Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 செல்லப்பாண்டியன் உள்ளடி பா.ஜ.,வினர் 'எஸ்கேப்'

 செல்லப்பாண்டியன் உள்ளடி பா.ஜ.,வினர் 'எஸ்கேப்'

துா த்துக்குடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் பா.ஜ., நிர்வாகிகள் சிலர், தங்கள் பகுதியில் செல்லப்பாண்டியனுக்கு ஆதரவாக சொந்த செலவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

செல்லப்பாண்டியன் கிறிஸ்தவர் என்பதால், கையில் எப்போதும் பைபிள் வைத்திருப்பார். கடந்த 2012ல், அவர் அமைச்சராக இருந்தபோது, கையில் பைபிள் வைத்துக்கொண்டு திருச்செந்துார் கோவிலுக்குள் செல்ல முயன்றதை, ஹிந்து முன்னணியினர் கடுமையாக எதிர்த்தனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த துாத்துக்குடி டயோசீசன் தேர்தலில், செல்லப்பாண்டியன் ஆதரவு அணி வெற்றி பெற்றது. அவர்கள் வாயிலாகத்தான், சீட்டையும் அவர் உறுதி செய்தார். சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்கள் ஓட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் களப்பணியாற்றி வருகிறார்.

ஆனால், தன் பிரசாரத்தின் போது, கூடவே, பா.ஜ.,வினர் அதிக கொடிகளை ஏந்தி செல்வதையும், 'பாரத் மாதா கீ ஜே' என கோஷமிடுவதையும் அவர் விரும்பவில்லை. ஹிந்துக்கள் ஓட்டு எப்படியாவது கிடைத்து விடும்; ஆனால், பா.ஜ.,வால் கிறிஸ்தவர் ஓட்டு கிடைக்காமல் போனால் என்ன செய்வது என புலம்பிய செல்லப்பாண்டியன், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின், பா.ஜ., நிர்வாகிகளை அழைத்து பேசிய அவர், ஒரு வாகனத்தை கொடுத்து, 'நீங்கள் தனியாகவே பிரசாரம் செய்யுங்கள்' என 'அன்பாக' கேட்டுக்கொண்டார். அவரது 'அன்பை' முதலில் புரிந்து கொள்ளாத பா.ஜ., நிர்வாகிகள், அவர் கொடுத்த தனி வாகனத்தில் பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த உள்ளடியை உணர்ந்துகொண்ட பின், தற்போது எஸ்கேப் மூடுக்கு சென்று விட்டனர்.

Advertisement