தொகுதிகளை மாற்றி கேட்ட பா.ஜ.,; பழனிசாமி கைவிரிப்பால் ஏமாற்றம்
சென்னை: அ.தி.மு.க., சார்பில் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
இதையடுத்து, வேளச்சேரி, தி.நகர், பழனி என, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற பா.ஜ.,வின் கோரிக்கையை, பழனிசாமி நிராகரித்து விட்டது உறுதியானது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அ.தி.மு.க., தலைமை தாங்குகிறது. அக்கட்சி, கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான பா.ஜ.,வுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியது.
இதில், பா.ஜ., பெரிதும் வலியுறுத்தி கேட்ட தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம், பழனி, திருப்பரங்குன்றம், சிங்காநல்லுார் உள்ளிட்ட பல தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
இது, கட்சித் தொண்டர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விபரம், மேலிடத் தலைவர்கள் வாயிலாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டு, தி.நகர், வேளச்சேரி, பழனி ஆகிய தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
அவரும், தன் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து, தகவல் தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, பழனிசாமி வெளியிடாமல் இருந்தார்.
இதனால், உறுதியாக வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கு இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
அதில், வேளச்சேரி, தி.நகர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். எனவே, தொகுதிகளை மாற்றித் தர பா.ஜ., விடுத்த கோரிக்கையை, பழனிசாமி நிராகரித்திருப்பது உறுதியாகி விட்டது. அதை எதிர்பார்த்திருந்த பா.ஜ.,வுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்