நா.த.க.,வில் சீரமைப்பு அவசியம்; எதிர்பார்ப்பில் சீமான் 'தம்பி'கள்
- நமது நிருபர் -
''தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சியை, சீரமைக்கும் நேரம் வந்துவிட்டது,'' என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நா.த.க., மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த 2016 சட்டசபை தேர்தலில் இருந்து, நாம் தமிழர் கட்சி பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது; இதுவரை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் 8 சதவீத ஓட்டுகளை பெற்று, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. தேர்தலுக்கு தேர்தல் கட்சி வளர்ச்சி அடைவது போல் இருந்தாலும், அதன் கட்டமைப்பில் சரிவை சந்திக்கிறது.
பிற கட்சிகளை போல இல்லாமல், நா.த.க.,வில் ஒரு தொகுதிக்கு 12ல் இருந்து 18 மாவட்டச் செயலர்கள், 40 மாநில ஒருங்கிணைப்பாளர்கள், ஒரு மண்டல பொறுப்பாளர் என்ற கட்டமைப்பு இருக்கிறது. இது போக, ஒரு தொகுதிக்கு 100க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்.
கட்சியில் 9,000க்கும் மேற்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள், 2,800க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர் பதவிகள் உள்ளன. இப்படியான கட்டமைப்பு எந்த கட்சியிலும் இல்லை.
ஆனால், இதில் 40 சதவீத பொறுப்புகள் கூட நிரப்பப்படவில்லை. பொறுப்பில் இருப்போர் மத்தியிலும், உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது.
மாவட்ட நிர்வாகிகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாததால், நா.த.க., வலுவாக இருக்கும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கூட, ஓரளவுக்கு மேல் கட்சியால் வளர முடியவில்லை.
இதனால், நடந்து முடிந்த தேர்தலில், பல தொகுதிகளில் வேட்பாளரும், மண்டல பொறுப்பாளரும் மட்டும் தான் வேலை செய்தனர்.
கட்டமைப்பில் இப்படி பிரச்னை என்றால், வேட்பாளர் தேர்விலும் ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன. கட்சித் தலைவர் என்ற முறையில், வெற்றி வாய்ப்பு உள்ள எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் சீமான் போட்டியிடலாம்.
ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் வேட்பாளரை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அதிலும் குறிப்பாக, சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை வேட்பாளர் ஆக்காமல், பல நுாறு மைல் கடந்து, வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்துகிறார்.
மேலும், சமூக வலைதளங்களில் பலமாக இருக்கும் நா.த.க., இந்த தேர்தலில் த.வெ.க., தலைவர் விஜய் எதிர்ப்புக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தது.
அதனால் தான், தி.மு.க., - -அ.தி.மு.க.,வுக்கு மாற்று நா.த.க., தான் என்று நம்பி ஓட்டு போட்டவர்களை தக்கவைக்க முடியவில்லை.
குறிப்பாக தன்னை தவிர, கட்சியின் முகங்களாக மாவட்டத்துக்கு ஒருவரை கூட சீமான் வளர்த்து விடவில்லை. எல்லா இடங்களுக்கும் தன்னால் வர முடியாது என்ற கள நிலவரத்தை சீமான் புரிந்து கொண்டு, அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் தாண்டி, உள்ளாட்சி தேர்தலை சீமான் கண்டுகொள்வதே இல்லை. உள்ளாட்சி கட்டமைப்பில் இருந்தே கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கி வலுப்படுத்தினால் தான், ஓட்டு வங்கியை நிலைநிறுத்த முடியும்.
எனவே, இந்த தேர்தல் முடிவை அடிப்படையாக வைத்தாவது, கட்சியின் கட்டமைப்பில் மறுசீரமைப்பை உடனடியாக மேற்கொள்ள சீமான் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்