ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பறை: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பறைகளை, தேர்தல் பொது மற்றும் போலீஸ் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு, கடலுார் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பாட்., எனப்படும் ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
ஓட்டுப்பதிவுக்கு முன்னதாக, 317 ஓட்டுச்சாவடிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனி வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு முடிந்ததும் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக்கப்பட உள்ளன.
இவ்விரு மையங்களையும், விருத்தாசலம் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் குமார் நேற்று பார்வையிட்டார். அப்போது, பள்ளி கலையரங்கம் மற்றும் அரசு கல்லுாரி மையத்தில் ஜன்னல்கள், மின்விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை பார்வையிட்ட அவர்,
24 மணி நேரம் கேமரா மூலம் கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு அருகே சந்தேக நபர்கள் நடமாட்டம் இல்லாமல் கண்காணிக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ராமச்சந்திரன்பேட்டை தனியார் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிகள், மணவாளநல்லுார் ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, தாசில்தார் பிரகாஷ், நகராட்சி கமிஷனர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல், தேர்தல் போலீஸ் பார்வையாளர் ேஹமந்த் குட்டியால், ஆண்கள் பள்ளியில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, அரசு கல்லுாரியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்