'பா.ம.க., பின்னடைவுக்கு அன்புமணி தான் முழுமுதல் காரணம்'
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
மகனா, மகளா என்ற நிலை ஏன் வந்தது? அன்புமணி தானே இத்தனை ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்திருக்கிறார்?
இதை, காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வந்து, மத்திய அமைச்சர், பா.ம.க., தலைவர் என, உயர் பொறுப்புகளை கொடுத்ததால் வந்த வினை. மகன் அனைவரையும் அரவணைத்து செல்லாததால் வந்த நிலை இது. இந்த கேள்விக்கு நான் உரக்க சிரிக்க வேண்டும். அதுவே பொருத்தமான பதில்.
அன்புமணியுடன் பிரச்னை ஏற்பட்ட பின், 'குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்ற வாக்குறுதியை மீறி, தவறு செய்துவிட்டேன்' என்றீர்கள். ஆனால், மகன் இடத்தில் மகளை அமர்த்தி, மீண்டும் வாக்குறுதியை மீறியுள்ளீர்களே?
அன்புமணியை அரசியலுக்கு அழைத்து வந்து, கொடுத்த வாக்குறுதியை மீறியது, நான் செய்த இமாலய தவறு. இப்போது என் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க., செயல் தலைவராக இருப்பது, நான் எடுத்த முடிவு அல்ல. என் மீது பற்று கொண்ட தொண்டர்களும் நிர்வாகிகளும், ஒரு மனதாக எடுத்த முடிவு.
என்னை கவனித்துக் கொள்ளவும், கட்சியை வழிநடத்தவும், ஸ்ரீகாந்தி பொருத்தமாக இருப்பார் என தொண்டர்கள் சொன்னதால், அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அதை, நானும் ஏற்றுக்கொண்டேன்.
கட்சியில், 30 - 40 ஆண்டுகள் உழைத்தவர்கள், உங்களுடன் இருக்கும்போது, மகள் ஸ்ரீகாந்தியை அடுத்த தலைவராக அடையாளம் காட்டுவது நியாயமா?
என்னுடன் கட்சிக்காக உழைத்தவர்கள் தான், ஸ்ரீகாந்தியை கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்தனர்; நான் தேர்வு செய்யவில்லை. நிர்வாகிகளின் தேர்வை ஏற்றுக் கொண்டேன். அவர்களின் தேர்வு சரிதான். ஸ்ரீகாந்தி மிகச் சிறப்பாக செயல்படுகிறார்.
கட்சிக்காக நேரம் கொடுத்து உழைக்கிறார். நிர்வாகிகள், தொண்டர்களுடன் உரையாடி அவர்களின் கருத்தறிந்து, ஜனநாயக முறைப்படி செயல்படுகிறார். என் பிரசாரத்தையும் அவர்தான் திட்டமிட்டு வருகிறார்.
கடந்த 47 ஆண்டுகளாக, நீங்கள் கட்டிக்காத்த கட்சி. ஆனால், இன்று, 90 சதவீத நிர்வாகிகள் அன்புமணி பக்கம். தவறு அவர் மீதா, உங்கள் மீதா?
கடந்த 47 ஆண்டுகளாக, நான் கட்டிக்காத்த கட்சி என்பது சரி. ஆனால், 90 சதவீத நிர்வாகிகள் அன்புமணி பக்கம் என்பது கடைந்தெடுத்த பொய். அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது மட்டுமே, நான் செய்த தவறு. மற்ற அனைத்து தவறுகளையும் செய்தது அன்புமணி தான்.
வன்னியர் சமுதாயத்திற்காகவாவது, அன்புமணியுடன் சமரசமாக செல்ல முடியாதா? என்ன தயக்கம்?
வன்னியர் சமுதாயத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும், குறிப்பாக பட்டியலின சமுதாய மக்களுக்கும் பாடுபட்டவன் நான். அதற்காக, பா.ம.க.,வை ஆரம்பித்து, முக்கிய அரசியல் சக்தியாக உருவாக்கினேன். இதை, ஒட்டுமொத்த தமிழர்களும் அறிவர். பா.ம.க., தொண்டர்களும் தமிழ் மக்களும், என் பக்கம் தான் இருக்கின்றனர்.
அன்புமணியுடன் சமரசத்திற்கு, இன்னமும் வாய்ப்பு இருக்கிறதா?
நான் உருவாக்கி வளர்த்த கட்சியை அபகரித்த அன்புமணியுடன், சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை.
கடந்த 2010ல் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, தனித்து போட்டியிட்டு தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆனால், 1989ல் ஆரம்பிக்கப்பட்ட பா.ம.க., கிடைத்த அங்கீகாரத்தையும் இழந்துள்ளது. இந்த பின்னடைவுக்கு, கூட்டணி அரசியல்தான் காரணமா?
இதற்கு பல காரணங்களை சொல்ல முடியும். தேர்தலுக்கு பின், பின்னடைவுக்கான காரணங்களை விரிவாக சொல்வேன். இப்போது சொல்ல வேண்டுமானால், அன்புமணியின் செயல்பாடு தான் முழுமுதல் காரணம் என்பேன்.
இடஒதுக்கீடு தவிர, வன்னியர் சமுதாயத்தை மையப்படுத்திய அரசியலை, கடந்த 10 ஆண்டுகளாகவே பா.ம.க., தொடவில்லை. இதே காலகட்டத்தில் முழுநேர ஜாதி அரசியல் செய்த வி.சி.க., நன்றாக வளர்ந்துள்ளது. பின்னோக்கி பார்க்கும்போது, ஜாதி அரசியலில் கவனம் செலுத்தாதது, சரியான உத்தியாக தெரிகிறதா?
வன்னியர் உட்பட, தமிழகத்தில் உள்ள 324 சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இன்றளவும் பாடுபட்டு வருகிறேன்.
நான் வன்னியர் ஒதுக்கீட்டிற்காக போராடியதால் தான், 100க்கும் அதிகமான சமூகங்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு என, தனியாக இடஒதுக்கீடு கிடைத்தது. எங்களை பார்த்து, மற்றவர்கள் ஜாதி அரசியல் என்று சொல்லலாம். ஆனால், நான் நடத்துவது சமூக நீதி அரசியல். வி.சி.க., உள்ளிட்ட கட்சிகள் குறித்து, நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி என, நம்பிக்கையுடன் சொன்னீர்கள். தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் ஏன் கூட்டணி கைகூடவில்லை? நீங்கள் கேட்டது என்ன? அவர்கள் தர தயாராக இருந்தது என்ன?
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிகளில், நாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை. விரும்பிய தொகுதிகளும் கிடைக்காத நிலை இருந்தது. இப்போது, சசிகலா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். அவரும் திராவிட கட்சி தான். அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்.
த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தினீர்களா?
ஆமாம். கூட்டணி பேச்சு நடத்தினோம். ஆனால், உடன்பாட்டுக்கு வர முடியவில்லை.
பா.ம.க., வலுவாக உள்ள வட மாவட்டங்களில் சசிகலாவுக்கு ஆதரவு இல்லை. சசிகலாவுக்கு ஆதரவு உள்ள தென் மாவட்டங்களில், பா.ம.க.,வுக்கு ஆதரவு இல்லை. இந்நிலையில் அவருடனான கூட்டணி பலன் தருமா?
நம்பிக்கையின் அடிப்படையில் தான், இந்த உலகமே சுழன்று கொண்டிருக்கிறது. தேர்தலில் மக்கள் யாரை தேர்ந்தெடுப்பர் என்று சொல்ல முடியாது. கடைசி நேரத்தில் கூட முடிவுகள் மாறலாம்.
சசிகலா கட்சியுடனான கூட்டணியை, நிர்வாகிகள் பலர் ஏற்கவில்லை. சேலம் மேற்கு எம்.எல்.ஏ., அருள் கூட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறதே...
சசிகலாவுடன் கூட்டணி வைத்ததை, பெரும்பாலான நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள், மிகவும் திருப்தியாக உள்ளார். அதனால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். கட்சியில் உள்ள 100 சதவீதம் பேரையும், திருப்திப்படுத்தும் முடிவை, எந்த கட்சி தலைவரும் எடுக்க முடியாது. சசிகலா கட்சியுடன் கூட்டணி வைத்ததை எதிர்ப்பவர்களின் பார்வை, தவறான பார்வை.
சசிகலாவையும் உங்களையும் கூட்டணியாக சேர்த்து வைத்தது யார்? அதன் பின்னால் தி.மு.க., இருப்பதாக பேசப்படுகிறதே...
நானும் சசிகலாவும் இணைந்து கூட்டணியை முடிவு செய்தோம். இதில், மற்றவர்கள் தலையீடு இல்லை. இதற்கு பின்னால், தி.மு.க., உட்பட யாரும் இல்லை. பின்னணியில் தி.மு.க., இருப்பதாக சிலர் கூறுவது தவறான புரிதலாக இருக்கலாம் அல்லது திட்டமிட்டு பரப்பும் அவதுாறாக இருக்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக, கடந்த ஜன., 10ம் தேதி பாராட்டினீர்கள். இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா?
அப்போது பாராட்டியது உண்மை தான். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சி முடிந்து விட்டது. இனி அடுத்து அமையப்போகும் ஆட்சி குறித்து பேசுவோம். நடந்து முடிந்தது குறித்து பேசி பலனில்லை.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவர் நீங்கள். உங்கள் பார்வையில், நடிகர் விஜயின் த.வெ.க., இந்த தேர்தலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்?
விஜயின் தாக்கத்தை கணிக்க, நான் ஜோதிடர் அல்ல. மக்கள் யாருக்கு ஓட்டு போடுகின்றனரோ, அதன் அடிப்படையில் தான் முடிவுகள் அமையும். த.வெ.க., இப்போது முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறது. இளைஞர்களும் இளம் பெண்களும், எந்த மனநிலையில் இருக்கின்றனர் என்பதை, ஓட்டுகளை எண்ணிப் பார்க்கும்போது தெரியும்.
இந்த தேர்தலில், மக்கள் எதற்காக உங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும்?
ஒரு சொட்டு கூட மது இல்லாத, துளியும் போதைப் பொருட்கள் இல்லாத, ஊழல் இல்லாத தமிழகம் வேண்டும், எங்கும் எதிலும், தமிழ் இருக்க வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, அரை நுாற்றாண்டாக பாடுபட்டு வருகிறேன். கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.
நல்லாட்சி வேண்டுமானால், இவையெல்லாம் நடக்க வேண்டும் என்று எங்கள் அணிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தால், ஆறு மாதங்களில், இவற்றையெல்லாம் செயல்படுத்துவோம்.
கடந்த 1989ல் இருந்து நேரடியாக தேர்தல் களத்தில் இருக்கிறீர்கள். இதுவரை இருந்த தேர்தல்களுக்கும், இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?
கடந்த தேர்தல்களைப் போலவே தான், இந்த தேர்தலும் நடந்து கொண்டிருக்கிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது, இந்த தேர்தலில் அதிகரித்துள்ளது. இது மட்டுமே வித்தியாசமாக தெரிகிறது.
உங்களின் நம்பிக்கைக்குரிய ஜி.கே.மணியின் மகன், காங்கிரஸ் வேட்பாளராக பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு நீங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லையே...
பென்னாகரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ., ஜி.கே.மணி. அவரது மகன் தமிழ்குமரன் அங்கு போட்டியிடுவதால், அவருடன் மோத மணிக்கு விருப்பம் இல்லை. அதனால் அவர் போட்டியிடவில்லை. அதனால் நானும் வேட்பாளரை நிறுத்தவில்லை.
அன்புமணி, 18 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அதில், பல தொகுதிகளுக்கு நீங்கள் வேட்பாளர்களை நிறுத்தவில்லையே?
அதில், அரசியல் சூட்சுமம் உள்ளது.
தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., போன்ற முக்கியமான அதிகாரிகளை, தேர்தல் கமிஷன் மாற்றியுள்ளதை பா.ஜ.,வின் சதி என, தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளதே?
தேர்தல் நேரத்தில் அதிகாரிகளை மாற்றுவதும், புதியவர்களை நியமிப்பதும் வழக்கமான நடை முறைதான். அதை, ஆளும் கட்சி விமர்சிப்பதும் வழக்கமானது தான்.
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய உங்கள் கோரிக்கையை, உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டதே...
சரியான நீதி, தாமதமாகத்தான் கிடைக்கும். ஆனால், நீதி உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஒரே சின்னத்தில் போட்டியிடாமல், வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடுவது, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?
தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். அதனால், சின்னம் ஒரு பொருட்டல்ல. எனது அரை நுாற்றாண்டு கால, சமூக நீதி அரசியலையும் போராட்ட அரசியலையும் பார்த்து வரும் மக்கள், எங்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் வழங்குவர்.
Advertisement
ஜாதி சொல்லி சொத்து கோடி கோடி யாக சேர்த்துவிட்டார். இவர் நம்பி ஏமாந்தது போதும் . மக்களே இங்கு ஜாதி சொல்லி ஏமாற்று இம் அரசியல் வா திகழ நம்பாதீர்கள்.
இவர் பாடுபட்டார். தாழ்த்தப்பட் சமுதாய மக்கள் இவரால் படாதபாடு படுத்தப்பட்டார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கட்சி தோல்விக்கு உங்களுடைய ஜாதி வெறியும் பேராசையும் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யத குணமும் தான் காரணம் அன்புமணி காரணம் அல்ல

வெட்டுப்பட்ட மரங்களின் சாபம் இப்போது வேலை செய்கிறது ..........