Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அல்லா, இயேசு பாதுகாக்கவில்லையா? சிறுபான்மையினருக்கு சீமான் கேள்வி

 அல்லா, இயேசு பாதுகாக்கவில்லையா? சிறுபான்மையினருக்கு சீமான் கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காரைக்குடி: ''சிறுபான்மையினருக்கு ஸ்டாலின் தான் பாதுகாப்பு என்றால் அல்லா, இயேசு பாதுகாக்கவில்லையா?'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீமான், நேற்று புதுவயல் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது: சாராயத்திற்கு 'வீரன்' என்று பெயர் வைத்தால், சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், புலித்தேவன், மருது பாண்டியர்கள், வேலுநாச்சியார் ஆகியோருக்கு என்ன பெயர்? தமிழகத்தில் தான் கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் எல்லாம் தேர்தலில் நிற்கின்றனர்.

விடுதலை பெற்ற 80 ஆண்டு கால இந்தியாவில், ஒரு முஸ்லிமோ, கிறிஸ்துவரோ பிரதமராக இருந்தது உண்டா? ஒன்றுக்கும் உதவாத ஜனாதிபதி பதவியில் உட்கார வைப்பர்.

சிறுபான்மையினர் என யாராவது சொன்னால், அவர்களை தேய்ந்த செருப்பால் அடியுங்கள்.

சிறுபான்மையினருக்கு ஸ்டாலின் தான் பாதுகாப்பு என்றால் அல்லா, இயேசு பாதுகாக்கவில்லையா? கடந்த 50 ஆண்டுகளாக அவர்களுக்கு ஓட்டு போட்ட நீங்கள் மாற மாட்டீர்கள். நான் அல்லாவிடம் பேசிக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

தேவகோட்டையில் நடந்த பிரசாரத்தில் சீமான் பேசுகையில், ''நான் திரள் நிதி திரட்டி, கட்சி நடத்துகிறேன். நீங்கள் திருட்டு நிதி வைத்து, கட்சி நடத்துகிறீர்கள். பிச்சை எடுக்கிறார் சீமான் என்கிறீர்கள். ஒருவர் இரு தொகுதியில் போட்டியிடுவதும், ஒரு பொறுப்பில் இருக்கும் போது, மீண்டும் போட்டியிடுவதும் எங்கள் கோட்பாடு இல்லை.

''மறுபடியும் ஒரு தேர்தல் திணிக்கப்படுவதை தடுக்க, இரண்டாவது வந்தவரை தேர்வு செய்ய வேண்டும் அல்லது பதவி விலகுபவரிடம் பணத்தை வசூலித்து தேர்தல் நடத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement