Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க.,வை எதிர்த்தால் விபசாரி என்பதா?: ஸ்டாலினிடம் பெண் எழுத்தாளர் குமுறல்

 தி.மு.க.,வை எதிர்த்தால் விபசாரி என்பதா?: ஸ்டாலினிடம் பெண் எழுத்தாளர் குமுறல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'அமெரிக்காவையும், அமித் ஷாவையும் கூட எதிர்த்து பேசவும் எழுதவும் முடிகிறது. ஆனால், தி.மு.க.,வை எதிர்த்தால், விபசாரி என்ற வசை சொற்கள் வருகின்றன' என, பெண் எழுத்தாளர் மீனா கந்தசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதம்:

தி.மு.க., ஆட்சியில் கொடூரமாக வேட்டையாடப்பட்ட சவுக்கு சங்கர் பற்றிய ஒரு பதிவுக்காக, சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினர் என்னை வசைபாடினர்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான போதும், சாகித்ய அகாடமிக்காக, உங்கள் தந்தை கருணாநிதியின் இலக்கிய வரலாறு பற்றி ம.ராஜேந்திரன் எழுதிய நுாலை, மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டேன்.

அதன் பின்னும், தி.மு.க.,வினர் என் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் அவதுாறுகளை பரப்புகின்றனர். இதனால், பல நாட்கள் அழுதிருக்கிறேன். 'என்ன நடந்தாலும் சொந்தக் காலில் நின்று போராட வேண்டும்' என, என் தந்தை எனக்கு கற்பித்துள்ளார். அதனால், நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு தாய்; இரண்டு குழந்தைகளை வளர்க்கிறேன். குடும்பத்தில் நான் மட்டுமே வருமானம் ஈட்டுவதால், வேலையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. தி.மு.க., அரசை விமர்சித்தால், என்னை, 'விபசாரி, ஆர்.எஸ்.எஸ்., ஸ்லீப்பர் செல்' என எழுதுகின்றனர். பள்ளியில் படிக்கும் என் குழந்தைகள், இவற்றை படிக்கின்றனர்.

தி.மு.க.,வினரின் இந்த அத்துமீறல்களை கட்டுப்படுத்தாவிட்டால், ஒரு தமிழ்த்தாயின் சாபத்திற்கு ஆளாவீர்கள்.

பாலஸ்தீனர் இனப்படுகொலை பற்றி என்னால் எழுத, பேச முடிகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடிகிறது. நக்சலைட்டுகளை ஒழிக்கும், 'ஆப்பரேஷன் காகர்' நடவடிக்கையின்போது, துணை ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து எழுத முடிகிறது.

ஆனால், ஒரு தமிழ்ப் பெண்ணாக, தி.மு.க., அரசையோ, அதன் தலைவர்களையோ லேசாக விமர்சித்து ஒரு பதிவு எழுதினால் கூட, இழிவான வசவுகளுக்கும், கற்பனை செய்ய முடியாத அவதுாறுகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement