திமுக டோக்கன் வினியோகம்; இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்
சென்னை: வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்களை, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வினியோகம் செய்வதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வரவுள்ளன.
சென்னை துறைமுகம் தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மனோகர் சார்பில், வாக்காளர்களுக்கு பணம் வழங்க, 'கியூஆர்' குறியீடுடன் கூடிய, 10,000 ரூபாய்க்கான டோக்கன்கள் வினியோகம் செய்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், வழக்கறிஞர் ஷியாம் குமார் என்பவர் முறையீடு செய்தார்.
இதேபோல், தி.மு.க. வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு 8,000 ரூபாய்க்கான கூப்பன்களை வழங்கி வருவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறும், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவரும் முறையிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்தால், இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்' என, தெரிவித்தனர். அதன்படி, நேற்று மாலையில் இவ்விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் கே.ரவீந்திரன், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆகியோர், தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்