடையேதான் போட்டி என, விஜய் தொடர்ச்சியாக கூறுகிறாரே?
தொடர்ந்து ஒரு பொய்யை சொன்னால் உண்மையாகி விடாது. அவர் கற்பனை உலகில் மிதக்கிறார். அவர் அப்படியே கற்பனை உலகிலேயே சஞ்சரிக்க வேண்டியதுதான். எனவே அவர் கனவிலேயே இருக்கட்டும்.
விஜய் செல்லும் இடங்களில், மக்களின் கூட்டத்தை பார்த்துமா, அவருக்கு ஆதரவு இல்லை என சொல்கிறீர்கள்?
திரைப்படத்தில் நடிக்க கூடிய ஒரு சாதாரண நடிகர் வந்தால் கூட, அவரை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடுவர். அது ஓட்டாக மாறும் என கணக்கு போட்டால் அது தப்பு. மக்கள் பார்த்துவிட்டு சென்றுவிடுவர்.
அவருக்கென்று கொள்கையோ, கோட்பாடோ இல்லை. அவரின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. எனவே, அவர் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பிரசாரத்தில் ஈர்ப்பு இல்லாதது போல் இருக்கிறதே...
ஜெ.,விற்கு பின் பழனிசாமி என்ற ஒரு தலைவர் இல்லை என்றால், அ.தி.மு.க., என்ற கட்சியே காணாமல் போயிருக்கும். வளர்ந்து வந்த தலைவரான எங்களின் பொதுச்செயலர், இன்றைக்கு வளர்ந்து விட்ட தலைவராக உருவாகி உள்ளார்.
தற்போது தி.மு.க.,விற்கு சிம்ம சொப்பனமாக உள்ளார். அவர் பேச்சையும் கருத்தையும் தமிழக மக்கள் ஏற்கின்றனர். அதில் உண்மை உள்ளதை உணர்கின்றனர்.
தமிழகத்தை, 31 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி செய்துள்ளதாக பெருமைப்படுகிறீர்கள். ஆனாலும், பிரிஜ் போன்ற இலவசங்களை கொடுக்கும் நிலையில் தானே மாநிலம் உள்ளது?
ஆண்ட கட்சியான அ.தி.மு.க.,வை எப்போதுமே மக்கள் விரும்புவர். மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காகத்தான் இலவசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிமையாக இருக்கிறார் என்ற, முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்தை எப்படி எதிர்கொள்வீர்கள்?
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக காங்கிரஸ் உள்ளது. அந்த கட்சிக்கு தி.மு.க., 28 சீட் கொடுத்தது.
கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும், கிளை கழகம் என பல்வேறு அமைப்புகளை வைத்துள்ள பா.ஜ.,வுக்கு 27 சீட் கொடுத்துள்ளோம். இதில், யார் அடிமையானவர்? யார் பலமானவர்? பழனிசாமியா, ஸ்டாலினா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
கடந்த எட்டு ஆண்டுகளாக உட்கட்சி பிரச்னையில் சிக்கியிருந்த அ.தி.மு.க., ஒற்றை தலைமைக்கு மாறியும் வெற்றி அடைய முடியவில்லை. இதற்கு யார் காரணம்?
ஒற்றை தலைமைக்கு மாறிய பின், முதல் சட்டசபை தேர்தல் இப்போதுதான் வந்துள்ளது. இதில், நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். தோல்வியை தி.மு.க.,விற்கு பரிசாக கொடுத்து, இந்த தேர்தலில் பழனிசாமி மிகப்பெரிய வெற்றி நாயகனாக உலா வருவார். தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்.
அ.தி.மு.க.,வில் இருந்தவர்கள் பிற கட்சிகளில் கோலோச்சுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
அ.தி.மு.க.,வில் கொஞ்ச காலம் இருந்தாலும், அவர்களால் வேறு கட்சிக்குள் பிரவேசிக்க முடியும் என்பதை நிலைநாட்டி வருகின்றனர். இதிலிருந்தே தெரிகிறது அ.தி.மு.க., எவ்வளவு பெரிய பலமான கட்சி என்று. ஏனெனில் எல்லா கட்சிகளுக்கும் விதை போட்டதே அ.தி.மு.க., தான்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்