அஜித், சிவகார்த்திகேயன் வந்திருந்தால் இதைவிட கூட்டம் அதிகம் வரும்: சீமான்
காரைக்குடி; “திராவிட கட்சிகள், தமிழகத்தை நாசமாக்கி விட்டன; இலவசங்கள் என்பது வளர்ச்சி அல்ல,” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.
காரைக்குடி தொகுதி வேட்பாளரான சீமான், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடிகளில் நடந்த ஓட்டுப்பதிவை நேரில் பார்வையிட்டார்.
பின் அவர் அளித்த பேட்டி:
கேரளாவில், தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதா? காங் - பாஜ கட்சிகள் இங்கேயும் உள்ளன. அவை, இலவசம் அறிவித்தனவா? திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தேர்தலை, ஜனநாயகம் என்று பெயரளவில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
'ஓட்டு போட, கூடுதலாக 2 மணி நேரம் அவகாசம் வேண்டும்' என த.வெ.க., தலைவர் விஜய் கேட்டது போல், கொடுத்திருக்க வேண்டும். தீபாவளி, பொங்கல் பண்டிகை போல ஜனநாயக பண்டிகை தான் தேர்தல்.
இலவசம் என்பது வளர்ச்சி அல்ல, இலவசத்தை எங்கிருந்து கொடுப்பீர், எங்கிருந்து எடுப்பீர்? மற்ற நாடுகள் கடன் வாங்குகின்றன. ஆனால், கடனை வாங்கி இலவசம் வழங்கவில்லை. கல்வி, மருத்துவம், குடிநீரை தரமாக தருகின்றன. தான் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது நிறைய வங்கிகளை திறந்ததாக காங்.,கை சேர்ந்த சிதம்பரம் சொல்கிறார். அப்படி என்றால், அவர் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவில்லை.
நாட்டை நேசிக்கிற ஒரு கூட்டம், நடிகரை நேசிக்கிற ஒரு கூட்டம். இதில் நாட்டை நேசிக்கிறது எந்த பக்கம் நிற்கப் போகிறது, நடிகரை நேசிக்கிறது எந்த பக்கம் நிற்க போகிறது என்று விரைவில் தெரியும். அஜித், சிவகார்த்திகேயன் வந்திருந்தால் இதைவிட கூட்டம் அதிகம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்