'ஸ்டாலினிடம் நேர்மையை எதிர்பார்ப்பது நம் தவறு!': தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் வேட்பாளர் தேர்வு முதல் தேர்தல் அறிக்கை வெளியீடு வரை, மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் தாமதமாகவே நடந்தன. பிரசாரம் செய்ய மிக குறைவான நாட்களே உள்ள நிலையில், பா.ஜ., வேட்பாளர்கள் வெல்வது சிக்கலாகிவிடாதா?
எந்த கட்சியாக இருந்தாலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு பின்தான் தங்கள் பிரசாரத்தை தொடங்குகின்றனர். அதைத்தானே பா.ஜ.,வும் செய்தது. மேலும், தேர்தலின் போது மட்டுமே மக்கள் பணி செய்யும் கட்சி பா.ஜ., இல்லை. எங்கள் வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதியில், பல ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வருகின்றனர். ஆகவே, இதை ஒரு பிரச்னையாக பார்க்கவில்லை.
தி.மு.க., தற்போது வழங்கி இருக்கும் தேர்தல் அறிக்கையில், முந்தைய 2021ம் ஆண்டு வழங்கிய 71 வாக்குறுதிகளையே மீண்டும் வழங்கியுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. பா.ஜ., கொடுத்திருக்கும் வாக்குறுதிகள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக்கூடியவை.
நெல்லுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவதை பரிசீலிக்கும்படி, மத்திய அரசு ஜனவரியில் எழுதிய கடிதத்தை, தற்போது அனுப்பியதாகவும், அதிலும் ஊக்கத்தொகையை நிறுத்தும்படி மத்திய அரசு கூறுவதாகவும், முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது வெறும் அரசியலா அல்லது நிர்வாக பிரச்னையா?
மத்திய அரசு நடப்பாண்டு ஜனவரி மாதம் எழுதிய கடிதத்தை, தமிழக முதல்வர் ஏப்ரல் மாதத்தில் தான் படிக்கிறார் என்றால், எந்த லட்சணத்தில் ஆட்சி நடத்துகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு சொல்லவில்லை. சிறுதானியம், எண்ணெய் வித்துகள் போன்றவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்கினால், நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றே குறிப்பிட்டுள்ளனர். வழக்கம்போல, இதை திரித்து அரசியல் செய்கிறார் முதல்வர்.
தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்ப பெறாவிட்டால், தி.மு.க.,வின் பழைய முகத்தை பார்க்க நேரிடும் என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாரே?
தி.மு.க.,வின் பழைய முகம் என்றால் என்ன? 1965ல், ஹிந்தி எதிர்ப்பு என்று மாணவர்கள் போராடியபோது, அதை பயன்படுத்தி கொண்டு ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தனரே, அந்த பழைய முகமா அல்லது நெருக்கடி நிலையில் கொடுங்கோல் ஆட்சியை அனுபவித்த பின்னரும், 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' என்று சிவப்பு கம்பளம் விரித்து சரண்டர் ஆனரே, அந்த பழைய முகமா. அதை ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில் பார்லிமென்ட் தொகுதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைய போகிறது என்று இரண்டு ஆண்டுகளாக பொய் பிரசாரம் செய்த ஸ்டாலின், உண்மையாகவும் நேர்மையாகவும் பேசுவார் என்று எதிர்பார்ப்பது நம் தவறு.
முதல்வர் சொல்வதை போல், பார்லிமென்டில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமா?
குறையாது என்று பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் பலமுறை தெரிவித்து விட்டனர். பார்லிமென்டில், தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 39ல் இருந்து 59 ஆக உயரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு பின்பும், பொய் பிரசாரங்களை செய்து வருகிறார் ஸ்டாலின்.
புதிய மசோதா வாயிலாக, லோக்சபாவை போல் ராஜ்யசபாவில் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. இதனால், ராஜ்யசபாவின் குரல் குன்றிவிடாதா?
ராஜ்யசபா உறுப்பினர்கள் உயர வேண்டுமெனில், சட்டசபை உறுப்பினர்கள் உயர வேண்டும். சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரும்போது, ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்.
இந்த முக்கியமான மசோதாவை கொண்டு வர, மத்திய அரசு, தேர்தல் நேரத்தை ஏன் தேர்ந்தெடுத்தது?
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஏதோ ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தேர்தல் நேரத்தில், இப்படிப்பட்ட முக்கியமான மசோதாக்கள் வேண்டாம் என்றால், எதிர்க்கட்சிகள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நிலைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023லேயே நிறைவேறி விட்டது. அதையும், தற்போதைய மசோதாவையும் பா.ஜ., ஏன் முடிச்சு போடுகிறது?
தற்போது உள்ள எண்ணிக்கையில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கினால், 179 இடங்களே கிடைக்கும். எண்ணிக்கை 816-ஆக உயரும்போது, 269 இடங்கள் மகளிருக்கு கிடைக்கும். நாடு முழுதும் மகளிரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே மத்திய பா.ஜ., அரசின் எண்ணம். ஆனால், சாமானிய பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்பது தி.மு.க.,வின் எண்ணம். அவர்களை பொறுத்தவரை, பெண்கள் எம்.பி.,யாக இருக்க வேண்டும் என்றால், குடும்ப அரசியலின் வாரிசாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
கடந்த 2023ல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவில், 2026க்கு பிந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என, குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது, 2011 மக்கள் தொகை கணக்கின்படி செய்யப்படும் என்று சொல்வதற்கு காரணம் என்ன?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதிகள் எண்ணிக்கை 50 சதவீத உயர்வின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவித்து விட்டார். அதை எழுத்துபூர்வமாக வழங்கவும் தயார் என்று சொல்லி விட்டார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது என்பதை, நாங்களும் முன்பிருந்து சொல்லி வருகிறோம்.
இந்த மசோதாவை நிறைவேற்ற போதிய எண்ணிக்கை இல்லாதபோதும் மத்திய அரசு எதற்காக கொண்டு வந்தது?
மசோதாவால் எந்த பாதிப்பும் இல்லாதபோது, எதிர்க்கட்சிகள் எதற்கு மசோதாவுக்கு எதிராக ஓட்டு போட வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிராக போட்ட ஓட்டு, அவர்கள் பெண்களுக்கு வழங்கும் பிரதிநிதித்துவத்திற்கு எதிராக போட்ட ஓட்டு.
மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமைத் தொகையாக, 3,000 ரூபாய் வழங்கப்படும் என, அமித் ஷா அறிவித்திருக்கிறார். இலவசங்களை விமர்சித்து வந்த பா.ஜ., தற்போது தி.மு.க., பாதையில் செல்லத் தொடங்கி இருக்கிறதா?
இலவசங்களுக்கும் நலத்திட்டங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பே, பா.ஜ., ஆளும் மாநிலங்களான அசாம் மற்றும் மத்திய பிரதேசத்தில், மகளிருக்கு உரிமைத் தொகை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதனால், மேற்கு வங்கத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்றும் புதிதல்ல.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தால், தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுமா?
தேசிய கல்விக் கொள்கை ஏழை - எளிய மாணவ செல்வங்களுக்கு, உயர்தர கல்வியும் சம கல்வி உரிமையும் வழங்கும். தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக மட்டுமே, தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், பிரதமர் மோடி ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் காட்டிய வேகம், தற்போது இல்லை. தமிழகத்தை விட மேற்கு வங்கம் தான் முக்கியம் என, கருதுகின்றனரா?
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர், தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். மக்களை சந்திக்கின்றனர். ஐந்து மாநில தேர்தலில், நாட்டில் முதன்மை பொறுப்புகள் வகிக்கும் தலைவர்களே தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வருகின்றனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழங்குவதற்கு மத்திய அரசின் திறனின்மையே காரணம் என, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். முன்னாள் போலீஸ் அதிகாரி என்ற முறையில், இதற்கு உங்கள் பதில் என்ன?
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு தமிழகம் வழியாக கடத்தி செல்லவிருந்த போதை பொருட்களை, குஜராத் அருகே நம் நாட்டின் கடல் எல்லையில் வைத்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பலமுறை முடக்கியுள்ளது.
இங்கே பெரிய பிரச்னை கஞ்சா. தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடிபட்ட கஞ்சாவின் அளவு வெறும் 65,518 கிலோ. அதாவது ஒரு நாளைக்கு 35 கிலோ; அவ்வளவு தான். கண்துடைப்பு நடவடிக்கையாக இங்கும் அங்கும் ஓரிரு வழக்குகள் பதிவாகின்றன. அவர்கள் யாரும் கஞ்சா விற்கும் முக்கிய புள்ளிகள் இல்லை. தி.மு.க., ஆட்சியில் காவல் துறையின் கையை கட்டி வைத்துள்ளது தான், பெருகும் கஞ்சா புழக்கத்திற்கு முக்கிய காரணம்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், குறைந்த தொகுதிகளையே வாங்கியுள்ள பா.ஜ.,வால் எதையாவது சாதிக்க முடியுமா?
தி.மு.க.,வால் அதன் கூட்டணி கட்சிகளுக்கு, ஐந்து ஆண்டுகளில் ஏதாவது நன்மை நடந்ததா? வி.சி.க.,வினரால் ஒரு கொடிக்கம்பம் கூட நட முடியவில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதுபோல இருக்காது. மத்தியில் பா.ஜ., அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றே தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி, தனது தேர்தல் பிரசாரத்தில் பேசி வருகிறார். அதனால், தி.மு.க., கூட்டணியில் இருப்பது போன்ற குழப்பங்கள் எங்கள் கூட்டணியில் இருக்காது.
பிரதமரும், பா.ஜ., பிரமுகர்களும் ஸ்டாலின் ஆட்சியை ஊழல் ஆட்சி என விமர்சிக்கின்றனர். ஊழலை பற்றி அவர்களுக்கு தெரியும் என்றால் நடவடிக்கை எடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?
சி.பி.ஐ.,க்கு வழங்கப்பட்ட பொது இசைவை தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் நீக்கினர். ஊழல் புகாரை ஆதாரங்களுடன் கொடுத்தும், முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் லஞ்ச ஒழிப்பு துறை இரண்டு ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், அமலாக்க துறையால் விசாரணை நடத்த முடியாது. ஆட்சி மாற்றத்திற்கு பின், தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்கள் சிறை கம்பி எண்ணுவர். இது உறுதி.
தமிழகத்தில், அமலாக்கத் துறையும், வருமான வரி துறையும் பல ரெய்டுகளை நடத்தி, பல வழக்குகளை போட்டுவிட்டன. அவை பற்றி செய்திகள் வந்த அளவிற்கு, தண்டனை பெரிதாக வரவில்லை. அந்த வழக்குகள் எல்லாம் அரசியல் காரணத்துக்காக போடப்பட்டவையா?
அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஊழல்வாதிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
கிருஷ்ணசாமி, செங்கோட்டையன், பன்னீர்செல்வம் என, பா.ஜ.,வை நம்பி ஏமாந்தவர்களின் எண்ணிக்கை நீள்கிறது. பா.ஜ., தொடர்ந்து ஏன் இப்படி செய்கிறது?
அனைவரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். காலம், நேரம், சூழல் ஆகியவை அனைத்து சமயங்களிலும் நமக்கு சாதகமாக இருக்காது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழக பா.ஜ., தலைவர்களில், நீங்கள் மட்டும் மாநிலம் முழுதும் பிரசாரம் செய்கிறீர்கள். மற்றவர்கள் ஏன் செய்யவில்லை?
கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பல மூத்த தலைவர்கள் இரண்டு, மூன்று தொகுதிகளில் தினந்தோறும் தேர்தல் பணி செய்து வருகின்றனர். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு, அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்பது.
இந்த தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை?
முன்பே சொன்னது போல, ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி, தினகரன், ஜான் பாண்டியன், வாசன் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 234 வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வது எங்கள் பொறுப்பு. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு அனைவரும் இணைந்து வேலை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
1. பழனிச்சாமி முதல்வர் ஆனாலும் பாஜக கொடிக் கம்பம் நட விடமாட்டார். மத்திய அரசு திட்டங்களுக்கு தனது பட ஸ்டிக்கர் ஒட்டுவார்.
௨. பாஜக தனது வேட்பாளர்களை எங்கே தேர்வு செய்தது? பழனிச்சாமி தானே சொல்லாமல் கொள்ளாமல் தொகுதிகளை அறிவித்து சங்கடத்தை ஏற்படுத்தினார்.
பாஜகவைப் போல் கூட்டணி கட்சிகளை கபளீகரம் பண்ணாமல் இருப்பதே திமுக அவர்கள் கூட்டணி கட்சியினருக்கு செய்யும் பெரிய உதவி!
திமுக ஃபைல்ஸ் வெளிடுவது போல அதிமுக ஃபைல்ஸும் விரைவில் வெளியிடுவேன் என முன்பு கூறினீர்களே... அதை ஏன் வெளியிடாமல் காலம் தாழ்த்துகிறீர்கள். அதை வெளியிட எது உங்களைத் தடுக்கிறது என்ற கேள்விகளையும் சேர்த்துக் கேட்டிருக்கலாம்... அதோடு எடப்பாடி ஒரு தற்குறி, 2026 தேர்தலில் அதிமுகவிற்கு நான்காம் இடம் கூடக் கிடைக்காது என்றெல்லாம் வசைபாடிவிட்டு இப்போது அதே கட்சியுடன் நீங்கள் பயணிக்கும் சூழல் உருவாகியிருக்கிறதே... அதற்காக வெட்கப்படவில்லையா என்ற கேள்வியையும் கேட்டு பதில் பெற்றிருக்கலாம்...
திமுக ஃபைல்ஸ் வெளிடுவது போல அதிமுக ஃபைல்ஸும் விரைவில் வெளியிடுவேன் என முன்பு கூறினீர்களே... அதை ஏன் வெளியிடாமல் காலம் தாழ்த்துகிறீர்கள். .

அண்ணாமலை அண்ணாமலை தான். இவர் முதல்வராக வரவேண்டும் அட்லீஸ்ட் உள்துறை அமைச்சர் ஆக வரவேண்டும்