காங்., எம்.பி.,யின் 'வடக்கு லட்சியம்': 'செக்' வைத்த தி.மு.க.,
மதுரை: 'மதுரை வடக்கு தொகுதியை பெறுவது தான் எங்கள் லட்சியம்' என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் முழங்கினார். ஆனால் தற்போது மதுரை மத்திய தொகுதியை காங்., மாநில தலைமை குறி வைத்துள்ளது.
தி.மு.க.,- காங்., கூட்டணி அமைவதற்கு முன் ஏற்பட்ட முட்டல் மோதல் போக்கின் போது மதுரையில் நடந்த தி.மு.க., கூட்டத்தில், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான நகர் செயலாளர் தளபதி, பூத் கமிட்டிக்கு கூட காங்.,ல் ஆள் இல்லை. முதல்வர் ஸ்டாலின் இல்லையென்றால் இண்டி கூட்டணியே இல்லை என விமர்சித்தார். அதற்கு, 'தளபதி எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அக்கட்சி மாநில தலைவர்,மாணிக்கம் தாகூர் எம்.பி., போன்றோர் கொந்தளித்தனர்.
இதையடுத்து தளபதியின் 'வடக்கு தொகுதியில் வரும் தேர்தலில் காங்., போட்டியிடும். வேட்பாளரும் ரெடி. அகில இந்திய தலைவர் கார்க்கேவிடம் பேசி அத்தொகுதியை பெறுவோம். மதுரை வடக்கு எங்கள் லட்சியம்' என தொடர்ந்து மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டு வந்தார். ஆனால் தி.மு.க.,- காங்., கூட்டணி உறுதியானதற்கு பின் அவர் அதுபோன்ற கருத்துக்களை பொதுவெளியிலோ, அவரது 'எக்ஸ்' தளத்திலோ குறிப்பிடவில்லை.
இந்நிலையில், காங்.,க்கு 28 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியது. எந்தெந்த தொகுதி வேண்டும் என முதற்கட்டமாக 39 தொகுதிகள் கொண்ட ஒரு உத்தேச பட்டியலை வெளியிட்டது. அதில் மதுரை வடக்கு இடம் பெறவில்லை. மாறாக மத்திய தொகுதி இடம் பெற்றிருந்தது. 'உத்தேச பட்டியலில் உண்மை இல்லை' என மாநில காங்., மறுத்தாலும், அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: திமு.க., - காங்., கூட்டணி அமைவதற்கு முன் விஜயின் த.வெ.க., உடன் கூட்டணி வைக்க வேண்டும் என கனவில் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் போன்றோர் இருந்தனர். அவர்கள் பேச்சும் ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுத்தது. கூட்டணி முடிவிலும் இழுபறி நீடித்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் முயற்சியால் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதையடுத்து காங்., மாநில தலைமை மூலமே வடக்கு தொகுதியை தவிர்க்கும் வகையில் தி.மு.க., 'செக்' வைத்து விட்டது. அமைச்சர் தியாகராஜன் இம்முறை சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் மனநிலையில் உள்ளதாக தெரிகிறது. அவர் அவ்வாறு மாற விரும்பினால் அந்த தொகுதியை காங்.,க்கு ஒதுக்க வேண்டும் என காங்., எதிர்பார்க்கிறது. ஆனால் மேலுார் தொகுதியே மீண்டும் ஒதுக்கும் முடிவில் தான் ஆளுங்கட்சி உள்ளது என்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்