நல்ல நேரம் போயிரும்பா: திண்டுக்கல் சீனி பரபர
திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார், நேற்று மதியம் 12:35 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், உறுதிமொழி வாசித்துக்கொண்டு இருந்தபோது, அந்த தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளரான சீனிவாசன் உள்ளே நுழைந்து, 'நல்ல நேரம் முடிவதற்குள் என் மனுவை வாங்கிக் கொள்ளுங்கள்' என தேர்தல் அலுவலரிடம் கூறினார்.
உடனே, தி.மு.க., வேட்பாளர், 'நான் உறுதி மொழி வாசித்துக் கொள்கிறேன்' என்றார்.
அதற்கு சீனிவாசன், “அதெல்லாம் ஒன்றும் இல்லை தம்பி, நல்ல நேரம் முடிவதற்குள் நானும் மனுவை கொடுத்துக் கொள்கிறேன்,” என்றார். இதனால், 'அப்செட்' ஆன தேர்தல் அலுவலர், தன் தலையில் கைவைத்த படி நொந்து கொண்டார். தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் 'அப்செட்' ஆகி கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்.
பின், சீனிவாசன் சில நிமிடங்கள் காத்திருந்து மனுதாக்கல் செய்தார். இந்த களேபரங்கள் அனைத்தும், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் சதீஷா முன்னிலையில் நடந்தேறின. ஒருவர் வேட்பு மனு செய்யும் போது மற்றொரு வேட்பாளர் உள்ளே வரக்கூடாது என அவரோ, தேர்தல் அலுவலர்களோ, போலீஸ் அதிகாரிகளோ சுட்டிக்காட்டவில்லை.
இதுகுறித்து புகார் அளிப்பதாக, தேர்தல் அலுவலர் பழனிவேலு தெரிவித்தார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்