மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளது; தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி மகிழ்ச்சி
புதுடில்லி: மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பாஜ அறுதி பெரும்பான்மை தொகுதிகளை வென்று முதல் முறையாக ஆட்சியை பிடித்து இருக்கிறது. இந்த வெற்றியை மேற்கு வங்கத்தில் உள்ள பாஜ தொண்டர்கள், நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றி செய்தியை அறிந்த பிரதமர் மோடி டில்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகம் வந்தார். அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்து பேசிய அவர், வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் கூடியிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது;
இந்நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். பல ஆண்டுகால உழைப்பு இன்றைக்கு வெற்றியாக மாறி இருக்கிறது. உங்கள் முகங்களில் இங்கு நான் கண்டுள்ள மகிழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள பாஜ தொண்டர்கள் முகத்திலும் நான் காண்கிறேன்.
மேற்கு வங்கத்தில் கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகம் மற்றும் அரசியலைப்பின் வெற்றியாகும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது ஒரு பகுதி மட்டுமே. ஆனால் 5 மாநில தேர்தல்கள் மூலம் ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை மக்கள் நிரூபித்து இருக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்து இருக்கிறது. புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி. தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு தலைவணங்குகிறேன். லட்சக்கணக்கான பாஜ தொண்டர்களுக்கு நன்றியையும் கூறிக் கொள்கிறேன். அவர்கள் தாமரையை மலர வைத்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் முடிவுகளும் பாஜவை ஊக்கப்படுத்துவதாக உள்ளன. மஹாராஷ்டிரா, குஜராத், நாகலாந்து,திரிபுரா மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மக்கள் பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆசீர்வதித்துள்ளனர். மேற்கு வங்கம் இனி பயத்தின் பிடியில் இருக்க வேண்டியது இல்லை.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்