அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து ரேஷன் கடை வசதி: கிருஷ்ணமூர்த்தி
திருத்தணி: “ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி மற்றும் ரேஷன் கடை வசதி ஏற்படுத்தி தரப்படும்,” என, தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார்.
திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.
இவர், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் எரும்பி, சின்னநாகபூண்டி வீரமங்கலம், காட்டூர், மகான்காளிகாபுரம் மற்றும் கோபாலபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
காட்டூர் கிராமத்திற்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதிக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின், அப்பகுதி பெண்கள், 'எங்கள் பகுதியில் நிரந்தர ரேஷன் கடை மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும்' என, கோரிக்கை வைத்தனர்.
அதற்கு கிருஷ்ணமூர்த்தி, ''நான் வெற்றி பெற்றதும், அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து மற்றும் ரேஷன் கடை ஏற்படுத்தப்படும்,” என, வாக்குறுதி அளித்தார்.
பின், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி பேசியதாவது:
அனைத்து குடும்பங்களும் மின்சாதன பொருட்கள் வாங்க 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும். புதுப்பெண் திட்டத்தில், 1,000 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
அதேபோல், மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு முரசு சின்னத்தில் ஓட்டு போட்டு, மீண்டும் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மலர செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்