தி.மு.க., - அ.தி.மு.க., 'பக்கா டீலிங்': தஞ்சையில் போட்டு தாக்கிய விஜய்
சென்னை: ''நான் இல்லன்னா நீ; நீ இல்லன்னா நான். நமக்குள்ள எவனும் வந்திடக் கூடாது. வெளியில் நாம அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கிட்டாலும், நம்ம 'டீலிங்' பக்காவா இருக்கணும் என தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் செயல்படுகின்றன,'' என, த.வெ.க., தலைவர் விஜய் விமர்சித்தார்.
தஞ்சாவூரில் நேற்று நடந்த த.வெ.க., நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:
டில்லி டில்லி என கூவுவது, அடிக்கும் கொள்ளையால் 'ரெய்டு' வந்ததும், டில்லிக்கு வெள்ளைக்கொடி பிடிக்கும் வேலையை ஸ்டாலின் சார் செய்கிறார். இதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது. சின்ன பசங்க கூட, 'ஓம் சக்தி, பராசக்தி, தி.மு.க., ஒரு தீயசக்தி' என சொல்கின்றனர். கிரிக்கெட்டில் கூட தமிழக அணியை, டில்லி அணி தொட முடியாது. கிரிக்கெட்டில் விசில் போடுவது சி.எஸ்.கே.,; வரும் தேர்தலில் விசில் போடுவது டி.வி.கே.,; டில்லி அணியை த.வெ.க., அடித்து நொறுக்கும்.
எனக்கும், மக்களுக்கும் ஏற்பட்டிருப்பது தேர்தலுக்கான உறவு இல்லை; இயற்கையான உறவு. மற்றவர்களுக்கு இது எலெக் ஷன். எனக்கும், என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது எமோஷன்.
கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். பிறரை போல், 'நானும் டெல்டாகாரன் தான்' என, காதில் டால்டா ஊத்த மாட்டேன். எனக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. ஆனால், விவசாயிகள் படும் கஷ்டம் தெரியும். த.வெ.க., ஆட்சி அமைந்ததும் விவசாயப் பிரச்னைகள் முதலில் தீர்க்கப்படும்.
நிலத்தடி நீரை பாதுகாக்காமல், மணலை, கனிமவளங்களை கொள்ளை அடித்தால், மலைகளை விழுங்கினால், தண்ணீர் திவாலாகும். மணல் மாபியா கும்பலுடன், தி.மு.க., டீலிங்கில் உள்ளது. தண்ணீர், மணல், கனிமவளம் திவாலாகப் போகிறது. மொத்தத்தில் தி.மு.க., ஆட்சியில், தமிழகமே திவாலாகப் போகிறது.
மக்கள் மீது அக்கறை இருந்தால், ஆட்சிக்கு வந்ததும், பெரிய திட்டங்களை துவக்க வேண்டும். உடனே, காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னையில் உன் கருத்து என்ன என கேட்பர். ஒருத்தன் அமைதியாக இருந்தால், அவனுக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமில்லை. எனக்கும் எல்லாமும் தெரியும்.
மீனவர் பிரச்னைக்கு முதல்வர் கடிதம் எழுதிவிட்டு, துாங்க போய் விடுவார். ஆறுதல் சொல்வதெல்லாம் 'ஹம்பக்' வேலை. 'மானே, தேனே, பொன் மானே' என கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. மத்திய அரசுக்கு உண்மையாகவே அழுத்தம் கொடுக்க வேண்டும். த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பர்.
தி.மு.க., இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. நான் இல்லேன்னா நீ; நீ இல்லேன்னா நான். நம் இருவருக்கும் மாற்றாக வேறு எவனும் வந்திடக் கூடாது. வெளியில் நாம் அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கிட்டாலும், உள்ளுக்குள்ள, நம்ம டீலிங் பக்காவா இருக்கணும். இப்போது விஜய் வரவால், இருவர் திட்டங்களும் பலிக்காமல் போய்விடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், 'நீ வழிகாட்டி நெறிமுறைகளை போட்டு தடு; நான் பழி மேல் பழி போடுறேன்' என இரு தரப்பும் களம் இறங்கி விட்டன.
கரூரில் ஆரம்பித்து, ஜனநாயகன் படம் ரிலீஸ் வரைக்கும் இது தான் நடக்கிறது. ஜனநாயகன் ரிலீஸ் பிரச்னையில், முதல்வர் பூசி மெழுகி, குரல் கொடுத்தார்; இருந்தாலும், அவருக்கு நன்றி.
தஞ்சாவூர் நகரில் கருணாநிதிக்கு சிலை வைக்க முயற்சித்தபோது, 'மக்கள் பணத்தில் யாருக்கு புகழ் பாட பார்க்கிறீர்கள்' என நீதிமன்றம் கேள்வி கேட்டது. மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு ஏதாவது கேட்டால், நிதிச்சுமை என்பர். சிலை வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது? மாநில அரசால் முடியாது என தெரிந்தும், 'நீட் தேர்வை ஒழிப்போம்' என்றனர். தி.மு.க., ஆட்சி, மோசமான மோசடி ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்