அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி: பழனிசாமி முடிவு; பா.ஜ., ஆதரவு
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க.,வின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை, த.மா.கா., தலைவர் வாசன் உட்பட நாடு முழுதும் காலியாகும் 37 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, மார்ச் 16ல் தேர்தல் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணிக்கு 158, அ.தி.மு.க., கூட்டணிக்கு 69 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதன்படி தி.மு.க., விற்கு நான்கு எம்.பி., பதவி , அ.தி.மு.க.,விற்கு இரண்டு எம்.பி., பதவிகளும் கிடைக்கும்.
2024 லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு, ராஜ்யசபா எம்.பி., தருவதாக அ.தி.மு.க., வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இப்போது தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்து விட்டது.
2019ல் அ.தி.மு.க., ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.,யான அன்புமணியின் பதவிக்காலம், 2025ல் முடிந்தது. ஜனவரி 7ல், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்தபோது, 17 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் அன்புமணி பேசியுள்ளார். இதையடுத்து, நான்கு எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பா.ஜ.,வும், அன்புமணிக்கு எம்.பி., பதவி வழங்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் உள்ள த.மா.கா., தலைவர் வாசன், பிரதமர் மோடியுடன் நட்பில் இருப்பவர். அவரும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மீண்டும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரைக்கும், பா.ம.க., தலைவர் அன்புமணிக்கும் மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவிகள் வழங்க, பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்