தலை சுமையாய் கத்தரிக்காய் விற்றவன் நான்: துரைமுருகன்
வேலுார்: ''நான் தலை சுமையாக கத்தரிக்காயை சுமந்து விற்றவன்,'' என , அமைச்சர் துரைமுருகன் தன் தொகுதி மக்களிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன், தி.மு.க., வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்குட்பட்ட பொன்னை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான். என் கிராமம், மலையை ஒட்டியுள்ள காங்குப்பம் கிராமம். காலையில் எழுந்து, ஏர் ஓட்டி இருக்கிறேன்; மிளகாய், கத்தரிக்காய் பறித்திருக்கிறேன்; வெண்டைக்காய் உடைத்து இருக்கிறேன்.
மேலும், கத்தரிக்காயை பறித்துக் கொண்டு தலையில் சுமந்து, கே.வி.குப்பம் வரை சென்று விற்பனை செய்திருக்கிறேன்.
என் அம்மா, கழுத்து நிறைய நகைகள் அணிந்து இருந்தார்; விவசாய தேவைகளுக்காக, நகைகளை ஒன்றன் பின் ஒன்றாக கழற்றி விற்றார்; கடைசியாக காதிலும், மூக்கிலும், நகை இல்லாமல், துடைப்ப குச்சி சொருகி இருந்தார். அதை பார்க்கும்போது, அம்மா உங்களுக்கு இப்படி ஒரு நிலையா? அப்படின்னு அழுதேன்.
பின், நான் அமைச்சர் ஆன பிறகு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்து கொடுத்தேன். இப்போது, விவசாயிகள் மின்சாரத்தை இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு எது தேவையோ, அதை பார்த்து பார்த்து செய்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே, கடந்த தேர்தலின்போதும், 'இது தான் எனக்கு கடைசி தேர்தல்' என துரைமுருகன் உருக்கமாக பேசி, ஓட்டு கேட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்