ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
கோவை: ''ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு; வாங்குவதும் தப்பு,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரான, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு தேர்தல் பணியாற்றியுள்ளோம். வாக்காளர்கள் எங்களுக்கு வெற்றி தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தேர்தலை சுமுகமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளோம்.
தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வினர் வன்முறையை துாண்டும் வகையில் செயல்படுகின்றனர். தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியை உணர்ந்து விட்டார். அதனால், ஏதேதோ குறை சொல்கிறார். அமைதியான மண்ணை கலவர பூமியாக மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது. அது பலிக்காது.
பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு சொல்லலாம். ஏதேனும் ஒரு இடத்தில் நிரூபிக்க வேண்டும். ஓட்டுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்; யார் வாங்குகிறார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு; வாங்குவதும் தப்பு. தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற தகவலை முழுமையாக மறுக்கிறேன். ஆதாரம் இருந்தால், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுவாக கொடுக்கலாம்.
தேர்தல் நடத்துவது மத்திய அரசின் தேர்தல் ஆணையம். கலெக்டர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளனர். பறக்கும் படையினர், சி.ஆர்.பி.எப்., போலீசார் இருக்கின்றனர். இதில், ஓட்டுச்சாவடியை நாங்கள் எப்படி கைப்பற்ற முடியும்? பா.ஜ., கூட்டணியில் இருப்பதால் அவர்கள் வேண்டுமானால், கைப்பற்ற முயற்சிக்கலாம்.
தோல்வி விரக்தியில் என்ன பேசுகிறோம் என தெரியாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு, கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்