Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'நிதி அமைச்சராக இருந்த இரண்டு ஆண்டுகள் கனவு நாட்கள்!'

 'நிதி அமைச்சராக இருந்த இரண்டு ஆண்டுகள் கனவு நாட்கள்!'

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் தியாகராஜன், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

ஐ.டி., அமைச்சராக நீங்கள் சாதித்தது என்ன?


ஐ.டி., துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, பிற மாநிலங்களில் உள்ள 'சிஸ்டம்'க்கும் நம் மாநில 'சிஸ்டம்'க்கும் அதிக வேறுபாடு இருப்பது தெரியவந்தது.

புதிய தொழில்நுட்ப மையங்களை உருவாக்கும் எல்காட், டி.என்., ஸ்டார்ட் அப், தமிழ்நாடு இ - கவர்னன்ஸ், தமிழ்நாடு கேபிள் டிவி ஆகிய நிறுவனங்களை மேம்படுத்தினேன். தமிழ்நாடு ஐ.சி.டி., அகாடமி சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ் இணையக்கல்வி கழகம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு திறனுடன் இணையவழி தமிழ், தனித்தமிழ் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு டிப்ளமோ சான்றும் வழங்கப்படுகிறது. விர்ச்சுவல் நுாலகத்திற்கு 18 கோடி பயனர்கள் உள்ளனர். தமிழின் அரிய நுால்களை இந்த நுாலகம் மூலம் படிக்கலாம்.

முதல்வர் அறிவித்த 5,000 ரூபாயை, ஒரே நாளில் வழங்கியது எப்படி?


தமிழக அரசின் கோடைக்கால சிறப்பு உரிமைத்தொகை 5,000 ரூபாய் திட்டம் வாயிலாக, 1.31 கோடி வங்கி கணக்குகளில், உடனடியாக பணம் வரவு வைக்கப்பட்டது. இது, இத்துறையின் சிறந்த செயல்பாட்டை எடுத்துக்காட்டியது.

இத்திட்ட அறிவிப்பு குறித்து பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ்., செல்வதற்குள் பணம் வரவு வைக்கப்பட்டது. கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு கூட உடனடியாக பணம் வரவு வைக்கப்பட்டது.

உதவித்தொகை கிடைக்க வில்லை என்று யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இது, ஐ.டி., துறையின் பெரும் சாதனை. இதற்காக, முதல்வர் ஸ்டாலின் பாராட்டை பெற்றோம். ஐ.டி., துறையின் 'பிளாட்பார்ம்' வழியாக தான், 38,000 முதல் 42,000 கோடி ரூபாய் வரை தமிழக அரசின் உதவி திட்டங்களுக்கான பண பலன்கள் நேர்த்தியாக வழங்கப்படுகின்றன.

நான் அமைச்சராக உள்ள இத்துறையில், 100 சதவீதம் 'பேப்பர்லெஸ் டேட்டா' தொழில்நுட்பம் கொண்டுவர நினைத்தேன். அதற்கான முயற்சிகள் தொடரும்.

நிதியமைச்சராக இல்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?


நான் நிதியமைச்சராக இருந்த அந்த இரண்டு ஆண்டுகள் தான் என் வாழ்க்கையில் கனவு நாட்கள். உலக அளவில் அரசுகளின் நிர்வாக திறன் குறைந்து வருகிறது என புள்ளிவிபரங்கள் உணர்த்துகின்றன. இதற்கு காரணம், மாறும் காலத்திற்கு ஏற்ப அரசுகள் தொழில்நுட்ப ரீதியாக மாறுவதில்லை.

அதாவது கார்ப்பரேட் - கவர்மென்ட் இடையே நிர்வாகம் செய்வதில், உடனடி தீர்வு செய்ய நீண்ட இடைவெளி இருக்கிறது. நான் நிதியமைச்சராக இருந்த குறுகிய காலத்தில், பல மாற்றங்களை கொண்டு வந்தேன். அதன் வாயிலாக செலவினங்களை குறைத்து, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்தேன்.

அண்ணாதுரை காலம் முதல், கருணாநிதி காலம் வரை நிதித்துறையை முதல்வர் அல்லது சீனியர் அமைச்சர்களே வைத்திருந்தது வரலாறு. ஆனால் அதை மீறி, முதல்வர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையால், ஜூனியர் அமைச்சரான எனக்கு, நிதித்துறையை கொடுத்தார்.

கோப்புகளை அதிக எண்ணிக்கையில் திருப்பி அனுப்புவீர்கள் என்ற புகார் உள்ளது. உண்மையா?


முதல்வர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தேன். அவரது உத்தரவின்பேரில் குறிப்பிட்ட காலத்திற்குள் கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தேன். என் காலத்தில் 7,000 கோப்புகளை பார்த்துள்ளேன். அதில், 1,000 கோப்புகளை திருத்தம் செய்து கொடுக்க கேட்டு, திருப்பி அனுப்பியுள்ளேன்.

அதாவது ஏழில் ஒரு கோப்பு, திருப்பி அனுப்பியுள்ளேன். இதன் வாயிலாக வருவாய் பற்றாக்குறை 30,000 -- 40,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டது. தமிழக அரசு கடன் பெறுவதும் குறைந்துள்ளது.

நிதியமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது மொத்த காலத்திலுமே ஒருசில கோப்புகள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்புகள் திருப்பி அனுப்பும் விஷயத்தில் முதல்வர் சங்கடப்பட்டதுண்டா?


இல்லை. அந்த அளவுக்கு நிதித்துறையில் முதல்வர் ஸ்டாலின் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்; அனுமதி தந்தார். என்னை பொறுத்தவரை, ஒரு துறையில் 20 ஆண்டுகளில் நடக்கக்கூடிய மாற்றத்தை இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்த திருப்தி இருந்தது.

என்னை அரசியலுக்கு அழைத்தது, துறை ஒதுக்கியது, எனக்கான பாதுகாப்பு கொடுத்தது என அனைத்தும் செய்தவர், தலைவர் ஸ்டாலின். இதனால், 7,000 கோப்புகளை கையாண்டபோது ஒரு கோப்புக்கு கூட, ஏன் இவ்வாறு செய்தாய் என முதல்வர் என்னை கேட்டதில்லை.

சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில், 'நான் மதுரைக்காரன்டா' என கொந்தளிக்க காரணம்?


மதுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு நபர். (நீதிக்கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர்.சி) அவரிடம் கொள்கை இல்லை. அவர் மனைவி 'ஜிம்னாஸ்டிக் வீராங்கனை போல' பல கட்சிகள் தாவியவர்.

மக்கள் போராட்டங்கள் என்றால் என்னவென்றே தெரியாத சினிமா சங்கி, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வெளியே வந்து, 'அழுகையாக வருகிறது' என்கிறார். நாம் கோவிலுக்கு போய் விட்டு வந்து அப்படி சொல்வோமா?


அவர், ஊரைப் பற்றி தெரியாமல், படிக்காமல், அடிப்படை புரிதல் இல்லாமல் மதுரையில் எந்த வசதியும் இல்லை என்று பேசியுள்ளார். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மட்டுமல்ல, என் தொகுதியில் ஒவ்வொரு 50 அடிக்கும் ஏதாவது ஒரு திட்டத்தை செய்து முடித்துள்ளேன் என நான் பெருமைப்படுவேன்.

தொகுதியில் செயல்படுத்திய திட்ட அறிக்கையை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் அமைச்சர் நான்! எம்.எல்.ஏ.,வாக இருந்தது முதல் வெளியிடுகிறேன். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பல்வேறு திட்டங்கள் நடந்துள்ளன. 1908ல் அப்போதைய நகரில் வசித்த 5,000 மக்களுக்கு ஏற்ற பாதாள சாக்கடை திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால், தற்போது மக்கள்தொகை பெருகிவிட்டது. கோவிலை சுற்றி இருந்த வீடுகள், மெகா 'கமர்ஷியல்' கட்டடங்களாக மாறிவிட்டன. இதனால், கழிவுநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு உடைப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, 7,000 கோடி ரூபாய் தேவை. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பியுள்ளேன். இப்பணிகளை மேற்கொள்வது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.

ஆனாலும், முதற்கட்டமாக 400 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து விரைவில் அதற்கான பணிகள் நடக்க உள்ளன. அது முடிந்தால் நகரின் நிலை மாறிவிடும்.

மீனாட்சி அம்மன் கோவிலின் வசந்தராயர் மண்டபம் தீப்பற்றி எரிந்த பின், அதை சீரமைக்க நடவடிக்கை எடுத்து தற்போது பல்வேறு ஆய்வுகளுக்கு பின், தரமான 77 கல்துாண்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கோவில் மேம்பாட்டிற்கு அ.தி.மு.க., ஆட்சியில் செய்யத் தவறிய பணிகளை தி.மு.க., ஆட்சியில் செய்து முடித்தோம். ஆனால், இது எதுவுமே தெரியாமல், எனக்கு எதிராக போட்டியிடுபவர் அறியாமையில் பேசுகிறார்.

வெளிநாட்டில் பணிபுரிந்தவர், பல வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் நீங்கள். ஆனால், நம் மதுரை மாறவில்லையே என நினைத்தது உண்டா?


'திங்க் குளோபல்; ஆக்ட் லோக்கல்' என நினைப்பவன் நான். மக்களுக்கு மிக முக்கியம் துாய்மையான குடிநீர். மதுரையில், 25 ஆண்டுகளாக நிலவிய குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டு, தற்போது, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் உலகளாவிய தரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. உபரிநீர் கொண்டதாக மதுரை மாறியுள்ளது.

என் தொகுதியான மதுரை மத்தியில் மட்டும் 47 இடங்களில் போர்வெல், 157 ரோடுகள், 23 அங்கன்வாடிகள், அரசு பள்ளிகள் மேம்பாடு, 22 புதிய ரேஷன் கடைகள், சமுதாய கூடங்கள், குழந்தைகள் பூங்கா, மாநகராட்சி மருத்துவமனைகளில் கர்ப்பிணியருக்கு ஸ்கேன் வசதி, ஏழை மக்களுக்கு 350 கோடி ரூபாய்க்கு டயாலிசிஸ் வசதி என, செய்து முடித்தவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நிறைய ஐ.டி., பூங்காக்கள் வந்துவிட்டன. மதுரை மாறிவிட்டது. மதுரைக்கு இன்னும் நிறைய செய்வேன். நிறைய தொலைநோக்கு திட்டங்கள் வைத்துள்ளேன். மதுரை இன்னும் மாறும்.

Advertisement