Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அமித் ஷாவை சந்தித்த பழனிசாமி; பாதி வெற்றியடைந்த டில்லி பயணம்

 அமித் ஷாவை சந்தித்த பழனிசாமி; பாதி வெற்றியடைந்த டில்லி பயணம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

-- நமது நிருபர் -

கூட்டணி விவகாரங்கள் குறித்து பேச, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று காலை டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி தமிழகம் வந்து திரும்பிய மறுநாளே, பழனிசாமி டில்லி சென்றிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் இன்னும் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு பேச்சு துவங்கப்படவில்லை. எனினும், பா.ஜ., - அ.தி.மு.க., இடையே தலைவர்கள் மட்டத்தில் மறைமுக தொகுதி பங்கீடு பேச்சு நடந்து கொண்டு தான் உள்ளது.
அதன்படி, பா.ஜ., சார்பில் முதலில் 60 தொகுதிகள் ஒதுக்குமாறு அ.தி.மு.க.,விடம் கேட்கப்பட்டது. பேச்சுக்கு பின், தற்போது, 40 தொகுதிகளாவது கொடுங்கள் என, பா.ஜ., தரப்பு இறங்கி வந்தது; கூடவே, 40 தொகுதிகளுக்கான பட்டியலையும் கொடுத்தது. இது கூடுதல் என நினைக்கும் பழனிசாமி, இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இதற்கிடையில், பா.ஜ., தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொகுதி பங்கீடு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசுவதென முடிவெடுத்தார்.

இதையடுத்தே, நேற்று காலை சென்னையில் இருந்து டில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற பழனிசாமி, இரவு 9:15 மணிக்கு அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் தி.மு.க., அமைச்சர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பது, நடிகர் விஜயை, அரசியல் ரீதியில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வைப்பது, தொகுதி பங்கீடு விஷயத்தில், பா.ஜ.,வை இணக்கமாக நடந்து கொள்ள செய்வதற்கான கோரிக்கை உள்ளிட்டவை குறித்து அமித் ஷாவிடம் விளக்கமாக பேசியுள்ளார் பழனிசாமி.

அனைத்தையும் உடனடியாக செய்து கொடுப்பதாகக் கூறிய அமித் ஷா, தொகுதி பங்கீடு விஷயத்தில் கெடுபிடி காட்டி பேசியதாக அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறுகின்றனர்.

'கடந்த முறை தேர்தலின்போது, அ.தி.மு.க., எடுத்த முடிவுக்கு, கூட்டணி கட்சிகள் கட்டுப்பட்டன. ஆனால், அது பலனளிக்கவில்லை. 'அதனால், இம்முறை பா.ஜ., போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து, நாங்கள் கேட்டிருக்கும் தொகுதிகளை குறைக்க வேண்டாம். ஒருவேளை குறைக்க வேண்டியிருந்தால், கேட்கும் தொகுதிகளை கட்டாயம் வழங்க வேண்டும்.

'குறிப்பாக, தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்பும் தொகுதிகளை மறுக்காமல் அளிக்க வேண்டும்' என, பழனிசாமியிடம் அமித் ஷா கறாராக பேசி அனுப்பியதாகவும் இரு கட்சி வட்டாரங்களும் கூறுகின்றன. இதனால், 'பழனிசாமியின் டில்லி விசிட், பாதி வெற்றி; பாதி தோல்வி' என, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Advertisement