அண்ணாமலை அன்பு கூட்டம்: திருப்பூரில் ஆலோசனை
நமது நிருபர்
அண்ணாமலை அன்பு கூட்டம்' என்ற பெயரில், அவரது ஆதரவாளர்கள், திருப்பூரில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 11ல், தமிழக பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அல்லது பா.ஜ.,வில் தேசிய பொறுப்பு வழங்கப்படும் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், தலைவர் பதவி பறிக்கப்பட்டு, ஓராண்டாகியும் அண்ணாமலைக்கு கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில், ஒரு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட விரும்பியும், அவருக்கான தொகுதியை பா.ஜ., பெறவில்லை.
இதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள், 'அண்ணாமலை அன்பு கூட்டம்' என்ற அமைப்பை துவக்கியுள்ளனர். அதன் அமைப்பாளர்களாக தம்பி, வேலுமணி, ராஜசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தலைமையில், திருப்பூரில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில், சட்டசபை தொகுதிவாரியாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, அக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறியதாவது:
அண்ணாமலை தலைவரான பின் தான், கட்சியினரை தாண்டி இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பா.ஜ., போய் சேர்ந்தது. இப்போது, அவரை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு சதி செய்துள்ளனர். தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும்.
அதற்கான தொகுதியை, பா.ஜ., தலைமை பெற்றுத்தர வேண்டும். இல்லையெனில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க வேலை செய்வோம். அதற்காகவே ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்