'பணம் நமக்கு; பிரச்னை மக்களுக்கு' என்பதே திமுகவின் எண்ணம்: பிரதமர் மோடி காட்டம்
மதுரை: '' பணம் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே திமுகவின் எண்ணம் ஆக உள்ளது,'' என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
'வெற்றிவேல்...' என 3 முறை கூறி பிரதமர் மோடி தனது உரையை துவக்கினார்
பிரதமர் மோடி பேசியதாவது:
அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரை தலைவணங்கி பேச்சை தொடங்குகிறேன். இது பாண்டிய நாடு. வீரம் விளையும் பூமி. இந்த மகத்தான பூமியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர், அழகுமுத்து கோன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பங்களிப்பை நினைவு கூர்கிறேன். வீரத்துக்கும் கண்ணியத்துக்கும் இமானுவேல் சேகரனை நினைவு கூர்கிறேன்.
இங்கு வருவதற்கு முன்னர் திருப்பரங்குன்றம் சென்று கடவுள் முருகனை தரிசனம் செய்தேன். அது தெய்வீக அனுபவமாக இருந்தது. தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் வேண்டி கொண்டேன்.
அதே நேரம் எனது மனம் வருத்தம் அடைந்தது. பூர்ணசந்திரன்( திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்தவர்) உயிர் தியாகம் செய்ததை நினைத்து பார்த்தேன். அவரின் மனைவி,குழந்தைகளை சந்தித்தேன். அவர்களின் துக்கத்தை என்னால் உணர முடிந்தது. அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்தேன்.
வாய்மையே வெல்லும்
அவரின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளை முருகன் காலடியில் அர்ப்பணம் செய்கிறேன் திமுக அரசின் மனிதநேயமற்ற தன்மை காரணமாகவே இது நடந்துள்ளது. இது வலியை ஏற்படுத்துகிறது. திமுக என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும். இறுதியில் வாய்மையே வெல்லும். முருக பக்தர்கள் வெற்றி பெறுவார்கள்.
தமிழுக்கும், மல்லிகை மண்ணுக்கும் பெயர் போனது மதுரை மண். இம்மக்கள் பொழியும் பேரன்பு, கடந்த மாதம் மலேஷியா சென்றதை நினைவுபடுத்துகிறது. மலேஷியாவில் என் மீது பொழிந்த அன்பும், பாசமும் அபரிமிதமானவை. அங்குள்ள பல்கலையில் திருவள்ளுவர் இருக்கையை ஏற்படுத்தி உள்ளோம். அங்கு திருவள்ளுவர் மையத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். ஆனால், தேஜ கூட்டத்தை பார்த்த பிறகு அவர்களின் கனவு கற்பனைக்கோட்டைகளாக, கானல் நீராக மாறிவிடும்.
கொள்ளையடிக்கிறது
இந்தத் தேர்தல், தமிழகத்துக்கு ஒரு திருப்பு முனை என்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழக மக்கள் தீர்மானம் செய்துவிட்டார்கள் என்பதை என்னால் காண முடிகிறது. திமுகவை வெளியேற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். தேஜ கூட்டணி மாற்றத்தை கொண்டு வரும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அடுத்த அரசு தேஜ கூட்டணி அரசு தான் என்பதை உங்களின் கண்களில் காண்கிறேன்.
சுத்தம், சுகாதாரம் தர வரிசையில் கடைசி இடத்திற்கு மதுரையை கொண்டு சென்றனர். ஊழல் காரணமாக மதுரை மேயர் பதவியை துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களின் மாடல். 'பணம் நமக்கு, பிரச்னைகள் மக்களுக்கு' என்பதே திமுக மாடல்.
இழுத்தடிக்கும் திமுக
ஏழை மக்களுக்காக திமுக அரசு எதையும் செய்யாது. மற்றவர்களையும் செய்ய விடாது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்படி 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் 3 லட்சம் வீடுகள் இன்னும் கட்டி முடிக்கவில்லை. இதற்கு திமுக அரசு இன்னமும் கள ஆய்வுகளை மேற்கொள்ளாமல் செயல்பாட்டை இழுத்தடிக்கிறது.
திமுகவின் சில்லறைத்தனமான அரசியல் காரணமாக லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் ஏன் அவதிப்பட வேண்டும்? ஏழைகளுக்காக ஒரு துரும்பைக்கூட திமுக கிள்ளிப்போடவில்லை.
மக்களுக்கு திமுக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. ஆனால், இன்று வாய் கிழிய பேசுகிறார்கள் . கூப்பாடு போடுகிறார்கள். தமிழக பெண்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டு உள்ளது.
சிறையில் தள்ளுவோம்
மாபியாக்கள், போதை கும்பல்களால் தங்களது குடும்பம் அழிவதை பெண்கள் நினைக்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் தங்களின் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்தது என மக்கள் நினைத்து பார்க்கின்றனர்.
தேஜ அரசு பதவிக்கு வந்த உடனே சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துவோம். குற்றவாளிகள், போதைப்பொருள் மாபியாக்களை சிறையில் தள்ளுவோம். உங்கள் கண்ணியம், அதிகார பரவலாக்கலை தேஜ கூட்டணி உறுதி செய்யும்.
மோசடி
அரசியலில் நேர்மை என்பது நாட்டிற்கு உதாரணமாக காமராஜர் இருந்தார். இதற்கு நேர்மாறாக திமுக உள்ளது. பணியிட மாற்றத்திற்கு 360 கோடி மோசடி; அரசு பணி வாங்கி தருவதில் 900 கோடி மோசடி ; ஒப்பந்தம் பெறுதில் ஆயிரம் கோடி மோசடி; மணல் திருட்டு 4,700 கோடி ரூபாய்; டாஸ்மாக் மோசடி மட்டுமே 40 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.
நல்ல முறையில் பணியாற்றுவதில் தான் அமைச்சர்களுக்கு இடையே போட்டி இருக்கும். ஆனால் திமுகவில் மோசடி செய்வதில் அமைச்சர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இவர்கள் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்களிடம் இருந்து திருடுகிறார்கள்.
இந்த அரசு இனியும் தொடர்வதற்கு எந்த தார்மிக உரிமையும் கிடையாது. இதனால் தான் தேஜ அரசை கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டனர். தூய்மையான அரசை உங்களுக்கு அளிப்போம்.
அக்கறை
அண்மையில் இந்தியா ஐரோப்பிய யூனியன் உடன் வர்த்தக ஒப்பந்தத்தை போட்டோம். இப்போது வளர்ந்த 28 நாடுகள் உடன் இணைக்கப்பட்டுள்ளோம். இளைஞர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் ஆகியோருக்கு இது பொன்னான வாய்ப்பு, தமிழகத்தின் ஜவுளித்துறை, மின்னணு கடல் சார் உணவு ஏற்றுமதியாளர்கள், சிறுகுறு தொழில் முனைவோருக்கு சந்தை கிடைக்கும். அதிக ஆர்டர் கிடைக்கும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உலகளவில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு தமிழக பொருட்களுக்கு கிடைக்கும். ஆனால், இவை எல்லாம் நடக்க உங்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு இருக்க வேண்டும். தேஜ அரசால் நிலையான மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசை அமைக்க முடியம். வளர்ச்சி அடைந்த இந்தியா, வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உறுதி செய்வோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்
Advertisement

வாசகர்கள் கருத்துகள்