சென்னையில் தேர்தல் பறக்கும் படை சோதனை; சிக்கியது ரூ.77 கோடி நகை
சென்னை: சென்னையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்.,23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. எனவே, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அசோக் நகர் 11வது நிழற்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தங்கம் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை ஏற்றிக் கொண்டு 21 வாகனங்கள் வந்துள்ளன. அதில், 20 வாகனங்களில் இருந்த பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தன.
ஆனால், ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கு எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து, ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அதனை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர், அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரிடம் நடத்திய விசாரணையில், கிண்டியை சேர்ந்த பிவிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், சவுகார்பேட்டையை சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட தங்க நகைகளை, பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக வாகனத்தில் அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்