ரூ.8000 கூப்பன் கொடுத்தால் தானே திமுகவால் ஊழல் செய்யமுடியும்; இல்லத்தரசி திட்டத்தை விமர்சித்த இபிஎஸ்
கடையநல்லூர்: இல்லத்தரசி திட்டத்திற்காக 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பார்களாம், கூப்பன் கொடுத்தால்தான் ஊழல் செய்ய முடியும் என்று திமுகவை இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட அய்யாபுரம் மதுரை-தென்காசி பிரதான சாலையில கூடியிருந்த மககள் முன்பு இபிஎஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்திருக்கிறது. அதிமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் செய்பவை பற்றி அறிவித்தது. அந்த பிரமாண்டமான அறிவிப்புகளைப் பார்த்து திமுகவும் அறிவித்துள்ளனர், 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுப்பார்களாம், கூப்பன் கொடுத்தால்தான் ஊழல் செய்ய முடியும். ஆட்சிக்கு வர முடியாது, டோக்கன் கொடுப்பார்களாம்.
உங்களுக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்று அவர்களே சொல்லிவிட்டனர், ஏனெனில் அவர்கள் ஏஜென்சி எடுத்திருப்பார்கள், டோக்கன் திமுககாரரிடம் வாங்க வேண்டும். அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.
திமுகவில் ஆட்களே இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தான் திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். செல்லாத நோட்டுக்கு பலன் இல்லை. நாம் தூக்கியெறிந்தவர்கள் 19 பேர் திமுகவில் போட்டியிடுகிறார்கள். இயக்கத்தை உடைக்க எவ்வளவு முயற்சி செய்தார்கள். அத்தனை சூழ்ச்சிகளையும் தவிடு பொடியாக்கி அதிமுக வலிமையானது என்றூ நிரூபித்தோம். அதிமுக சொந்தக் காலில் நிற்கிறது, திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மூன்றே மாதத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம். தமிழகம் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.
ஸ்டாலினுக்கு பெட்டி மீதுதான் எப்போதும் கண் இருக்கும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து மனுவை வாங்கி பிரச்னையை தீர்ப்பேன் என்றார். தீர்த்தாரா..? அது, எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள்.
ரேஷன் கடையில் இப்போது அரிசி தரம் குறைவாக உள்ளது, கடையில் வாங்குவதுபோல தரமான அரிசி கொடுப்போம். அரிசி ஆலை அதிபர்களை அழைத்துப் பேசினேன். டபுள் பாய்லிங் செய்தால் தரமான அரிசி கிடைக்கும் என்றனர். நவீன ஆலைகள் மூலம் நெல்மணிகள் பராமரிக்கப்பட்டு தரமான அரிசி ரேஷன் கடையில் வழங்கப்படும்,
இவ்வாறு இபிஎஸ் பிரசாரத்தில் பேசினார்.
ஆட்சி தொடர வேண்டுமா?
கோவில்பட்டியில் நடந்த பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது: திமுக ஆட்சியில் ஊழல் மட்டும் நடக்கிறது. கலெக்ஷன் கரப்ஷன் கமிஷன் தான் நடக்கிறது. ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி வருமானம் அதிகம் வந்தும் 5 லட்சம் கோடி கடன் வாங்கியும் புதிய திட்டம் இல்லை இந்த ஆட்சி தொடர வேண்டுமா? நம் எல்லோரையும் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டுத்தான் இந்த கடனை அடைப்பார்கள். இப்படி கொள்ளையடிக்கும் ஆட்சி தொடர வேண்டுமா?
அரசு காலிப்பணியிடங்கள் ஐந்தரை லட்சம் நிரப்புவோம் என்றார், ஆனால் 94 ஆயிரம் பேரைத்தான் நிரப்பியுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்கள் ஒரு லட்சம் பேர். அதில் 6 ஆயிரம், ஏற்கனவே ஐந்தரை லட்சம் மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம் நிரப்புவோம் என்கிறார்.நேற்று ஸ்டாலின் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது நிருபர் விளக்கம் கேட்கிறார். அதற்கு ஆர்.எஸ்.பாரதி, 'அதெல்லாம் சொல்ல முடியாது' என்கிறார், தெரிந்தால்தானே சொல்ல முடியும். ஸ்டாலின் சொல்கிறேன் என்கிறார் ஆனால், அவர் தப்புத்தப்பாக சொல்வார் என்று பாரதி அதை தடுக்கிறார். குழு உறுப்பினர் பதில் சொல்வார்கள் என்றார். அப்புறம் எதுக்கு தலைவர்..? மக்களுக்கு எது தேவை, எப்படி மக்களுக்குச் சென்று சேரும் என்பதெல்லாம் முதல்வருக்கு ஒன்றும் தெரியவில்லை.
பழநி கோயில் அறநிலையத் துறைக்கு சொந்தமானது. அதிலிருந்து 162 கோடி ரூபாய் எடுத்து 11 விதமான திட்டத்துக்கு செலவு செய்கிறார்கள். அந்த பணத்தில் இருந்து எப்படி செலவு பண்ணலாம்? கோயில் வளர்ச்சிக்குத்தான் பக்தர்கள் கொடுக்கிறார்கள். கோயில் நிதியில் டெண்டர் விட்டு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை அரசு திட்டத்தில் கொண்டுவாருங்கள், யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள்.
5 ஆயிரம் கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதாக ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இன்று பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மேற்கூரை இடிந்து ஒரு பெண் பலியாகி இருக்கிறார். இப்போதுதான் ஸ்டாலின் திறந்துவைத்தார், உயிர் போய்விட்டது. இருவர் காயம். இந்த லட்சணத்தில் 5 ஆயிரம் கும்பாபிஷேகம் நடக்குமாம், ஏற்கனவே உயிர்பலி ஆகிவிட்டது. இதுதான் திமுக ஆட்சியின் நிலைமை. ஸ்டாலின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுப்பாராம். அது ஊழல் செய்வதற்குத்தான். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்