தோல்வியை ஆய்வு செய்ய தி.மு.க.,வில் குழு அமைப்பு; கருத்துகளை வீடியோ பதிவு செய்ய கட்சியினர் கோரிக்கை
- நமது நிருபர் -
தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய, தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்டுள்ள, 36 பேர் கொண்ட குழு, கட்சியினர் கூறும் கருத்துகளை, 'வீடியோ' வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என, தி.மு.க.,வினர் வலியுறுத்தி உள்ளனர்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்விக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளவும், கட்சியில் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கவும், கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி, கள ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எழிலரசன், சோழராஜன், பூச்சி முருகன், ஜெகன் பெரியசாமி, சரவணன், இளையராஜா, முரசொலி எம்.பி., சேலம் உமாராணி உட்பட 36 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வருகை
இந்த குழுவினர், மாவட்டச் செயலர், தொகுதி பார்வையாளர், வேட்பாளர், தொகுதிக்குட்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து பேசுவர். அதோடு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்களையும் தனித்தனியே சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர்.
கருத்து கேட்கும்போது, மாவட்டச் செயலர்கள், தொகுதி பார்வையாளர், வேட்பாளர் உள்ளிட்டவர் யாரும் உடன் இருக்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளின் வருகையை, பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
பொய் தகவல்
தி.மு.க., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் கருத்து கேட்கப்படுகிறது. கள ஆய்வில் நியமிக்கப்பட்டோரில் பலர், கட்சியின் சட்ட திட்டங்கள் தெரியாதவர்கள். எனவே, அவர்களிடம் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்கள், வேட்பாளர்கள், தோல்விக்கான உண்மை காரணங்களை தெரிவிக்காமல், பொய் தகவலை தெரிவிக்க வாய்ப்புள்ளது.
எனவே, தோல்விக்கான காரணங்களையும் கட்சியினர் கூறும் கருத்துகளையும் நேரடியாக, 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும் என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தி.மு.க., தலைமையை வலியுறுத்தி உள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்