தமிழகத்தில் வளர்ச்சி இருக்கிறது; வேலை இருக்கிறதா?
தங்களது ஆட்சியில், தமிழகத்தின் ஜி.டி.பி., ஆண்டுக்கு 11.19 சதவீதம் வரை வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்றும், கடந்த ஐந்தாண்டுகளில், இங்கு 3.35 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்துள்ளன என்றும் தி.மு.க., பெருமை பேசி பிரசாரம் செய்கிறது. ஆனால், தமிழகத்தில் வேலை செய்யும் வயதில் உள்ள ஐந்து கோடி பேருக்கு இது போதுமா?
தொழில் துறை வளர்ச்சியிலும், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழகம் சிறந்த மாநிலமாக, தி.மு.க., ஆட்சியில் மட்டும் அல்ல நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
இதனால், நாட்டில் எப்போதெல்லாம் பொருளாதார வளர்ச்சி சூழல் உருவாகிறதோ, அப்போதெல்லாம், அதில் ஒரு கணிசமான பகுதி தமிழகத்தில் ஏற்படுகிறது. வளர்ச்சி கணிசமாக இருந்தாலும், பல்வேறு துறைகளில் வேலை செய்வோரின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை என்றே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2012ல், தமிழகத்தின் வேலைவாய்ப்பில், 43 சதவீதமாக இருந்த விவசாயத்தின் பங்கு, 2025ல் 22 சதவீதமாக குறைந்துவிட்டது.
இன்றைய நிலையில், தமிழகத்தில் ஏதேனும் ஒரு வேலை செய்வோரில், ஐ.டி., துறையில் - 30 சதவீதம், கார் உற்பத்தியில் -18 சதவீதம், எலக்ட்ரானிக்ஸ் துறையில் -10 சதவீதம், ஜவுளி துறையில் -10 சதவீதம், கட்டுமானம் உள்ளிட்ட மற்ற துறைகளில் மீதமுள்ளோர் வேலை செய்கின்றனர்.
இவர்களில், முறையான வேலையில் -20 சதவீதம், முறைசாரா வேலையில் -80 சதவீதம் பேர் உள்ளனர். அரசு வேலையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.
அரசு வேலை தவிர்த்து மற்றவர்களுக்கெல்லாம் போதுமான வருமானம் கிடைக்கிறதா?
திருத்தி அமைக்கப்பட்டிருக்கும் தொகுப்பூதிய சட்டம், குறைந்தபட்ச ஊதியத்தை கணிக்க சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றின் அடிப்படையில், என் கணிப்பின்படி, தமிழகத்தில், குறைந்தபட்ச ஊதியமாக ஒரு நபருக்கு மாதம் 24,550 ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால், மொத்தத்தில் 25 சதவீதம் பேருக்கு கூட இத்தொகை கிடைப்பதில்லை.
சுய வேலைவாய்ப்பு பெற்றவர்களாக கருதப்படும் ஆட்டோ, ஓலா, ஊபர் ஓட்டுநர்கள், ஸ்விக்கி, ஜொமட்டோ தொழிலாளர்கள்; பிற தினக்கூலி தொழிலாளர்கள், நான்கில் ஒருவருக்கு தான் வாரம் முழுதும் வேலை கிடைக்கிறது. இவர்களுக்கு 24,550 ரூபாய் என்பது நிச்சயம் கிடைப்பதில்லை.
படித்த இளைஞர்களாலும் 24,550 ரூபாய் சம்பாதிக்க முடிவதில்லை. இவர்களில் பலர், மாதம் 10,000 ரூபாயே சம்பாதிக்கின்றனர். இவர்கள் ஏன், எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் கூட, தனியார் மருத்துவமனைகளில் மிக குறைந்த சம்பளம் தான் பெறுகின்றனர்.
தகுதிக்கேற்ப வேலை இல்லாதது, குறைவேலை மற்றும் குறைந்த வருமானம் ஒரு பக்கம் இருக்க, வேலையின்மையும் கணிசமாக இருக்கிறது. மொத்த வேலையின்மை ஐந்து சதவீதம் தான் என்றாலும், 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் 12 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் இன்னும் கூடுதலாக இருக்கும். இவர்களுக்கும் இவர்களை சார்ந்து உள்ளோருக்கும் அரசு வழங்கும் மாதம் 1,000 ரூபாய் என்பது சற்றே ஆறுதலாக இருக்குமே ஒழிய, எந்த பிரச்னையையும் தீர்க்காது.
வருமானம், வேலை வாய்ப்பு மற்றும் வேலை இழப்பு அபாயம், மூன்றுமே முக்கிய பிரச்னைகள். குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில். யார் காலில் யார் விழுந்தனர், யார் யாருடைய அடிமை என்பதெல்லாம் பற்றி, தங்கள் பிரசாரங்களில் மும்முரமாக பேசி வரும் கட்சிகள், இந்த முக்கிய வாழ்வாதார பிரச்னைகளை பற்றி பேசவே இல்லை.
தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தாலும், அதி.மு.க., கூட்டணி ஆட்சி அமைத்தாலும்,
1 வருங்காலத்தில் முக்கியத்துவம் பெறக்கூடிய தொழில்கள் எவை என்று அடையாளம் கண்டு, அவற்றில் தொழில் பயிற்சி தர வேண்டும்
2 கல்வி, பெருமளவில் ஏட்டுக்கல்வியாக இருக்கிறது. தொழில் துறையின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. கல்வி முறையிலும் தரத்திலும் அதிரடி மாற்றங்களை கொண்டுவர வேண்டும்
3 கல்வியிலும் கல்வி நிறுவனங்களிலும் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்
4 கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதன் வாயிலாக, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்
5 சிறு குறு தொழில்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்
6 தொழில் செய்ய குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
7 நீண்டகால முதலீடுகளுக்கு பட்ஜெட்டில் அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும்
8 அரசு, கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில், ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. சில வகை பணிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை பாதிக்கின்றன. அதனால், இவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவற்றை செய்வதன் வாயிலாக, வேலை வாய்ப்புகளை குறுகிய காலத்தில் அதிகரிக்க முடியும். தாமதம் செய்தால், வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினராகும் வரை முன்னேற்றம் ஏற்படாது.
இலவசங்களும் உரிமை தொகையும் தற்காலிக நிவாரணங்களே. அனைவருக்கும் வேலை என்பது அரசுகளின் விருப்பத்தேர்வு அல்ல, அது கடமை. இங்கு, கடமையை புறந்தள்ளி, கவர்ச்சியில் கவனம் செலுத்தும் அரசியல் நடப்பது வருத்தத்திற்கு உரியது.
arukkutti.p@gmail.com
Advertisement
இந்த மாதிரி அனைத்து அரசியல் கட்சிகளும், மக்கள், நாடு முன்னேற்றம் அடைய, நீண்ட கால திட்டம் வைத்து செயல் பட வேண்டும்.
மத்திய மாநில அரசு சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலைத்த வளர்ச்சி அடைய அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும். சிறந்த பதிவு.
கோடி கல்விக்கடன் வாங்கி ஐந்தரை ஆண்டுகள் படிப்பு பயிற்சிக்குப் பின் மருத்துவர்களுக்கும் அரசு வேலையில்லை. பணியிடங்கள் காலியில்லை என அமைச்சரே கூறுகிறார். அதனால் தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது 1000 ₹ அன்றாட சம்பளத்தில் 12 மணிநேர இரவுப் பணி புரிகின்றனர். உணவுக்கே செலவாகிவிடுவதால் பகுதி நேர டாக்சி ஆட்டோ ஓட்டுனர் வேலையும் பார்க்கின்றனர். இதெல்லாம் வளர்ச்சி என முதல்வர் பெருமைப்படுகிறார்.
ஒரு செட்டிநாட்டு விஞ்ஞானியின் குரல்.
தமிழ் நா ட்டின் பொருளாதார வளர்ச்சி..
முதலில் தொழில் முனைப்புடன் கல்வியை இளைனர்களுக்கு கொடுக்கவேண்டும்
கடந்த 20 வருடங்களில் வெறுமனே கம்ப்யூட்டர் மற்றும் வளர்ச்சியினை கலிநிலை உள்ளது. மாணவர்களும் சட்டையில் ஆளுக்கு படியாத கம்ப்யூட்டர் தொழில்களை விரும்புகின்றனர்.
அனைவரும் மருத்துவர் ஆகவேண்டுமென நீட் தேர்விற்கு தாயாகின்றனர். அனைவரும் டொக்டர் ஆகிவிட்டால் சாப்பாடு எப்படி கிடைக்கும்
தற்போதுள்ள பொறியியல் கல்லூரிகளில் சம்பந்தமே இல்லாத வற்றை கற்பிக்கின்றனர்.
எத்துணை பேருக்கு போல்ட் ஸ்க்ரூ வித்தியாசம் தெரியும்
தயவு செய்து ஒரு ஒரு வருடமும் மாணவர்களுக்கு தொழில் கல்வியில் டிரைனிக் கொடுக்கவேண்டும்
பகுதி வாரியாக, விவசாயிகளின் பிரச்சினையை உடனடியாக எப்படி தீர்ப்பது என்று, தனியார் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் கொடுத்து, தீர்வை பெறுங்கள்.
உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துங்கள். விவசாயம் செழிக்கும்.
இது கம்ப்யூட்டர் ரோபோட் உலகம். தொழில் சாலைகளில் இயந்திரங்கள் ரோபோட் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான வேலைகள் மனிதர்களிடமிருந்து பறிபோய்விட்டது.
.இளைஞர்கள் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு ஏராளமான வாய்ப்புகளை கல்வி மருத்துவம் பொருளாதாரம் உற்பத்தி ஆகிய துறைகளில் உருவாக்கும்.
விவசாய வேலை வாய்ப்புகள் குறைந்து மற்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருகுவது பொருளாதார வளர்ச்சியின் அடையாளம் தானே. விவசாய பொருட்களின் உற்பத்தி வளர்ந்து கொண்டு தானே இருக்கிறது?
வேலைவாய்ப்பு என்பதை நடைமுறை சாத்தியக் கூறுகளுடன் அணுக வேண்டும். போதிய வேலை வாய்ப்பு இல்லை என்றால் வெளி மாநிலத்தவர்கள் கூலி வேலை மட்டுமல்லாது ரயில்வே போன்ற நிறுவனங்களில் கூட எப்படி உள்ளே நுழைந்து விட்டனர் என்று யோசிக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது மட்டுமே தான் உண்மை. 1990கள் வரை கூட நிலவிய வேலை இல்லா திண்டாட்டத்தோடு ஒப்பிடுகையில் 2010களின் வளர்ச்சி பிரமாண்டமானது. ஆனால் அதே வளர்ச்சியை ஒவ்வொரு வருடமும் எதிர் பார்க்க முடியுமா? 1991ல் நரசிம்ம ராவ் ஏற்படுத்திய திருப்புமுனைக்கு 10 வருடங்கள் கழித்து வாஜ்பாய் காலம் மேலும் ஒரு பத்தாண்டு கழித்து மோடி அவர்கள் பொருளாதாரத்தை அணுகுவதில் வித்தியாசம் என திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன. நடந்த நல்லவைகளை நினைவூட்டி மக்களை உற்சாகப் படுத்த வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தினாலும் வேலைவாய்ப்பை அதே அளவு உயர்த்தாது என்பது தான் உண்மை.
இது அகில இந்திய அளவிலும் இதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு விதிவிலக்கு அல்ல!