Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பல்வேறு இடங்களில் சோதனை: கோடிக்கணக்கில் சிக்கியது பணம்

பல்வேறு இடங்களில் சோதனை: கோடிக்கணக்கில் சிக்கியது பணம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் குழு -

தமிழகம் முழுதும் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஒரே நாளில், பல கோடி ரூபாய் பணம் சிக்கியது.

பெரம்பலுார் மாவட்டம், செங்குணம் கிராமத்தில், ரேஷன் கடை அருகில், பறக்கும் படையினர் நேற்று இரவு, 11.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த 'ஸ்விப்ட் டிசையர்' காரை வழிமறித்து சோதனையிட்டதில், கார் டிக்கியில், ஐந்து அட்டை பெட்டிகளில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.

பணம் மற்றும் காரை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததுடன், காரை ஓட்டி வந்த கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்கிருஷ்ணன், 25, உடன் வந்த காரின் உரிமையாளரும், திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளருமான ஜெயராமன், 64, ஆகிய இருவரையும் பிடித்து, ஆர்டிஓ அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

அட்டை பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டுக்களை எண்ணி பார்த்தபோது, 2 கோடியே 49 லட்சத்து 95,000 ரூபாய் இருந்தது. அவை உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றது தெரிந்தது. வருமான வரித்துறையினர், ஜெயராமன், ராஜேஷ்கிருஷ்ணனிடம் விசாரிக்கின்றனர்.

* ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, செலம்பகவுண்டம்பாளையம் அருகே நேற்று இரவு, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அவ்வழியாக வந்த காரில், 89 லட்சத்து, 83,000 ரூபாய் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்து, காரை ஓட்டிய ஆனந்தம்பாளையத்தை சேர்ந்த அரவிந்த், 39, என்பவரிடம் விசாரிக்கின்றனர். இவர், மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதியின் உறவினர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி, அட்டகுறுக்கியை சேர்ந்த விவசாயி பசவராஜ், 65; அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 59.50 லட்சம் ரூபாய் சிக்கியது.
* திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், சங்கரன்கோவிலில், ஒரே நாளில், 16 லட்சம் ரூபாய், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடையநல்லுார் பகுதியில், தி.மு.க., பிரமுகர் செல்லத்துரை அலுவலகத்தில் நடத்திய சோதனையில், 44 லட்சத்து, 37,000 ரூபாய் பறிமுதலானது. தென்காசி நகர செயலர் சாதீர் வீட்டில், 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
* துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தனி தொகுதியில், அமமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏசுந்தர்ராஜ் போட்டியிடுகிறார். அவரது வீட்டில், 27 லட்சத்து, 65,000 ரூபாயை, பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். வீட்டின் அருகே கேட்பாரற்று கிடந்த, 20 லட்சத்து, 38,000 ரூபாயையும் கைப்பற்றினர்.
* நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து, கணக்கில் வராத, 22 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடலுார் தனி தொகுதியில், பறக்கும் படையினர், திமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயந்தி வீட்டில், 11.82 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* கோவை, வஉசி நகரில், வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்த திமுகவை சேர்ந்த சரத்குமார் மீது, பறக்கும் படையினர் வழக்குப்பதிந்து, 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
* ராமநாதபுரத்தில், திமுகவை சேர்ந்த ராஜா, மாணிக்கம், வாசுகி, உமாசங்கர், செந்தில்குமார், ரவி, இளங்கோவன், சத்யபாமா, வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, 4.30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
* சிங்காநல்லுார், ஒண்டிப்புதுாரில், அதிமுகவை சேர்ந்த கார்த்திகேயன் மீது வழக்குப்பதிந்து, 48,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது. பீளமேடு பகுதியில் திமுகவை சேர்ந்த தளபதி மீது, வழக்கு பதியப்பட்டு. 40,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

காரைக்குடியில் ரூ.15 லட்சம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு வந்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் வந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த 3 பேரை விரட்டி பிடித்தனர். அவர்கள் மணிகண்டன்(32), மாரிமுத்து(35), சாலமன்(33) ஆகியோர் பணம் கொடுத்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement