கொளத்துாரில் ஸ்டாலின் தோற்றது எப்படி? புலன் விசாரணையை துவக்கினார் துர்கா
சென்னை: கொளத்துார் தொகுதியில் ஸ்டாலின் தோற்றதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில், அவரது மனைவி துர்கா இறங்கியுள்ளார்.
சென்னை கொளத்துார் தொகுதியில், இரண்டு முறை வெற்றி பெற்ற ஸ்டாலின், 2021 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார். அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மூன்றாவது முறை அவர் வெற்றி பெற்றார்.
முதல்வர் தொகுதி என்பதால், பல்வேறு திட்டங்கள் கொளத்துார் தொகுதிக்கு கொண்டு வரப்பட்டன. பள்ளிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், முதல்வர் படைப்பகம், நுாலகம், பூங்காக்கள், ஏரிகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொளத்துார் தொகுதிக்கு மாதம் இரண்டு முறை சென்று, மக்களை சந்தித்து பேசினார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், நான்காவது முறை கொளத்துாரில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், ஸ்டாலின் தோல்வி அடைந்ததால், தி.மு.க.,வினர் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஸ்டாலின் குடும்பத்தினர் மத்தியிலும், அவரது தோல்வி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தோல்விக்கான காரணங்களை ஆராயும் பணியை, ஸ்டாலின் மனைவி துர்கா கையில் எடுத்துள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கொளத்துார் தொகுதியில் நடந்த பொங்கல் விழா, திருமண விழாக்கள் உள்ளிட்டவற்றில் துர்கா பலமுறை பங்கேற்றுள்ளார். அப்போது, தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள், சமூக நல அமைப்புகளில் உள்ள பெண்களிடம்அவர் பழகியுள்ளார்.
அந்த தொடர்பு வாயிலாக, ஸ்டாலின் தோல்விக்கு பின், 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் தலா, 10 நிமிடங்களுக்கு மேலாக துர்கா பேசியுள்ளார். அப்போது, தொகுதியில் நடந்தது என்ன; ஸ்டாலின் தோற்றது எப்படி என்ற கேள்விகளை, அவர் எழுப்பியுள்ளார்.
அப்போது பலரும், 'தொகுதியில் நடந்து வரும் சில பிரச்னைகள் குறித்து பலமுறை மனுக்களை, தங்களது வீட்டிற்கு அனுப்பினோம்; அதை வாங்கி படிக்காமலே குப்பையில் போட்டு விட்டதாக அறிந்தோம்.
'அப்போதே, அந்த கடிதங்களை எடுத்து படித்திருந்தால்' நடந்த விபரங்கள் தெரிந்திருக்கும். கட்சி நிகழ்ச்சிகளுக்கு வெளியில் இருந்து பெண்களை கூட்டி வந்து காட்டி, ஐந்து ஆண்டுகளாக ஸ்டாலின் ஏமாற்றப்பட்டார். தொகுதியில் தன்னார்வத்துடன் பணி செய்ய வந்த நிர்வாகிகளும் ஓரம்கட்டப்பட்டனர்.
'உதயநிதி தொகுதியில், 10க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வீடு வீடாக சென்று, தேர்தல் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதுபோன்று, இங்கு எதுவும் நடக்காதது தான் தோல்விக்கு காரணம்' என, பலரும் கூறியுள்ளனர்.
விசாரணைக்கு பின், தொகுதியில் உள்ள நிர்வாகிகள் பலரது தலைகள் உருளுவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்