தேர்தல் நேரத்தில் போலீசார் வன்மத்தை காட்டுகின்றனர்: மார்க்சிஸ்ட் புகார்
வேலுார் : தேர்தல் நேரத்தில், கம்யூ., கட்சியினர் மீது காவல்துறையினர் வன்மத்தை வெளிப்படுத்துவதாக மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எஸ்.எச்., எலக்ட்ரானிக் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக , மார்க்சிஸ்ட், தொழிற்சங்கமான சிஐடியுவின் துணை பொதுச்செயலர் முத்துகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் சந்தித்து பேசினார்.
பின் அவர் அளித்த பேட்டி: பன்னாட்டு, உள்நாட்டு நிறுவன நிர்வாகிகளுடன், காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கைகோர்த்து சி.ஐ.டி.யு.,வை ஒடுக்கும் நோக்கில் அடக்குமுறையை ஏவுகின்றன. தேர்தல் நேரத்தில், தங்கள் வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில், நிலுவையில் உள்ள பல ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட வழக்குகளில் எல்லாம் இவர்களை போலீசார் மீண்டும் மீண்டும் கைது செய்கின்றனர். அரசு வழக்கறிஞர், ஜாமீன் வழங்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை என எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்த பிறகும், மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்க மறுப்பது விந்தையாக உள்ளது.
லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு வாயிலாக, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.5 சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதமாகக் குறையும் அபாயம் உள்ளது. இதை எதிர்த்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுப்பதை மா. கம்யூ., வரவேற்கிறது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பெண்களின் ஓட்டுக்களை பெறுவதற்காகவே, மத்திய பா.ஜ., அரசு அவசர அவசரமாக தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்