Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'கூடுதல் தொகுதிகள் கொடுக்காமல் ராகுல் பிரசாரத்தை எதிர்பார்ப்பது சரியாக இருக்காது!'

 'கூடுதல் தொகுதிகள் கொடுக்காமல் ராகுல் பிரசாரத்தை எதிர்பார்ப்பது சரியாக இருக்காது!'

அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அறிவித்த த.வெ.க., உடன் கூட்டணி வைக்க, தாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து விட்டதே...


கடந்த 60 ஆண்டு காலமாக, தமிழக காங்கிரஸ் கட்சி தாழ்ந்து வருகிறது. இந்த தேர்தலில், காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்பது, அனைத்து தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் விருப்பம். நாங்கள் அனைவரும் எடுத்த முயற்சிதான், ஆட்சியில் பங்கு கோரிக்கை.

காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பதை, கட்சி தொண்டர்களும் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். கட்சி பலத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப, சமமான மதிப்பு, மரியாதை, எல்லாவற்றிலும் பங்கு தேவை. கடந்த 30 ஆண்டுகளாக, இதற்கான விவாதமும் கேள்வியும் எழாமல் இருந்தது. இப்போது எழுந்திருப்பதே வெற்றி தான்.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் தொண்டர்களின் ஓட்டுகளால் தான் வெற்றி பெற்றதாக சொன்னீர்கள். ஆனாலும், காங்கிரசுக்கு உரிய இடங்களை, தி.மு.க., தரவில்லை. ஆட்சியிலும் பங்கு இல்லை என, கைவிரித்தது வருத்தம் அளிக்கிறதா?


ஒரு கட்சியின் ஓட்டுகள், கூட்டணியில் இருக்கிற மற்ற கட்சிகளுக்கு இடம் மாற வேண்டும். அதுதான் தர்மம். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தி.மு.க., ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் ஓட்டுகளும் கிடைக்க வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்.

கூட்டணி கட்சிகளிடம், ஓட்டுகள் இடம் மாறவில்லை என்றால், தனித்து நிற்கலாமே; ஏன் கூட்டணி அமைக்க வேண்டும்? ஆட்சியில் பங்கு கிடைக்கவில்லை என்பதற்கு வருத்தமெல்லாம் இல்லை. அது முடிந்து போன கதை. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன், தேர்தலை சந்திக்கிறோம்.

த.வெ.க., தலைவர் விஜயை, நீங்கள் எத்தனை முறை சந்தித்து பேசினீர்கள்? கட்சி தலைமை சொல்லி சந்தித்ததாக கூறினீர்கள். கட்சி தலைமை என்பது காங்கிரஸ் தலைவர் கார்கேவா அல்லது முன்னாள் தலைவர் ராகுலா?


விஜயை பல முறை சந்தித்தேன். தலைமை சொல்லிதான் சந்தித்தேன். இன்னும் சொல்லப்போனால், அந்த மீட்டிங்கில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவரும் கலந்து கொண்டார்.

நீங்கள் எடுத்த முழு முயற்சி காரணமாக, தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி, த.வெ.க., உடன் கூட்டணி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சந்தித்து பேசியதால், முட்டுக்கட்டை விழுந்ததா?


அது பற்றி எனக்கு விபரம் தெரியாது. முதியோரும் அவர் குடும்பத்தினரும், எல்லா பலனும் அனுபவித்த மாதிரி, கட்சித் தொண்டர்களும், எதிர்காலத்தில் அரசியல் பலன் அடைய வேண்டும் என்பதற்காக தான், நாங்கள் முயற்சி எடுத்தோம்.

தொகுதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை. பணத்திற்கு விற்கப்பட்டுள்ளது என்ற ஜோதிமணி எம்.பி.,யின் குற்றச்சாட்டு சரியா? நீங்களும் கார்ட்டூன் வரைந்து விமர்சித்தீர்கள். என்ன காரணம்?


கடந்த 20 ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரஸ் கட்சியில் இதே கதை தான். யாருக்கு 'சீட்' கொடுக்கப்பட்டது, கொடுக்கப்படவில்லை என்று நான் பார்க்கவில்லை.

இதற்கு ஒரே தீர்வு தான். தொகுதிகள் அதிகமாக்கப்பட வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை வாங்கினால், சச்சரவு வரத்தான் செய்யும். அதனால் தான் கூடுதல் தொகுதிகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டோம். 60 - 70 தொகுதிகளை வாங்கியிருந்தால், அனைவரையும் திருப்திபடுத்தியிருக்க முடியும். தகுதி படைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்காது.

தமிழகத்தின் கடன் தொகை, உ.பி., மாநிலத்தை விட அதிகம் என்றீர்கள். அப்படியென்றால் தி.மு.க., ஆட்சியில், தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளதா?


அசோகா பல்கலையில் பேராசிரியராக இருக்கிறேன். பொருளாதார நிபுணர் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்தேன். அதாவது, கடந்த 15 ஆண்டு காலத்தில் கடன் தொகை, கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகி உள்ளது.

பொருளாதாரம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்று மட்டும்தான் சொன்னேன். எந்த ஒரு குறிப்பிட்ட ஆட்சி குறித்தும், நான் குறை சொல்லவில்லை. தி.மு.க., ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது.

காஞ்சிபுரத்தில் 'ஐபோன்' தொழிற்சாலை உட்பட, பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாகி உள்ளன. அதனால், தி.மு.க., அரசு பாராட்டுக்குரிய அரசு தான்.

தமிழக அரசின் கடனால், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும், 2 லட்சம் ரூபாய் கடன் சுமை உள்ளது என்ற குற்றச்சாட்டு சரியா?


இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், கடன் சுமை என்பது பிரச்னைக்குரியது தான். எல்லாரும் சேர்ந்துதான் கடனை குறைக்க முடியும். அரசு திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கும் போது, அதற்கான நிதி எங்கே இருந்து வரும் என்ற விளக்கத்தை, பதிலாக தெரிவிக்க வேண்டும். எல்லா கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

த.வெ.க., எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்; எத்தனை தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கு வரும்; அக்கட்சியால் எந்த கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும்?


இதற்கான பதிலை யாராவது சொல்லிவிட்டால், அவர்களை கும்பிட வேண்டும். பதில் யாருக்கும் தெரியாது. ஜோதிடர், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கணித்து கூறுகிறோம் என சொன்னால், பொய் சொல்கின்றனர் என்று தான் அர்த்தம்.

என் கணிப்பில் த.வெ.க., புதிய கட்சி. அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அது மறுப்பதற்கில்லை. ரசிகர்கள் கூட்டம் ஓட்டுகளாக மாறுமா என்றால் மாறும். ஓட்டு வாங்குவது வேறு; எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெறுவது வேறு. விஜய்க்கு 20 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். எந்த கூட்டணிக்கு பாதிப்பு வரும் என்பதை, யாரும் சொல்ல முடியாது. தேர்தல் முடிவில் தான் தெரியவரும்.

இணையதளத்தில் ஜனநாயகன் படம் கசிந்ததற்கு, ராகுல் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?


நாங்கள் கண்டிக்கிறோம். தேர்தல் பிரசாரத்தில், ராகுல் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கேரளாவில் 92 இடங்களிலும், அசாமில் 72 இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 இடங்களில் தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் வெறும் 28 இடங்கள் தான்.

காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடும் மாநிலங்களில், பிரசாரத்திற்காக அதிக நேரத்தை ராகுல் செலவிடுவது இயல்பானது தான்.

காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கொடுக்காமல், அதே சமயம் மற்ற மாநிலங்களை விட்டுவிட்டு, எங்கள் தலைவர் இங்கு மட்டும் தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாக இருக்காது.

புதுச்சேரியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் - ராகுல் ஒரே நாளில் பிரசாரம் செய்தும், இருவரும் இரு துருவங்களாக பிரிந்து பிரசாரம் செய்தது ஏன்? தி.மு.க., பெயரை ராகுல் பிரசாரத்தில் பயன்படுத்தாதது ஏன்?


ஊடகங்கள் தான் தேவையில்லாமல் பிரச்னை செய்கின்றன. இருவரும் ஒரே நேரத்தில் பிரசாரம் செய்வதற்கு, கால அட்டவணை சமமாக இருக்க வேண்டும்.

புதுச்சேரியில் ராகுல் பிரசாரம் செய்த நாளில், கேரளாவிலும் பிரசாரம் செய்ய வேண்டி இருந்தது. அவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது. வேறு மாதிரி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

த.வெ.க.,வை தமிழகத்தின் மூன்றாவது சக்தி, மாற்று சக்தி என சொன்னீர்கள். இது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைக்கும் சக்தி என, நீங்கள் கருதவில்லையா?


நான் மட்டுமல்ல, பத்திரிகைகளும் ஊடகங்களும் சொல்கின்றன. மாற்று சக்தி உருவாகும் போது, எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்வது தானே ஆராய்ச்சித் துறையின் கடமை.

மகளிர் உரிமை தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்பது மூட நம்பிக்கை என கூறி, தி.மு.க., கூட்டணியில் குண்டு வீசியது ஏன்?


டில்லியில் ஆம் ஆத்மி, ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.,காங்., ஆகிய கட்சிகள் மகளிர் உரிமைத் தொகை வழங்கியும், மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தோல்வி தான் கிடைத்தது. அதனால் தான் அதீதமான நம்பிக்கையை வைக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் எச்சரித்தேன்.

தலைமைச் செயலர், உள்துறை செயலர், போலீஸ் அதிகாரிகளை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்தது தி.மு.க., வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?


ஒன்றை மட்டும் உறுதிப்படுத்துகிறது. அது, பா.ஜ.,வின் கைப்பாவையாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்பது தான். பா.ஜ., கட்சியின் ஒரு துறையாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.

காவிரியில் மேகதாது அணை கட்டுவதாக கூறும் கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரை, தமிழகத்திற்கு ஸ்டாலின் அழைத்து வந்து, தேர்தல் பிரசாரம் செய்ய வைத்து, விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டதாக பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளாரே...


காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பிரச்னையில், சிவகுமாருடன் பேச்சு நடத்தி, சுமுகமாக தீர்வு காண முடியும் என்ற எண்ணத்தில், அவரை அழைத்ததாக பார்க்க வேண்டும்.

நாடு முழுதும், காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது ஏன்?


காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை. இந்தியாவின் சராசரி வாக்காளர்கள் 30 வயதிற்கும் குறைவானவர்கள். காங்கிரஸ் கட்சி மிகவும் பழமையானதாகவும், இளம் தலைமுறையினருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் இருப்பதாக பார்க்க முடிகிறது.

ராகுலால் மட்டுமே அவர்களுடன் இணைய முடிகிறது. கட்சியில் மற்றவர்களால் அது முடிவதில்லை. கட்சி ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி, இளமையான மற்றும் புதிய திறமையானவர்களை முன்னிறுத்த வேண்டிய தருணம் இது. சொல்லாடல், தகவல் தொடர்பு முறை என, நாம் ஆடை அணியும் விதம் வரை, அனைத்திலும் ஒரு மாற்றம் தேவை.

உங்கள் அரசியல் பிரவேசம் எப்படி நடந்தது; ராகுலின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் மாறியது எப்படி?


அரசியலில் குடும்ப பின்னணி எனக்கு கிடையாது. ஒரு நடுத்தர குடும்பத்தில், சென்னையில் வளர்ந்து, படிப்புக்காக அமெரிக்கா சென்றேன். கடந்த 2009ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில், ஆதார் அட்டை திட்டப்பணிகளில் வேலை செய்தேன்.

பிரதமர் அலுவலகத்தில், பொருளாதார வளர்ச்சி திட்ட ஆராய்ச்சியாளராக பணியாற்றினேன். அப்போது மன்மோகன் சிங் வாயிலாக, ராகுலிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என் பணியை ராகுல் பாராட்டினார். அவர் தான் என்னை அரசியலுக்கு அழைத்தார்.

அவர் தலைவராக பொறுப்பேற்ற பின், கட்சியில் சேரும்படி அழைத்தார். அதை ஏற்றுக் கொண்டேன். அவர்தான் என் தலைவர் மற்றும் வழிகாட்டி.

தற்போது அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவராக இருக்கிறேன். சசி தரூர் ஆறு ஆண்டு காலம் தலைமை வகித்த புரொபஷனல் காங்கிரஸ் தலைவராகவும் தற்போது இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

ஏப் 17, 2026 01:26 am

கூடுதல் தொகுதிகள் கொடுத்து இருந்தால் சத்தியமூர்த்தி பவனில் நிச்சயம் நிறைய சடலங்கள் விழுந்து இருக்கும்.

Reply Rate this
ஏப் 16, 2026 03:47 pm

யாரு இவுரு ? - 0/28 ஆக்காம உட மாட்டாரு போலயே ...

Reply Rate this
ஏப் 16, 2026 03:33 pm

திருமாவளவனை மிரட்டி கூடுதலாக ஒரு சீட் காங்கிரஸ்க்கு கொடுத்ததை மறந்து பேசுகிறீர்கள். அவரை போலவே பிரேமலதா மிரட்டலுக்கு பணிந்திருந்தால் கூடுதலாக இன்னும் 2 சீட் கிடைத்திருக்கலாம்.

Reply Rate this
ஏப் 16, 2026 12:18 pm

இருக்கிற தொகுதிக்கே நிறுத்த ஆள் இல்லை இந்த லட்சணத்தில் இன்னும் கூடுதல்..... நீங்கள் எல்லாம் தெரிந்துதான் அரசியல் பண்றிங்களா இல்லை ஒன்னும் புரியல

Reply Rate this
ஏப் 16, 2026 07:44 am

திருவாரூர் கும்பலுக்கு சிக்க மாட்டார்.

Reply Rate this
ஏப் 16, 2026 06:49 am

ராகுல் பிரச்சாரத்தை எங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை . அவர் போன, போகும் இடமெல்லாம் தோல்வி தான். அவர் முஞ்சிக்கி வோட்டெல்லாம் கிடைக்காது விடியாமுஞ்சி . உம்மைப்போல் காங்கிரசை அழிக்க வந்த கோடரிக்காம்பு ராகுல். இந்தியா முழுவதும் அழிச்சாச்சு. தமிழ் நாட்டில் திமுக தயவில் வாழ்ந்து வருகிறது. இந்த தேர்தலோடு அதுவும் காலி.

Reply Rate this