Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தி.மு.க., செய்த தப்பு 'டாப்ஸ்'

தி.மு.க., செய்த தப்பு 'டாப்ஸ்'

வேலங்குடி முரளி, news teas tall@gmail.com


தமிழக அரசு, 23 ஆண்டுகள் அமலில் இருந்த பங்களிப்பு ஓய்வூதிய முறையை மாற்றி, அரசு ஊழியர்களுக்காக 'டாப்ஸ்' எனப்படும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது.

கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இன்று வரை முழுமையாக செயல்பாட்டிற்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், இது தங்களுக்குப் பலன் தருமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறியோடும், அரசு மீது அதிருப்தியோடும் அரசு ஊழியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

வாக்குறுதி

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கை.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி எண் 309ல், 'பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை நம்பி, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் கடந்த நான்கரை ஆண்டுகளாக அந்த வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 2024 லோக்சபா தேர்தலிலும், 'மத்தியில் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்' என்ற புதிய வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மாநில அரசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு விஷயத்தை, மத்திய அரசின் மீது பழிபோட்டு ஓட்டு அறுவடை செய்ததாக ஊழியர்கள் அப்போதே அதிருப்தி அடைந்தனர்.

தற்போது 2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், மத்திய அரசு, யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியதை தொடர்ந்து, அதே திட்டத்திற்கு 'டாப்ஸ்' என பெயர் மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏன் எதிர்க்கின்றனர்?

உறுதியான ஓய்வூதியம் வழங்கும் திட்டம் என அறிவிக்கப்பட்ட டாப்ஸ், நடைமுறையில் பல நிபந்தனைகளால் கட்டப்பட்ட ஒரு 'கலப்பு மாடலாகவே' இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவான சில சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு இனிப்பு ஊட்டினாலும், பொதுவான அரசு ஊழியர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்க ஐந்து காரணங்கள் உள்ளன.

5 காரணங்கள்

10% பிடித்தம் தொடர்கிறது


பழைய ஓய்வூதிய திட்டத்தின் மிகப்பெரிய பலமே, ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து ஓய்வூதியத்திற்காக எந்தவொரு தொகையும் பிடிக்கப்படாது என்பது தான். அரசு தான் முழு பொறுப்பையும் ஏற்கும்.

ஆனால் 'டாப்ஸ்' திட்டத்தில், தற்போதைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளதை போலவே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் பிடித்தம் தொடரும். எங்கள் பணத்தைப் பிடித்து, அதிலிருந்தே எங்களுக்கு ஓய்வூதியம் தருவது எப்படி பழைய ஓய்வூதியத்திற்கு இணையாகும்? என்பது ஊழியர்களின் முதல் கேள்வி.

30 ஆண்டுகள் பணிக்கால நிபந்தனை


'டாப்ஸ்' திட்டத்தின் கீழ், கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை, முழு ஓய்வூதியமாக பெற வேண்டும் என்றால், ஒருவர் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அரசு பணியில் இருந்திருக்க வேண்டும். தற்போதைய சூழலில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் தாமதம் போன்ற காரணங்களால் பலரும் 28 முதல் 35 வயதில்தான் அரசு பணிக்கு வருகின்றனர். 60 வயதில் ஓய்வுபெறும் இவர்களுக்கு 30 ஆண்டு பணிக்காலம் நிறைவடையாது. எனவே, அவர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைக்காது. பணிக்காலத்திற்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் குறைக்கப்பட்டு வழங்கப்படும்.

3.ஓய்வூதிய தொகுப்பு மறுப்பு


பழைய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வுபெறும் போது தமது ஓய்வூதியத்தில் 40 சதவீதம் வரை 'கம்முடேஷன்' முறையில், பல லட்சம் ரூபாயை மொத்தமாக எடுத்துக் கொள்ள முடியும். இது ஊழியர்களின் பிள்ளைகள் திருமணம், வீடு கட்டுதல் போன்ற பெரிய செலவுகளுக்கு உதவியாக இருக்கும். ஆனால், 'டாப்ஸ்' திட்டத்தில் இந்த வசதி இல்லை.

4.கார்பஸ் நிதி சிக்கல்


கடந்த 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள், இதுநாள் வரை செலுத்திய பங்களிப்பு தொகையும், அதற்கான அரசின் பங்களிப்பும் ஒரு பெரும் நிதி தொகுப்பாக சேர்ந்துள்ளது. இப்போது 'டாப்ஸ்' திட்டத்திற்கு மாறினால், அரசு செலுத்திய பங்களிப்பு தொகையை, அரசிடமே ஊழியர்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் அல்லது அரசின் கணக்கிற்கு அது சென்றுவிடும் என்ற நிலை உள்ளது. இது, ஊழியர்களின் இத்தனை கால சேமிப்பை பறிக்கும் செயல் என அவர்கள் வாதிடுகின்றனர்.

5.பொது வருங்கால வைப்பு நிதி இல்லை


பழைய முறையில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி வசதி, ஊழியர்களுக்கு பாதுகாப்பான வட்டியும், தேவைப்படும்போது கடன் பெறும் வசதியையும் அளித்தது. 'டாப்ஸ்' திட்டத்தில் அந்த வசதி மீண்டும் கொண்டுவரப்படவில்லை.

ஒப்பீடும், முரண்பாடும்

ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் எந்த நிபந்தனையுமின்றி பழைய ஓய்வூதிய திட்டமே மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாத ஒன்றைப்போல ஏமாற்று நாடகம் நடக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுபெறுகிறது.

'என்ன தான் வான்கோழி தன் சிறகை விரித்து ஆடினாலும், அது கான மயிலாக முடியாது' என்ற பழமொழியை போல, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கூறுகளையே வைத்துக் கொண்டு, அதற்கு 'டாப்ஸ்' என பெயரிடுவதால் அது பழைய ஓய்வூதிய திட்டமாக மாறிவிடாது.

நான்கரை ஆண்டுகள் தாமதத்திற்கு பின், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அரைகுறை திட்டத்தை அரசு ஊழியர்கள் ஒருமனதாக நிராகரிக்கின்றனர். அவர்கள் ஓட்டு, தி.மு.க.,விற்கு எதிராக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

Advertisement

ஏப் 15, 2026 04:46 pm

பழைய ஓய்வூதியத்திட்டம் அரசை திவாலாக்கிவிடும். உதாரணம் : ஹிமாச்சல் . தற்பொழுது மக்களின் சராசரி உயிர் வாழும் வயது 67 ஐ தாண்டிவிட்டது. ஒரு வழி பதவிக்காலத்தை 70 வயது வரை உயர்த்துவது. அது வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். ஊழியர்களின் வேலைத்திறனும் குறையும். வயதான ஊழியர்களின் சம்பளமும் அதிகமாக இருக்கும். இதை எந்த அரசும் தாக்கு பிடிக்க முடியாது.

Reply Rate this
ஏப் 15, 2026 12:39 pm

பழைய ஓய்வூதியர் 1989ல் ரிடையர்டு ஆகி உள்ளார் 34வருடங்கள் ஓய்வூதியம் பெற்று 2023ல் இறந்து போனார் அவரது மனைவி 2026வரை மூன்று வருடங்கள் ஓய்வூதியம் பெற்று ஜனவரி மாதம் இறந்து போகிறார் அவர்களது விதவை மகள் 45வயது தற்போது ஓய்வூதியம் கேட்கிறார் மாதம் 7500ரூ வருடம் 90000 நாற்பது வருடங்களுக்கு தந்தால் அரசு நிறுவனம் திவால் ஆகாமல் என்ன செய்வது

Reply Rate this

ஒருவகையில் பார்த்தா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திருடர்கள் முன்னேற்ற கழகம் செய்தது வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது மற்றும் தேர்தலில் அவர்களை நிராகரிக்கவேண்டியது என்றாலும், அரசு ஊழியர்களின் அட்டூழியமும் தாங்கமுடியாத அளவுக்குத்தான் இருக்கிறது . ... ஒழுங்காக நேரத்துக்கு அலுவலகம் வராதது , முடிக்கவேண்டிய செயல்களை வேண்டுமென்ற தாமதப்படுத்துவது, சம்பளம் வாங்கிக்கொண்டு, மக்களுக்கு செய்யவேண்டிய வேலைகளை லஞ்சம் கொடுத்தால்தான் செய்வது, மற்ற வெளி வேலைகளை அலுவலக நேரத்தில் செய்வது என்று மிகவும் அக்கிரமான காரியங்களை சற்றும் வெட்கமேயில்லாமல் செய்துகொண்டிருக்கும் அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் ஒன்றுதான் குறைச்சல் .... ஓய்வு பெற்றபின்னும் நோகாமல் நொங்கு தின்ன ஆசைப்பட்டு, எல்லா செலவுகளையும் அரசின் மேல் திணிக்கப் பார்க்கும் இவர்களின் இப்படிப்பட்ட கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படவேண்டும் . ..... ஆனால் , அதை செய்வதாக சத்தியம் செய்துவிட்டு ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திருடர்கள் அறவே நீக்கப்படவேண்டும் . ...

Reply Rate this
ஏப் 15, 2026 07:06 am

தி.மு.க வின் 8000 ரூ டோக்கன் திட்டம் போன்றதுதான் அரசு ஊழியர்களுக்கான இந்த டாப்ஸ் பென்சன் திட்டமும். படிக்காத பாமரர்களுக்கும், நன்கு படித்த அரசு ஊழியர்களுக்கும் ஒரே நேரத்தில் அல்வா!என்ன ஒரு தெறம!

Reply Rate this
இதுதான் திராவிட மாடல் அரசு
ஏப் 17, 2026 02:17 am
Rate this