பண பட்டுவாடா செய்வது எப்படி? மகளிருக்கு தி.மு.க.,வில் பயிற்சி
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக, அந்த பணியில் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த, தி.மு.க., வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, அந்த பணியை எப்படி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக, சில தினங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தலுக்கு, நான்கு வாக்காளர்கள் உள்ள குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாயும், அதற்கு மேல் இருந்தால் இரு கட்டங்களாக, தலா 2,000 ரூபாயும் வழங்க, தி.மு.க.,வின் பெரும்பாலான வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஒரு பூத்தில், 1,000 வாக்காளர்கள் இருந்தால், 700 பேருக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட உள்ளது. பணத்தை எப்படி வழங்க வேண்டும் என, தேர்தல் பணிமனைகளில் மகளிருக்கும் இளைஞரணியினருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, 'பூத்' வாரியாக பணத்தை கணக்கிட்டு, தங்களுக்கு வேண்டிய சிறிய கடைகள், நண்பர்களின் வீடுகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து, கட்சியின் இளைஞரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மகளிர் என, 10 - 12 பேரில் தலா ஒருவர், 25 குடும்பங்களுக்கான பணத்தை பெற்று, மகளிர் சுயஉதவி குழுக்களில் உள்ளோரிடம் வழங்குவர்.
பணத்தை பெறும் ஒவ்வொரு நபரும், ஒரு மணி நேரத்திற்குள் 25 வீடுகளுக்கு சென்று பணத்தை வினியோகம் செய்ய வேண்டும். பணத்துடன், வேட்பாளர் படம், சின்னம் அச்சிட்ட கட்சியின் துண்டறிக்கையை மட்டும் கையில் எடுத்துச்செல்ல வேண்டும்.
பணத்தை கொடுக்கும்போது, சிரித்த முகத்துடன், 'அந்த வேட்பாளர் வழங்கினார்' என்று மட்டுமே சொல்லி விட்டு, உடனே திரும்பிவிட வேண்டும்; வேறு எதுவும் பேசக்கூடாது. அடுத்த நாள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, நம் வேட்பாளருக்கு ஓட்டு போடும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.
இதனால், தேர்தல் அதிகாரிகளிடம் பிடிபட்டாலும், பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு குறைவு. பணம் பிடிபட்டாலும், 50,000 ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் என்பதால், பறிமுதல் செய்யவும் முடியாது.
வழக்கமாக ஒவ்வொரு வீட்டிற்கும் பணப்பட்டுவாடா செய்யும் பணிக்கு, இளைஞர்களை மட்டும் தான் வேட்பாளர்கள் ஈடுபடுத்துவர். ஆனால், த.வெ.க.,வுக்கு இளைஞர்களிடம் ஆதரவு இருப்பதால், பணப்பட்டுவாடா செய்யும் தி.மு.க., இளைஞர்களுடன் அவர்கள் தகராறு செய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, இந்த முறை பணப்பட்டுவாடாவுக்கு பெரும்பாலும் மகளிரை ஈடுபடுத்த உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்