Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 களத்தில் தத்தளிக்கும் தலைகள்!

 களத்தில் தத்தளிக்கும் தலைகள்!

- நமது நிருபர் -

நாளையோடு பிரசாரம் முடியவுள்ள நிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் சிலர் கடும் தள்ளாட்டத்தில் உள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றால் ஆச்சரியம் என்று அந்தந்த கட்சியினரே கூறுகின்றனர்.

அமைச்சர்கள்



1 துரைமுருகன்


தி.மு.க., பொதுச்செயலரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், வயது மூப்பின் காரணமாக, கடந்த ஓராண்டாக மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக சென்று வந்தார். இதனாலும், சில தனிப்பட்ட காரணங்களாலும், துரைமுருகனுக்கு இம்முறை சீட் வழங்கும் எண்ணத்திலேயே முதல்வர் ஸ்டாலின் இல்லை. அதற்கு பதில், மகன் அவரது கதிர் ஆனந்துக்கு, மாவட்ட செயலர் பதவி கொடுக்கப்பட்டது.

ஆனாலும், வேட்பாளர் தேர்வின் இறுதி கட்டத்தில், 'டை' அடித்து அறிவாலயம் வந்த துரைமுருகன், அடம்பிடித்து, மீண்டும் காட்பாடி தொகுதியை வாங்கிவிட்டார்.

கடந்த தேர்தலின்போதே, வேலுார் மாவட்டம், காட்பாடியில் வெறும் 746 ஓட்டு வித்தியாசத்தில் தான் துரைமுருகன் தோல்வியில் இருந்து தப்பினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு குறிப்பிட்ட எவ்வித திட்டங்களையும் கொண்டு வராத துரைமுருகன் மீதான அதிருப்தி அதிகமாகி இருக்கிறது.

வேலுார் வட்டம், மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி உள்ளிட்ட பகுதிகள் துரைமுருகனுக்கு எதிராக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, கதிர் ஆனந்தின் செயல்பாடு, காட்பாடி தி.மு.க.,வில் பலருக்கும் பிடிக்கவில்லை. அனுதாப ஓட்டும், வன்னியர் சமூக ஓட்டும் தனக்கு விழும் என நம்புகிறார். ஆனால், தனது வெற்றி துாரமாவதை அறிந்து, தாமதமாக தான் செலவு செய்ய தொடங்கி இருக்கிறார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், 'துரை அண்ணனிடமிருந்து முதல்முறையாக பசை வருகிறது' என்று, தி.மு.க., நிர்வாகிகள் அதை அப்படியே அமுக்கி விடுகின்றனர்.

2 மதிவேந்தன்


நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், முதல்முறை போட்டியிட்டு வென்ற மதிவேந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. ஏற்கனவே, நாமக்கல் தி.மு.க., அரசியலில் மாவட்ட செயலர் ராஜேஷ்குமாருக்கும், முன்னாள் மா.செ., காந்திசெல்வனுக்கும் பயங்கர மோதல் இருக்கிறது.

இந்நிலையில், போட்டிக்கு அமைச்சராக மதிவேந்தனும் இறங்க, ராசிபுரம் தி.மு.க., போர்க்களமாக இருக்கிறது. ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் ராஜேஷ்குமார் மீண்டும் மாநில அரசியலுக்கு வர துடித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால், மதிவேந்தன் இந்த தேர்தலில் வென்றால், ராஜேஷின் கனவு பலிக்காது. எனவே, மதிவேந்தனுக்கு எதிராக உள்ளடி வேலையில் இறங்கி இருக்கிறார் ராஜேஷ்.

அமைச்சராகி, பஸ் ஸ்டாண்டை தவிர எதுவுமே செய்யவில்லை என மதிவேந்தன் மீது, தொகுதிக்குள் அதிருப்தி நிலவுகிறது. தி.மு.க., அலை வீசிய கடந்த தேர்தலிலேயே வெறும் 2,000 ஓட்டு வித்தியாசத்தில் தான் வென்றார். தற்போது தி.மு.க.,வில் செல்வாக்காக இருந்த வி.பி.துரைசாமியின் மகன் பிரேம்குமார், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் சார்பாக, வைட்டமின் 'ப'வும் தாராளமாக இறக்கப்படுவதால், மதிவேந்தனுக்கு இம்முறை பெரும் சவால் காத்திருக்கிறது.

3 ரகுபதி


---புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில், எப்போதும் போராடும் சூழ்நிலையில் தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இருக்கிறார். 2016ல் - - 766; 2021ல் -- 1,382 ஓட்டு வித்தியாசத்தில் தான் வென்றார். இம்முறை அந்த போராட்டம் மிக அதிகமாகி விட்டது. தொகுதிக்குள் சிறுபான்மையாக இருக்கும் செட்டியார் சமூகத்தை சேர்ந்த ரகுபதிக்கு, மற்ற சமூகத்தினர் மத்தியில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. மறவர், கள்ளர், முத்தரையர் சமூகத்தினர், ரகுபதி இருக்கும் வரை நமக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதனால், மறவர் சமூகத்தை சேர்ந்த அ.தி.மு.க., வேட்பாளர் வைரமுத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அண்டை தொகுதி ஆலங்குடியின் எம்.எல்.ஏ.,வான அமைச்சர் மெய்யநாதன், ரகுபதி வீழ்ந்தால் தான் தனக்கு மா.செ., பதவியும் பெரிய துறையும் கிடைக்கும் என நினைக்கிறார். அதனால் தான், கடந்த முறை முத்தரையர் ஓட்டை பிரித்து, ரகுபதி வெற்றிக்கு உதவிய தமிழர் தேசம் கட்சியின் செல்வகுமாரை, இம்முறை கூட்டணிக்குள் கொண்டு வந்து, சம்பந்தமே இல்லாத

நத்தம் தொகுதிக்கு அனுப்பிவிட்டார் மெய்யநாதன். அதனால், இம்முறை முத்தரயர் ஓட்டு முழுவதும் அ.தி.மு.க.,விற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய, முத்தரயருக்கு சிறப்பு 'பேக்கேஜ்' கொடுத்து வருகிறார் ரகுபதி. இருப்பினும் நிலை கவலைக்கிடம் என்கின்றனர் தி.மு.க.,வினர்.

பன்னீர்செல்வம்


கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் மீண்டும் போட்டியிடும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு, அவருடைய சமூகம் சார்ந்த செல்வாக்கு பலமாக இருக்கிறது. ஆனால், 25 ஆண்டுகளாக குறிஞ்சிப்பாடியில் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் பன்னீர்செல்வம் மீது இம்முறை கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அவருடைய பண்ணையார்த்தனமான பேச்சு மற்றும் நடவடிக்கைகள் தொகுதிக்குள் இருக்கும் பட்டியல் மற்றும் மீனவர் சமூகத்தினருக்கு பிடிக்கவில்லை.

இதை கருத்தில் கொண்டு தான், அ.தி.மு.க., சார்பில் மீனவர் சமூகத்தை சேர்ந்த புவனேந்திரன் நிறுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்றாலும், பா.ம.க., உதவியால் வன்னியர் சமூக ஓட்டுகளையும் இதர சமூக ஓட்டுகளையும் பிரிக்கிறார். அதோடு, தி.மு.க.,வில் மண்டல பொறுப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டுக்குள், வி.சி.க., போட்டியிடும், காட்டுமன்னார்கோயில், செய்யூர், திண்டிவனம் தொகுதிகள் வருகிறன. வி.சி.க.,வுக்கு எல்லா வகையிலும் உதவுமாறு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டும், பன்னீர்செல்வம் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதன் எதிரொலியாக, குறிஞ்சிப்பாடியில், வி.சி.க., நிர்வாகிகள் வேலை செய்யாமல் உள்ளனர். இதே சூழ்நிலை தான் 2011 தேர்தலிலும் ஏற்பட்டு, பன்னீர்செல்வம் தோல்வியடைந்தார். அந்த நிலை மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில், வைட்டமின் 'ப'வை அதிகரித்து, அது கொடுக்கும் சத்தை மட்டும் நம்பி இருக்கிறார்.

ஆர்.காந்தி


ராணிப்பேட்டையில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று, கைத்தறி அமைச்சராக உள்ள காந்தி, உடல்நல குறைவால், துறையை கூட ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இம்முறை தனது மகன் வினோத்தை களமிறக்க முடிவு செய்து, சீட்டையும் பெற்றார். ஆனால், வினோத் போட்டியிட்டால், நாங்கள் யாருமே தேர்தல் பணி செய்யமாட்டோம் என, தி.மு.க., நிர்வாகிகள் உறுதியாக கூறிவிட்டனர். ஏற்கனவே, கல் குவாரி மற்றும் மணல் கொள்ளையால், ராணிப்பேட்டையில் தி.மு.க., பலவீனமாக உள்ளது. இந்நிலையில், வினோத் போட்டியால் வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என ஆய்வில் தெரியவந்ததது. அதனால், மீண்டும் காந்தியை நிறுத்தப் பட்டார். கனிமவள கொள்ளை அதிருப்தியோடு, இவர் மீதும் கடும் அதிருப்தி இருக்கிறது.

எதிர் அணியில், தாமரை சின்னத்தில் த.மா.க., தான் போட்டியிடுகிறது என்பது இவருக்கு சிறு ஆறுதலாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக, பா.ஜ., தரப்பிலும், அ.தி.மு.க., தரப்பிலும் வலுவான நிதி உதவி வந்துள்ளது. இது சரியாக பயன்படுத்தப்படாலே, காந்தி பாடு திண்டாட்டம் என்கின்றனர் அமைச்சரின் அனுதாபிகள்.

சி.வெ.கணேசன்


கடலுார் மாவட்டம், திட்டக்குடியில், கடந்த முறை பா.ஜ., போட்டியிட்டதால், மிக எளிமையாக வென்று விட்டார் தொழிலாளர் நல துறை அமைச்சர் சி.வெ.கணேசன். ஆனால், இம்முறை அ.தி.மு.க., போட்டியிடுவதால் களம் சூடாகியிருக்கிறது. தொகுதிக்குள், வி.சி.க., செல்வாக்கு கணிசமாக இருந்தாலும், கணேசன் அமைச்சரான பின், அவர்களை மதிக்கவில்லை. இதனால், வி.சி.க., நிர்வாகிகள் பெயரளவிலேயே பணி செய்கின்றனர். அதை ஈடுசெய்ய, தே.மு.தி.க.,வுடன் நெருக்கம் காட்டும் கணேசன், வி.சி.க, நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டார். அதே போல், த.வெ.க.,வின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பட்டியலின ஓட்டுகள் கணேசனுக்கு வருமா என்பது சந்தேகமாகி இருக்கிறது. இதனால், மீண்டும் வி.சி.க., நிர்வாகிகளின் உதவியை பெற கடைசி நேரத்தில் 'பசை'யை தடவி இருக்கிறார். ஆனால், அது கைகொடுக்காது என்பது உள்ளூர் தி.மு.க.,வினரின் கணிப்பு.

ராஜகண்ணப்பன்


ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில், முக்குலத்தோர், யாதவர், தேவேந்திர குல வேளாளர், நாடார் சமூகத்தினர் உள்ளனர். இதில், யாதவர், முக்குலத்தோர் ஓட்டுகளை பெற்று தான், கடந்த முறை, பால்வள துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வென்றார். ஆனால், இந்த முறை, அவுக்கு எதிரான மனநிலையில் முக்குலத்தோர் உள்ளனர். யாதவர் மத்தியிலும், அவர் தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற மனநிலை வந்துவிட்டது. தவிர, தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுவான அதிருப்தியும் உள்ளது.

எதிரணியில், அ.தி.மு.க., வேட்பாளர் மலேசியா பாண்டி மற்றும் சசிகலா கட்சி வேட்பாளர் ராம்குமாருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அனைத்தையும் சமாளிக்க, அமைச்சர், வைட்டமின் 'ப'வை மட்டுமே நம்பி இருகு்கிறார்.

எம்.பி.சாமிநாதன்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் போட்டியிடும் தி.மு.க., துணை பொது செயலரும், செய்தி துறை அமைச்சருமான எம்.பி.சாமிநாதன், தி.மு.க., அமைச்சரவையில் உள்ள மூன்று 'ஒயிட் காலர்' அமைச்சர்களில் ஒருவர். அதாவது, களப்பணி செய்யாமல், கட்சியினரை கண்டுகொள்ளாமல் இருப்பவர். இவருக்கு எதிராக கட்சியில் அதிருப்தியும், உள்ளடி வேலையும் மிக அதிகமாக உள்ளது. தி.மு.க., சுற்றுச்சுழல் அணி மாநில செயலர் சிவசேனாபதி, திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலர் பத்மநாதன், இளைஞர் அணி நிர்வாகிகள் என ஒரு டஜன் நிர்வாகிகள் சாமிநாதனுக்கு எதிராக உள்ளடி வேலையில் ஈடுபடுகின்றனர். காங்கேயம் தெற்கு ஒன்றியம், நகராட்சி பகுதிகளில், தி.மு.க., பலவீனமாக இருக்கிறது.

அதேநேரம், அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜுக்கு கனிசமாக செல்வாக்கு இருக்கிறது. போதாகுறைக்கு கவுண்டர் ஜாதி சங்க நிர்வாகியான த.வெ.க., வேட்பாளர் மணி பிரிக்கும் ஓட்டுகள், சாமிநாதனுக்கு வேட்டாக அமையும் என்கின்றனர்.

தங்கம் தென்னரசு


விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்று, தற்போது நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு, மற்றுமோர் 'ஒயிட் காலர்' அமைச்சர். மாவட்ட செயலராகவும் இருக்கும் இவர், கட்சி நிர்வாகிகளுக்காக ஒரு துரும்பைகூட கிள்ளிப் போட்டதில்லை என்பது புகார். அரசு ரீதியாக நிர்வாகிகள் எதாவது உதவி கேட்டால், 'அச்சச்சோ... அதை நான் எப்படி செய்யமுடியும். தலைவர் தான் எல்லாமே பார்த்துக் கொளிறார்' என நழுவிவிடுவார். தேர்தல் வந்தால் மட்டும், நிர்வாகிகளை வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைப்பார். இந்த சூட்சமத்தை அறிந்த நிர்வாகிகள், பலரும் தேர்தல் வேலையில் ஈடுபடவில்லை. ஒத்துழைப்பே இல்லாததால், தனது சகோதிரி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தனது மனைவியை தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளார்.

காரியப்பாடி, நரிக்குடி, மல்லாங்கிணர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்றளவும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என, மக்களும் அதிருப்தியாக உள்ளனர்.

மறுபக்கம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜவர்மன் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். இதனால், அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் 'டீல்' பேசி வருகிறார் அமைச்சர். அந்த திட்டம் கைகூடாதபட்சத்தில், அவர் பெரும் பின்னடவை சந்திக்க நேரிடும்.

பழனிவேல் தியாகராஜன்


மதுரை மத்திய தொகுதியில் பி.டி.ஆர்., குடும்ப பின்னணி, ஐ.டி., துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பலமாக இருந்தது. ஊழலற்றவராக அறியப்பட்டார். ஆனால், மதுரை மாநகராட்சியில் நடந்த வரி ஏய்ப்பு ஊழலில், அவருடைய உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டது, அவருடைய பிம்பம் உடைய காரணமாகிவிட்டது. அதோடு, 'ஒயிட் காலர்' அமைச்சர்களில் மூன்றாதவராக அறியப்படும் இவர் மீது கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

எதிரணியில், புதிய நீதி கட்சியின் வேட்பாளராக, சினிமா இயக்குனர் சுந்தர்.சி.,யின் யதார்த்தமான பிரசாரம், தியாகராஜனை படுத்தி எடுக்கிறது. அதோடு, அவருக்காக, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நல்ல செலவு செய்வதாக கூறப்படுகிறது. தியாகராஜனோ, 'அப்படியெல்லாம் ஜெயிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை' என்று, எதிரணி செலவுக்கு ஈடுகொடுக்க மறுக்கிறார். இதுவே நீடித்தால், அவர் வெற்றிபெறுவது கேள்விக்குறியாகும் என்கின்றனர் உள்ளுர் தி.மு.க.,வினர்.

முன்னாளர் அமைச்சர்கள்


தி.மு.க., முக்கியஸ்தர்களின் நிலைமை இப்படியிருக்க, அ.தி.மு.க.,விலும் சில தலைவர்கள் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

காமராஜ்


திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ஊழல் புகார்கள், இளைஞர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன. தொடர்ந்து இருமுறை அமைச்சராக இருந்தும், தொகுதி வளர்ச்சிக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என, தொகுதிக்குள் அதிருப்தி இருந்தாலும், முக்குலத்தோர் சமூக செல்வாக்கால், தனது வெற்றியை உறுதி செய்து வந்தார். ஆனால், சசிகலாவின் 'ரீ எண்டரி' பெரும் தலைவலியாகி விட்டது. மறுபக்கம், தி.மு.க., கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ., களமிறங்கி இருப்பதால், சிறுபான்மையினர் உள்ளிட்ட இதர ஓட்டுகள், மொத்தமாக, முபாரக்குக்கே செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால், தோல்வி பயத்தில், வீதிவீதியாக பிரசாரம் செய்கிறார் காமராஜ். அதோடு, தாராளமாக செலவும் செய்து வருகிறார்.

சீனிவாசன்


திண்டுக்கலில் போட்டியிடும் 'திண்டுக்கல்' சீனிவாசனுக்கு எதிராக, முதல்முறையாக தி.மு.க., தரப்பில் இருந்து பலமான வேட்பாளராக, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பெ.செந்தில்குமார் போட்டியிடுகிறார். சீனிவாசனை வீழ்த்தினால் அமைச்சர் பதவி நிச்சயம் என தலைமை சொல்லி இருப்பதால், தீயாய் இறங்கி வேலை செய்கிறார்.

அதோடு, தொகுதியில் உள்ள முக்குலத்தோர் ஓட்டுகளை குறிவைத்து, சசிகலா, ராமு தேவரை வேட்பாளராக்கி உள்ளார். தற்சமயம் சீனிவாசனுக்கு சுய செல்வாக்கு, மட்டும் தான் பக்கபலமாக இருகிறது. ஆனால், செந்தில் குமாரின் பசை, சசிகலா பிரிக்கும் ஓட்டுகள் சீனிவாசனை பதம் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

ஆர்.பி.உதயக்குமார்


மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில், கடந்த முறை 14,000 ஓட்டு வித்தியாசத்தில் தான், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வெற்றிபெற்று இருந்தார்.

இம்முறை, எப்போதும் இல்லாத அளவுக்கு, தி.மு.க., மாவட்ட செயலர் மணிமாறன் செலவு செய்து, களத்தை கொஞ்சம் மாற்றி இருக்கிறார். முக்குலத்தோர் ஓட்டை நம்பியிருந்த உதயக்குமாருக்கு, லோக்கலில் சமூக செல்வாக்கு உள்ள, ஜீவிதா என்ற பெண் வேட்பாளரை நிறுத்தி, ஷாக் கொடுத்துள்ளார் சசிகலா. அதேபோல், கப்பலுார் சுங்கச்சாவடி போராட்டத்தை தவிர, உதயகுமாரும், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. இவையெல்லாம் சேர்ந்து, உதயகுமாரை உறங்கவிடாமல் செய்துள்ளன.

- மற்றவர்கள் -

செங்கோட்டையன்


த.வெ.க., நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் செங்கோட்டையனை, அவர் போட்டியிடும் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில், வீழ்த்தியே ஆகவேண்டும் என, அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறார். அங்கு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரபுவுக்காக தாரளமாக செலவு செய்து, செங்கோட்டையனுக்கு 'டப்' கொடுத்து வருகிறார். அதோடு, கோபியில் ஓட்டுக் கேட்டு போகும் இடத்தில், வயதானவர்கள் மத்தியில் 10ல் ஒருவர் செங்கோட்டையன் இன்னும் அ.தி.மு.க.,வில் இருப்பதாகவே நம்புகின்றனர். அதை மாற்றி, விசிலை மக்களிடம் கொண்டு செல்லவே போராடுகிறார். எனவே தான், ஆரம்பத்தில் விஜயின் பிரசார கூட்டங்களுக்கு சென்று கொண்டிருந்தவர், தற்போது தொகுதியை தாண்டி எங்குமே செல்லாமல் இருக்கிறார்.

நைனார் நாகேந்திரன்


தனக்கு திருநெல்வேலி பலவீனமாக இருந்ததால் தான் அங்கிருந்து, விருதுநகர் மாவட்டம், சாத்துாருக்கு மாறினார் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன். ஆனால், முக்குலத்தோர் ஓட்டுகளை பிரிக்க, சசிகலா தரப்பில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் இசக்கி ராஜா களம் இறக்கிவிடப்பட்டு உள்ளார். இவரை, நாகேந்திரன் 'கவனித்து'விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் போட்டியிடுவதாலேயே ஓட்டுக்களை கணிசமாக பிரிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நாகேந்திரனின் வருகையால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், தனது நாடார் சமூக ஓட்டை, அவருக்கு எதிராக திருப்பும் வேலையில் தீவிரமாக உள்ளார்.

வெளியூர்காரர் என்ற பிம்பமும் நயினாருக்கு எதிராக திரும்பி இருக்கிறது. தி.மு.க., வேட்பாளர் 'கடற்கரை' ராஜின் கை ஓங்கி உள்ளது. நயினார் மீது தி.மு.க., மேலிடத்துக்கு கரிசனம் இருந்தாலும், தொகுதிக்குள் இருக்கும், நாயக்கர், தேவேந்திர குல வேளார் ஓட்டுகள், நயினாருக்கு முழுமையாக விழவில்லையென்றால், அடுத்த தேர்தலுக்கு மீண்டும் வேறு தொகுதியை அவர் பார்க்க நேரும் என்கின்றனர் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்.

Advertisement