Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அதிமுக கூட்டணி வென்றால் பாஜ முதல்வர் வந்து விடுவார் : சொல்கிறார் கெஜ்ரிவால்

அதிமுக கூட்டணி வென்றால்  பாஜ முதல்வர் வந்து விடுவார் : சொல்கிறார் கெஜ்ரிவால்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : ''அதிமுக கூட்டணி வென்றால், பாஜ முதல்வர் வந்து விடுவார்,'' என, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சென்னை வந்துள்ள அவர் அளித்த பேட்டி:திமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, சென்னை வந்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு கால திமுக, ஆட்சியில், தமிழகம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்கள், இந்தியா முழுதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரசாரத்தின்போது, தமிழக மக்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றனர். தமிழக மக்கள், பாஜ மீது வெறுப்புடன் உள்ளனர். அதனால், அதிமுக வழியாக தமிழகத்திற்குள் பாஜ நுழையப் பார்க்கிறது. தமிழக மக்கள் நிச்சயம் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். அதிமுக கூட்டணி வென்றால், பீஹாரைப் போல, தமிழகத்திலும் பாஜவைச் சேர்ந்தவர் முதல்வராகி விடுவார்.

திமுக அரசை, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜவினர் குறை கூறுகின்றனர். பாஜ ஆளும் மாநிலங்களில் மோசமான ஆட்சி நடக்கிறது; முதலில் அதை சரி செய்யட்டும். முதல்வர் ஸ்டாலின் மீது, தமிழக மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர்.

கடந்த 2021ல் பெற்றதை விட, அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும். 'இரட்டை இன்ஜின் அரசு' என, பிரதமர் மோடி பேசுகிறார். இரட்டை இன்ஜின் ஆட்சி நடக்கும் பாஜ ஆளும் மாநிலங்களில் தான் ஊழல் அதிகமாக நடக்கிறது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். தமிழக சட்டசபை தேர்தலில், விஜயின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என, நான் நினைக்கவில்லை. 'இண்டி' கூட்டணியில் நான் இல்லை. ஆனாலும், தமிழகத்தில் திமுகவுக்காக, வரும் காலங்களிலும் பிரசாரம் செய்வேன்.

தமிழகத்தில் பாஜ இடம்பெறும் கூட்டணி வென்றால், மக்கள் நலத் திட்டங்களை முடக்கி விடுவர். பாஜவின் பிடியில் அதிமுக உள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement