Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மூணு வருஷமாச்சு.. ஒண்ணும் நடக்கல: த.வெ.க.,வில் விரக்தி

மூணு வருஷமாச்சு.. ஒண்ணும் நடக்கல: த.வெ.க.,வில் விரக்தி

'கட்சி துவங்கி மூன்று ஆண்டுகளில், ஒரு நிகழ்ச்சியை கூட முழுமையாக முடிக்கவில்லை' என, த.வெ.க., நிர்வாகிகள் குமுறுகின்றனர்.


இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: த.வெ.க.,வின் முதல் பூத் கமிட்டி மாநாடு, கோவையில் கடந்த 2025 ஏப்ரல் 26ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து, எல்லா மண்டலங்களிலும் இது போன்ற மாநாடு நடக்கும் என அறிவித்தது தலைமை. ஆனால், இன்று வரை எந்த மண்டலத்திலும் பூத் கமிட்டி மாநாடு நடக்கவில்லை.

அதேபோல தான், ஐந்து மண்டலங்கள், 120 மாவட்டங்களில் கொள்கை விளக்க கூட்டம் நடத்த, கடந்த ஜூலையில் விஜய் உத்தரவிட்டார். ஆனால், சேலத்தில் மட்டும் தான் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இது போலத்தான் திடீரென, மக்கள் குறைதீர் விண்ணப்பங்கள் என, ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி, தலைமையிடம் கொடுத்தோம். ஆனால், அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.
கடந்த ஆண்டில், 'திங்கள்தோறும் தலைவர்' என, கீழ்மட்ட நிர்வாகிகளுடன் திங்கள் கிழமை தோறும் விஜய் பேச உள்ளதாக, ஒரு திட்டத்தை அறிவித்தனர். இது நாள் வரை, ஒரு திங்கள்கூட விஜய் பேசவில்லை.
இந்நிலையில், 'தலைமை நிர்வாகிகள் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் வருவர்' என, ஜனவரி 21ல் அறிவித்தனர். ஆனால், ஒரு தொகுதிக்குக்கூட தலைமை நிர்வாகிகள் வரவில்லை. மாவட்டந்தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடக்கும் என்றனர்; சென்னையில் மட்டும் தான் நடந்திருக்கிறது.
விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பும் அந்தரத்தில் நிற்கிறது. ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த வேலைக்கான உத்தரவு வரும். இப்படி கட்சி துவங்கி, மூன்று ஆண்டுகளில் இதுவரை எந்த அறிவிப்பையும் முழுமையாக செய்ததே இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement