Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 இலவசங்களை நோக்கி சென்று தன்மானத்தை இழக்காதீர்கள்: ஆண்டிபட்டியில் சீமான் ஆவேசம்

 இலவசங்களை நோக்கி சென்று தன்மானத்தை இழக்காதீர்கள்: ஆண்டிபட்டியில் சீமான் ஆவேசம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஆண்டிபட்டி: ''இலவசங்களை நோக்கி சென்று தன்மானத்தை இழக்காதீர்கள். தி.மு.க., அ.தி.மு.க., சார்பில் அண்ணன், தம்பி போட்டியிடுவது தான் ஜனநாயகமா,'' என, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் வேட்பாளர் கோமதியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

வெற்றிக்கு முதலீடு

அவர் பேசியதாவது: இத்தொகுதியில் வனத்துறை பிரச்னை, கண்ணகி கோயிலுக்கு வழியில்லை, வருஷநாட்டில் 80 கிராமங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்டவை உள்ளன. இத்தொகுதியில் மேய்ச்சல் நிலம் இல்லை. மலை அடிவாரங்களில் ஆடு மாடுகளை மேய்க்க வனத்துறையினர் இடையூறு செய்கிறார்கள். மலைகளை கல் குவாரிக்காக வெட்டி எடுத்துச் செல்ல ஒப்பந்தம் செய்து 100 டன் 200 டன் வெடி மருந்துகளை வைத்து அவர்கள் மலையை தகர்க்கின்றனர். அப்போது மட்டும் காட்டு விலங்குகள் பத்திரமாக வாழ்கிறதா.
ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது தான் ஜனநாயகம் செத்து பணநாயகம் வென்று விடுகிறது. தேர்தல் வெற்றிக்கு முதலீடு செய்பவர் பல மடங்கு லாபத்தை எடுக்கத்தான் நினைப்பார்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தனர். மக்களுக்கு பிரச்னை தந்தவர்கள் ஒரு பக்கம். பிரச்னையை தீர்க்கும் நாங்கள் ஒரு பக்கம். எங்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி. நான் ஏசி பஸ் தருகிறேன். அதில் காசு கொடுத்து செல்லுங்கள்.

ஜனநாயகமா

இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானத்தை இழக்காதீர்கள். நிலம் வளம் சார்ந்த தொழிற்சாலைகள் துவக்கி ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன். எத்தனை காலத்திற்கு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள், இரு கட்சிகளும் மீண்டும் வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா கொலை, கொள்ளை நடக்காமல் இருக்குமா. அ.தி.மு.க., தி.மு.க., இரண்டும் ஒரே கட்சி தான். இந்த தொகுதியில் கூட ஒரே வீட்டில் உள்ள அண்ணன், தம்பி இரு கட்சிகளிலும் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். இது தான் ஜனநாயகமா. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement