மாம்பழத்திற்குள் விஷம் ஏறிவிட்டது: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் காட்டம்
திண்டிவனம்: ''மாம்பழம் இனி இனிக்கும் என்று நம்பாதீர்கள்; அந்த சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது,'' என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.
தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவிக்கும் மரண வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும். அன்புமணி என் பேச்சை கேட்காமல், என் கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு, பணத்திற்காக அலைய தொடங்கியபோதே, ஒரு தந்தையாக நான் செத்துவிட்டேன். உங்களுக்காக நான் சிறை சென்றேன்; ரத்தம் சிந்தினேன். ஆனால் அந்த ரத்தத்தை, அன்புமணி இன்று சமூக நீதி வியாபாரமாக்கி விட்டார். தர்மபுரியில் சவுமியா வெற்றி பெற்றால், தர்மபுரி விரைவில் அதர்மபுரி ஆகிவிடும்.
முதல்வர் ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதி மறைவு வரை, கூடவே இருந்து கவனித்து கொண்டார். ஆனால், எனக்கு வாய்த்த பிள்ளையோ நான் உயிரோடு இருக்கும்போதே, நான் செத்து போனதாக நினைத்து அரசியல் செய்கிறார். இதைவிட ஒரு தகப்பனுக்கு பெரிய அவமானம் என்ன இருக்கும்?
மாம்பழ சின்னம் இனிக்கும் என்று, இனி நம்பாதீர்கள். அதில் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அன்புமணியின் துரோக கும்பலுக்கு ஓட்டு போடுவது, பெற்ற தகப்பன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம்.
இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்