Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தொழில் நகரமாக மாற்றுவேன்! தி.மு.க., கூட்டணி வேட்பாளர் உறுதி

 தொழில் நகரமாக மாற்றுவேன்! தி.மு.க., கூட்டணி வேட்பாளர் உறுதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் நித்தியானந்தன், இறுதி கட்ட பிரசாரம் செய்தார். நகர பொறுப்பாளர்கள், நவநீதகிருஷ்ணன், அமுதபாரதி, நகராட்சி தலைவர் சியாமளா மற்றும் கவுன்சிலர்கள் செந்தில்குமார், சாந்தலிங்கம், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, தேர்நிலையத்தில் நிறைவு செய்தனர்.

தி.மு.க., கூட்டணி வேட்பாளர் நித்தியானந்தன் பேசியதாவது:

பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள், வாழ்வாதாரம் மேம்படணும்; தொழில் செய்வோர், தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பட வேண்டும். சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். தென்னை நார் தொழிலில் உள்ள சிக்கல்களை களைந்து லாபகரமாக மாற்ற வேண்டும்.

ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் நிறைவேற்ற கேரளா அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும். இங்கு அதிகம் வாழும் நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கவும்; நெசவாளர் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொள்ளாச்சி பகுதிஇளைஞர்கள், தொழில் துவங்க, வேலைக்கு செல்ல வெளியூர் செல்கின்றனர். கடந்த, 30 ஆண்டுகளாக இங்கு தொழில் துவங்க சூழல் ஏற்படுத்த தவறவிட்டோமோ என்ற எண்ணம் உள்ளது. இங்கு தொழில் துவங்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சூழல் பாதிக்காத தொழில்களை கொண்டு வருவேன். இளைஞர்கள் கையெழுத்து ஆட்டோகிராப்பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து முன்னேற வேண்டும்.

பெண்கள், வீட்டில் இருந்தபடியே தையல் போன்ற தொழில்களை கற்று சுயமாக சம்பாதிக்க முயற்சிகளை எடுப்பேன். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் முன்னேறினால் மட்டுமே ஒரு பகுதி முன்னேற்றம் அடையும். வெறும் பாலங்கள், ரோடுகள் போடுவது மட்டும் வளர்ச்சியல்ல.

பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விரைவாக முடித்து, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வேன். நான் மக்கள் சேவையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன்; அரசியலை சேவையாக செய்வேன். எனக்கான தேவையை, பொது வாழ்வில் இருந்து பூர்த்தி செய்து கொள்ள மாட்டேன்.

கொடுக்கும் கரங்களாக இருக்க வேண்டுமே தவிர; எடுக்கும் கரங்களாக இருக்க கூடாது. என்னை தேர்வு செய்யும் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மாட்டேன். பொள்ளாச்சியை தொழில் நகரமாக மாற்றுவேன்.

இவ்வாறு, பேசினார்.

Advertisement