Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தி.மு.க.,வில் நேர்காணல்: பன்னீர்செல்வம் பங்கேற்பு; கனிமொழியை அழைக்காதது ஏன்?

தி.மு.க.,வில் நேர்காணல்: பன்னீர்செல்வம் பங்கேற்பு; கனிமொழியை அழைக்காதது ஏன்?

சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு, தி.மு.க.,வில் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், புதிதாக கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 750 பேர் பங்கேற்றனர்.

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட விரும்பி மனு அளித்தோரை, சென்னை அறிவாலயத்தில் நேர்காணல் செய்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

இரண்டாம் நாளான நேற்று துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் - போடி, சபாநாயகர் அப்பாவு - ராதாபுரம், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் - திருச்செந்துார், கீதா ஜீவன் - துாத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். தென் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 22 தொகுதிகளில் போட்டியிட 750 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி முடித்துள்ளார்.

கனிமொழியை அழைக்காதது ஏன்?



தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சென்னை மாவட்ட தொகுதிகளில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி போட்டியிட விருப்பம் தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனு அளித்திருந்தனர். அதன்படி, கனிமொழியிடமும் நேர்காணல் நடத்தப்படும் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. 'தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கனிமொழியே விருப்ப மனு அளித்திருந்தால் மட்டுமே, அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருப்பார். ஆனால், கனிமொழி விருப்ப மனு அளிக்கவில்லை என்பதால், அவரை அழைக்கவில்லை' என, அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.



அறிவாலயத்தில் மோதல், அடிதடி



'கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க., போட்டியிட வேண்டும்' என, அந்தத் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள், நேர்காணலில் வலியுறுத்தினர். அவர்களுக்கு போட்டியாக சில நிர்வாகிகள், 'காங்கிரசுக்கு ஒதுக்கினாலும், வெற்றிக்காக பாடுபடுவோம்' என, முதல்வர் ஸ்டாலினிடம் உறுதியளித்தனர். தி.மு.க.,வின் இரு தரப்பினரும் கட்சித் தலைமையிடம் வெவ்வேறு கருத்துகளை கூறிவிட்டு, அறிவாலயத்திற்கு வெளியே வந்தனர். அப்போது இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; ஒரு கட்டத்தில் அடிதடியில் இறங்கினர்.

Advertisement