பலத்தை கூட்ட அ.தி.மு.க., அணிகள் தீவிரம்; 'டிமாண்ட்' ஏற்றும் எம்.எல்.ஏ.,க்கள்
சென்னை: அ.தி.மு.க.,வில் இரு அணிகளும், தங்கள் எண்ணிக்கையின் பலத்தை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதால், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் பேரத்தை உயர்த்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஏற்பட்ட மோதலால், அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், 22 எம்.எல்.ஏ.,க்களும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் ஆகியோர் தலைமையில், 25 எம்.எல்.ஏ.,க்களும் பிரிந்து செயல்படுகின்றனர். தங்கள் அணியை பலப்படுத்த, இரு தரப்பும் தீவிரமாக முயற்சி செய்து வருவதால், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பேரத்தை உயர்த்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபையில் பெரும்பான்மையை த.வெ.க., அரசு நிரூபித்தாலும், வி.சி.க., - கம்யூ., கட்சிகள் எந்த நேரத்திலும், ஆதரவை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. அதனால் தான், அ.தி.மு.க.,வில் இருந்து, முன்கூட்டியே த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பிரதிபலனாக, அமைச்சர், வாரிய தலைவர் பதவிகளை தர, த.வெ.க., ஒப்புக் கொண்டுள்ளது.
முன்னணியில் உள்ள, 'மாஜி'க்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால், வேலுமணி தரப்பில் இருக்கும் 12 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை இழுக்க, பழனிசாமி பேசி வருகிறார். வெற்றி பெற்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும் தேர்தலில், 15 கோடி ரூபாய் வரை செலவு செய்து உள்ளனர். சிலர், கடனாளியாகி உள்ளனர். எனவே, 'உங்க கடனுக்கு நான் பொறுப்பு' என, பழனிசாமி உத்தரவாதம் அளிக்கிறார்.
இதையடுத்து, 'ஆட்சியில் பங்கு கிடைச்சா, மத்தவங்களுக்கு கடன் கொடுக்கும் இடத்துக்கு போயிடலாம்; பொறுமையா இருங்க' என வேலுமணி தரப்பும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேசி வருகின்றனர்.
இதற்கிடையே, இரு தரப்பு சொல்வதும் நடக்காமல் போகலாம் என்ற அச்சம், எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் உள்ளது. எனவே, யார் அதிகமாக கொடுக்கின்றனரோ, அவர்கள் பக்கம் சாய முடிவெடுத்து, இரு தரப்பிடமும் பேரத்தை ஏற்றி உள்ளனர். இரு தரப்பும் தங்களின் பலத்தை தக்க வைக்க, வேறு வழியின்றி , எம்.எல்.ஏ.,க்களிடம் பேசி வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்