தேர்தல் முடிவுகளுக்கு 'பெட்டிங்'; இளம் வயதினர் குறிவைப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, மே 4ம் தேதி நடக்க உள்ள நிலையில், எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; த.வெ.க., எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என, சென்னை உட்பட பல்வேறு இடங்களில், 'பெட்டிங்' எனப்படும் சூதாட்டம் நடக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சிகள் இடையில், நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் - வி.சி., உட்பட, 25 கட்சிகளும், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., உட்பட, 12 கட்சிகளும் உள்ளன. இம்மாதம், 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த நிலையில், மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
இந்நிலையில், 'தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், த.வெ.க., எத்தனை இடங்களில் வெற்றி பெறும், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவாரா, த.வெ.க., பிரிப்பது அ.தி.மு.க., ஓட்டுகளையா, தி.மு.க., ஓட்டுகளையா' என, சென்னையில் மண்ணடி, சவுகார்பேட்டை மற்றும் திருவள்ளூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு இடங்களில் 'பெட்டிங்' நடக்கிறது. இதில், 10,000 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை, சூதாட்டம் நடக்கிறது.
'தற்போது, 'கூகுள் பே' வாயிலாக பணத்தை செலுத்தி, 'பெட்டிங்' தொகை செலுத்தினால், ஓட்டு எண்ணிக்கை தினத்தன்று இரவே பரிசு தொகை வழங்கப்படும்' என்று கூறி சிலர், பணம் வசூலிக்கின்றனர்.
குறிப்பாக, 18 வயது முதல், 30 வயது வரையிலான, இளம் வயதினரை குறிவைத்து, அவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சூதாட்டம் குறித்து தகவல் தெரிவித்து, பெட்டிங்கில் சேர்க்கின்றனர். இதை காவல் துறையினர் கண்காணித்து, சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்